Velaikkaran-Movie-Stills-11a-740x431

சிவகார்த்திகேயன் தன்னுடைய நண்பரை பினாமியாக வைத்து ஆரம்பித்த ‘24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் மோகன்ராஜா இயக்கிவரும் வேலைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதியில் தொடர்ந்து குழப்பம் நிலவிவருகிறது.

‘வேலைக்காரன்’ படத்தை விநாயக சதுர்த்திக்கு ரிலீஸ் செய்வதாக முதலில் அறிவித்தனர்.

அந்த தேதியில் அஜித்தின் விவேகம் களத்தில் இறங்க அதிர்ந்துபோனது சிவகார்த்திகேயன் தரப்பு.

அஜித் படத்தோடு போட்டிபோட்டால், போஸ்டர் ஒட்டிய காசு கூட திரும்பக் கிடைக்காது என்பதால் வேலைக்காரன் ரிலீஸை ஆயுதபூஜை விடுமுறைக்கு தள்ளி வைத்தனர்.

அதாவது இம்மாதம் 29-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

அதே தேதியை குறிவைத்து ஸ்பைடர், கருப்பன், ஹரஹர மகாதேவகி உட்பட அரைடஜன் படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டதும் அரண்டுபோனார் சிவகார்த்திகேயன்.

ஒற்றையாய் தியேட்டருக்கு வந்தால்தான் நாலு நாளைக்கு கல்லா கட்ட முடியும், கூட்டத்தோடு வந்தால் கோவிந்தா என்பதை உணர்ந்து, ‘வேலைக்காரன்’ படம் தீபாவளிக்கு வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இப்படி ஒரு அறிவிப்பு வெளியானதும், கடுப்பான விநியோகஸ்தர்கள், தீபாவளிக்கு மெர்சல் வெளியாகவிருப்பதால் வேலைக்காரன் படத்துக்கு 50 தியேட்டர்கள் கூட கிடைக்காது என்ற உண்மையை எடுத்துச்சொன்னதும், வேலைக்காரன் படத்தின் ரிலீஸ் வெற்றிகரமாக மறுபடியும் தள்ளி வைக்கப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி டிசம்பர் 22-ஆம் தேதி வேலைக்காரன் படம் வெளியாவது உறுதி என்று ‘24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்’ சார்பில் விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் தகவல் சொல்லி வருகிறார்கள்.

உண்மையில், டிசம்பர் மாதம் ‘வேலைக்காரன்’ வெளியாவது சந்தேகம்தான்.

2018 பொங்கலுக்குத்தான் படம் வெளியாகும், அதுவும் வேலைக்காரன்-1 என்ற பெயரில் வெளியாகும் என்று சொல்கிறார்கள் சிவகார்த்திகேயனுக்கு நெருக்கமானவர்கள்.

அதன் அர்த்தம் என்னவாம்?

பல மாதங்களாக எடிட் பண்ணியும் நாலரை மணி நேரம் ஓடக்கூடிய அளவுக்கு இருக்கிறதாம் வேலைக்காரன் படம். இந்த லட்சணத்தில் இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியதாக இருக்கிறதாம்.

என்னதான் வெட்டி எறிந்தாலும் ஃபைனல் ஃபுட்டேஜ் 3 மணி நேரத்துக்குக் குறைவில்லாமல்தான் இருக்கும் என்கிறாராம் இயக்குநர் மோகன்ராஜா. அதற்கு மேலும் நீளத்தைக் குறைத்தால் துப்பறிவாளன் மாதிரி துப்புகிற மாதிரி இருக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார்.

இது குறித்து சிவகார்த்திகேயன், மோகன்ராஜா, ஆர்.டி.ராஜா, எடிட்டர் ரூபன் ஆகியோர் ஆலோசனை செய்திருக்கின்றனர்.

பாகுபலி படத்தைப் போல் இரண்டு பாகங்களாக வேலைக்காரன் படத்தை ரிலீஸ் செய்தால் என்ன என்று ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, 2018 ஜனவரியில், பொங்கல் அன்று வேலைக்காரன் -1 படத்தையும், 2018 ஏப்ரலில் தமிழ்ப்புத்தாண்டு அன்று வேலைக்காரன் – 2 படத்தையும் ரிலீஸ் செய்யலாம் என்றும் அங்கே பேசப்பட்டிருக்கிறது.

செலவு 50 கோடி, வரவு 200 கோடி…. பிளான் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகுமா? என்று ஊர்ப்பக்கம் சொல்வார்கள்.

இரண்டு பாகம் எடுக்கும் படம் எல்லாம் பாகுபலி ஆகிவிடுமா?

சிம்புவின் ‘ஏஏஏ’ படத்தைக் கூட இரண்டு பாகமாக எடுப்பதாக அறிவித்தனர்.

வேலைக்காரன்….. பாகுபலியா? ஏஏஏவா?

Comments

comments