Sivakarthikeyan

அஜித்தின் வெற்றிக்கும், அவருக்குக் கிடைத்த புகழுக்கும் அவரது திறமையும், உழைப்பும்தான் காரணம்.

இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ளாத அறிவாளி யாரோதான் இப்போது சிவகார்த்திகேயனுக்கு ஆலோசகராக இருக்கிறார் போலிருக்கிறது.

அவருக்கு தப்புத்தப்பாக ஆலோசனைகளைச் சொல்லி தவறான பாதையில் சிவகார்த்திகேயனை திருப்பிவிட்டிருக்கிறார்கள்.

சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் டிவியின் விசுவாசியாக மட்டுமே இருந்தார்.

அதனால் மற்ற மீடியாக்களை மதிக்காமல் மிதப்பிலேயே திரிந்தார்.

காலப்போக்கில் ‘சில பல பாடங்களை’ மீடியாக்கள் அவருக்கு கற்றுக் கொடுத்தன.

பிந்துமாதவியுடன் காதல் என்று வெளியான ஒரு செய்தி அவரது இல்லற வாழ்க்கையையே அசைத்துப்பார்க்க, மீடியாவின் பலம் என்ன என்பதையும், மீடியா என்பது விஜய் டிவி மட்டுமல்ல என்ற உண்மையையும் மிக தாமதமாக உணர்ந்தார் சிவகார்த்திகேயன்.

அதன் பிறகு மீடியாக்களுடன் நல்லுறவை பேணத் தொடங்கினார்.

அதனால் சிவகார்த்திகேயனுக்கு மீடியாக்களின் சப்போர்ட் கிடைக்க, மளமளவென உயர்ந்தார்.

எந்த ஒரு ஹீரோவுக்கும் சினிமாவில் இத்தனை சீக்கிரத்தில் இப்படியொரு இடமும், வாழ்க்கையும் கிடைத்ததில்லை என்கிற அளவுக்கு குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வாழ்க்கை சிவகார்த்திகேயனுக்கு வசப்பட்டது.

இதற்கு அவரது திறமை, உழைப்பு, திட்டமிடல் காரணம் என்றாலும், இன்னொரு பக்கம் மீடியாக்கள் அவருக்குக் கொடுத்து வரும் பில்ட்அப்பும், முக்கியத்துவமும் முக்கியமான காரணங்கள்.

இதை இத்தனை சீக்கிரத்தில் சிவகார்த்திகேயன் மறந்ததுதான் அதிர்ச்சியும்… வேதனையும்….

“நாம் மிகப்பெரிய உயரத்தை எட்டிவிட்டோம்… இனி நமக்கு யாருடைய தயவும் தேவையில்லை…” – என்ற முடிவுக்கு வந்துவிட்டாரா அல்லது மீடியா ஆட்களுடன் நெருங்கிப்பழகாமல், மீடியாவில் முகம் காட்டாமல் இருந்தால் அஜித்தாகிவிடலாம் என்ற ரீதியில் அவருக்கு ஆலோசனை சொல்லப்பட்டதா என்று தெரியவில்லை.

தன்னையும் ஒரு அஜித்தாக நினைத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

ஆரம்பகாலங்களில் மீடியா ஆட்களுடன் நட்புடன் பழகியவர்தான் அஜித்.

அப்போது, அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான் என்கிற அளவுக்கு அடிக்கடி அநியாயத்துக்கு லூஸ்டாக்விட்டுக்கொண்டிருந்தார் அஜித்.

அது அவருக்கு பல நேரங்களில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

அதன் பிறகே மீடியா உடன் பேசுவதை குறைத்துக் கொண்டார் அஜித்.

பின்னர் எப்போதாவது மீடியாக்களை அழைப்பார். ஆனாலும் பேட்டி கொடுக்க மாட்டார்.

பத்திரிகையாளர்களுக்கு விருந்து வைத்து பாசத்தோடு அனுப்பி வைத்துவிடுவார். காலப்போக்கில் இந்த சம்பிரதாயமும் இல்லாமல் போனது.

1992 ல் சினிமாவுக்கு வந்த அஜித் ஏறக்குறைய 15 வருடங்களுக்குப் பிறகே மீடியாக்களிடமிருந்து ‘தல’மறைவு வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்.

சிவகார்த்திகேயனோ 5 வருடங்களிலேயே அஜித்தாக ஆசைப்படுவதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.

2012 ல் நடிகரான இவர் சினிமாவில் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

அதற்குள் எந்த சாத்தான் இவரது காதில் வேதம் ஓதியதோ தெரியவில்லை. இப்போதே இப்படி மாறிவிட்டார்.

ஒரு நடிகரின் பிரஸ்மீட் அல்லது கெட் டு கெதர் என்றால் சம்மந்தப்பட்ட நடிகர் பேட்டியளிப்பார். செய்தியாளர்கள் கேள்விகள் கேட்பார்கள். இந்த நடைமுறைக்கு மாறாக பேட்டி கொடுக்காமல், விருந்து வைத்து அஜித் அனுப்பியதைப்போலவே சிவகார்த்திகேயனும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

நோ பிரஸ்மீட், நோ இன்ட்ராக்ஷன் என்ற முன்குறிப்புடன் அழைப்பு விடுக்கப்படுகிறது.

மீடியாக்கள் நெருங்காத அளவுக்கு ஒரு மாயவலைக்குள் வாழும் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்திக்கிறபோதும் பேட்டியளிக்காமல், ஹாய்… ஹலோ… என குசலம் விசாரிக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?

Comments

comments