x-videos-740x431

அடல்ட் கண்டன்ட் படமான ஹர ஹர மகாதேவகி வசூலில் சக்கைப்போடுபோட, அதே டைப்பான படங்கள் அவசரகதியில் தயாராகத் தொடங்கிவிட்டன என்ற பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளநிலையில், ‘X வீடியோஸ்’ என்ற பெயரிலேயே ஒரு படம் தயாராகிறது என்று கேள்விப்பட்டதும் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி.

அந்தப் படத்தை இயக்கும் சஜோ சுந்தர், இயக்குநர் ஹரியிடம் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் உதவி இயக்குநராக வேலைபார்த்தவர் என்ற தகவல் அதிர்ச்சியை சற்றே குறைத்தது.

அதோடு, பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி, உன் சமயலறையில் படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் என்ற கூடுதல் தகவல் நம்மை கூலாக்கிவிட்டது.

அது மட்டுமல்ல இவர் தப்பான படத்தை எடுத்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்திய அதேநேரம், ‘X வீடியோஸ்’ என்று பலான படத்தைக் குறிக்கும் தலைப்பை தன்னுடைய படத்துக்கு சூட்டியது ஏன் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

நமது சந்தேகத்தை இயக்குநர் சஜோ சுந்தரிடம் கேட்டோம்..

‘X வீடியோஸ்’படம் குறித்தும், அதை எடுக்க வேண்டிய எண்ணம் தனக்கு ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் சற்றே விரிவாகப்பேசினார்..

“என்னுடைய முதல் படத்தை ஒரு கமர்ஷியல் படமாகத்தான் இயக்கவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் இப்போது X வீடியோஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளேன்.. இதை கிளுகிளுப்பான படம் என்று நினைத்துவிடவேண்டாம். இது விறுவிறுப்பான த்ரில்லர் படம். அதை சமூக விழிப்புணர்வுடன் கொஞ்சம் நையாண்டி கலந்து சொல்லியிருக்கிறேன்.

“எங்க அப்பா டைரக்டர்.. X வீடியோஸ் என்ற படம் எடுத்திருக்கிறார் என்று என்னுடைய பிரண்ட்ஸிடம் கூட சொல்லமாட்டேன் என்று என் பையன் கூட சொல்லிவிட்டான். ஏன் இந்த டைட்டிலை வைத்தீர்கள்.. எப்படி நாங்கள் இதை வெளியில் சொல்வது என என்னுடைய நண்பர்கள், படத்தில் வேலை பார்த்தவர்கள் பலரும் கேட்டார்கள்.

இது இளம்பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக எடுக்கப்பட்ட படம்.. குறிப்பாக கல்லூரி பெண்களை, குடும்ப பெண்களை இணையதள ஆபத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள படம் இது..

சரி இந்தப்படத்தை எடுக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு ஏன் ஏற்பட்டது..?

மொபைலில் ஆபாசப்படங்களை ரெகுலராக பார்க்கும் எனது நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரது மனைவியின் படமே ஒருநாள் இதுபோன்ற இணையதளத்தில் இடம்பெற்றிருந்ததை பார்த்து அதிர்ந்தேன்..

அவருக்கே தெரியாமல் படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோ எப்படி இணையதளத்துக்குள் வந்தது..? யாரால் படம்பிடிக்கப்பட்டது என்கிற ஆராய்ச்சியில் இறங்கியபோது பல அதிர்ச்சி கலந்த உண்மைகள் தெரியவந்தது..

நாம் ஆண்ட்ராய்டு மொபைல்களில் இலவசமாக சில ஆப்ஸ்கள் டவுன்லோடு செய்கிறோமே..? எப்படி அவன் நமக்கு இலவசமாக தருகிறான்.. அதனால் அவனுக்கு என்ன பிரயோஜனம்..? விஷயம் இருக்கிறது.. நாம் டவுன்லோடு செய்யும் பல ஆப்ஸ்’கள் இந்தக் ஆபாச இணையதளங்களுடன் கூட்டணியில் இருப்பவை தான்.

அதனால் அந்த ஆப்ஸ்’களை டவுன்லோடு செய்துவிட்டால் நம் மொபைலில் உள்ள நமது அந்தரங்க வீடியோக்கள் ஏதாவது இருப்பின், அவற்றை கண்டுபிடித்து இந்த ஆபாச இணையதளங்களுக்கு அவை அனுப்பி விடுகின்றன.

இதற்காக அந்த ஆபாச இணையதளங்கள் இந்த ‘ஆப்ஸ்’களுக்கு பணம் கொடுக்கின்றன. இன்றைய இணையதள உலகமே முக்கால்வாசி இந்த ஆபாச இணையதளங்கள் கொடுக்கும் பணத்தில்தான் இயங்கி வருகின்றன என்பது இன்னொரு அதிர்ச்சி கலந்த உண்மை.

அவ்வளவு ஏன்.. எங்கேயோ இருந்துகொண்டு உங்கள் மொபைலின் கேமராவை ஆபரேட் பண்ணும் அளவுக்கு டெக்னிகலாக இந்த கும்பல் வளர்ந்துவிட்டார்கள்.

தயவுசெய்து செல்போனை உங்க பெட்ரூமில் வைக்காதீர்கள். பாத்ரூமிற்குள் கொண்டுபோகாதீர்கள். நெருங்கியவர்களுடன் நெருக்கமாக இருக்கும் தருணங்களை வீடியோவாக எடுக்காதீர்கள்.

இந்த ஆபாச வீடியோக்களுக்கு பிறப்பு மட்டும் தான் உண்டு.. இறப்பு என்பதே இல்லை.. அதனால் இந்த ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்துவது மற்றும் தடைசெய்வதற்கான ஒரு முயற்சியாகத்தான் இந்தப்படத்தை எடுத்துள்ளேன்..

இந்த ஆபாச இணையதளங்கள் பற்றிய உண்மையை தெரிந்தவர்கள் ஒருசிலர் மட்டுமே.. தெரியாத அப்பாவி ஜனங்கள் பலபேர் இருக்கிறார்கள். அவர்களது கவனத்திற்கு இந்த ஆபத்தை பற்றி கொண்டுசெல்வதற்காகவே இந்தப்படத்தை எடுத்துள்ளேன்.

இது ஆபாசமான படமல்ல. ஆபாசமான உலகம் பற்றி நாகரிகமாகச் சொல்லும் படம். இதைத் தமிழிலும் இந்தியிலும் எடுத்திருக்கிறோம்.

சென்சாரில் ரிவைசிங் கமிட்டி போனபோது கமிட்டியில் இருந்த பிரபல இந்தி இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி படம் பார்த்து விட்டு துணிச்சலான முயற்சி, சமுதாயத்துக்குத் தேவையான படம் என்று பாராட்டினார். இந்த பாராட்டு எனக்கு கிடைத்த முதல் வெற்றி.’’

Comments

comments