vishal1-740x431

தயாரிப்பாளர்களுக்கும், ஃபெப்ஸி அமைப்புக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் தினம் தினம் திடீர் திருப்பங்கள்.

ஃபெப்ஸி அமைப்பில் அங்கமாக இருந்த டெக்னீஷியன் யூனியனைச் சேர்ந்தவர்கள் அண்மையில், ஒரு படத்தின் படப்பிடிப்பை நிறுத்தியதைத் தொடர்ந்து, விஷால் தலைமையிலான தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவை எடுத்தது.

ஃபெப்ஸி தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று அவசியம் இல்லை, தயாரிப்பாளர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

இதன் மூலம் தமிழ்சினிமாவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரே தொழிலாளர் அமைப்பாக இருக்கும் ஃபெப்சி என்கிற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு சம்மட்டி அடி கொடுத்தது தயாரிப்பாளர்கள் சங்கம்.

இதன் தொடர்ச்சியாக. ஃபெப்ஸி – தயாரிப்பாளர்கள் சங்கம் – தொழிலாளர் நலத்துறை ஆகிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு எட்டப்படாதநிலையில், கடந்த வாரம் வேலைநிறுத்தத்தை அறிவித்தது ஃபெப்ஸி.

அதனால், ரஜினி நடிக்கும் காலா, விஜய் நடிக்கும் மெர்சல், சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் உட்பட பல படங்களின் பணிகள் பாதிக்கப்பட்டன.

மேற்கண்ட படங்களின் தயாரிப்பாளர்கள் விஷாலை சந்தித்து வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும்படி கேட்டுக் கொண்டனர்.

அதனால் ஃபெப்ஸியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது தயாரிப்பாளர்கள் சங்கம்.

தயாரிப்பாளர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம் என்பதில் தயாரிப்பாளர் சங்கம் உறுதியாக இருந்தது.

ஃபெப்ஸி தொழிலாளர்களை வைத்து மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்பதில் ஃபெப்ஸி தரப்பு பிடிவாதமாக இருக்க, பேச்சுவார்த்தை முடிவுக்குவராமல் இழுத்துக்கொண்டே இருக்க….

இதற்கிடையில், பொன்ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் குறுக்குசால் ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்.

ஃபெப்ஸியின் வேலைநிறுத்தத்தினால் தன்னுடைய படப்பிடிப்பு தடைபட்டுள்ளது என்றும், அதனால் உங்களுக்கு நான் தருவதாக சொன்ன கால்ஷீட்டை குறிப்பிட்ட என்னால் கொடுக்க முடியாது என்று தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகி ஒருவரை தூண்டிவிட்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் எய்த அம்பு மிகச்சரியாய் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது.

சம்மந்தப்பட்ட நிர்வாகி, எப்படியாவது வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சிவகார்த்திகேயனுக்கு நல்லது செய்ய வேண்டும் (?) என்ற எண்ணத்தில் ஃபெப்ஸியின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும்படி விஷாலை வற்புறுத்தியிருக்கிறார்.

இன்னொரு பக்கம், லிங்குசாமி இயக்கத்தில் தொடங்கப்பட உள்ள சண்டைக்கோழி- 2 படத்தின் வேலைகளும் ஃபெப்ஸியின் வேலைநிறுத்தத்தினால் தடைபட்டிருக்கிறது.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அறிவித்ததற்கு மாறாக, ஃபெப்ஸி தொழிலாளர்களை வைத்து மட்டுமே படம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டாராம் விஷால்.

இந்த விஷயம் வெளியே பரவியதும், “எந்தக் காரணத்தைக் கொண்டும் நம் தயாரிப்பாளர்கள் சங்கம் இனி ஃபெப்ஸி தொழிலாளர்களை மட்டும்தான் வைத்து வேலை செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து போடக் கூடாது. இந்த விசயத்தில் நம் நிர்வாகம் பிடிவாதமாக இருக்க வேண்டும். யார் அழைத்து சமாதானம் பேசினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

அப்படி ஏற்றுக் கொள்வது மறுபடியும் பாவப்பட்ட, சங்கத்தை நம்பியிருக்கும் தயாரிப்பாளர்களுக்குத் துரோகம் இழைப்பதாகும்.” என்று தயாரிப்பாளர்கள் பொங்கிவிட்டனர்.

‘’தயாரிப்பாளர் சங்கம் அப்படி நம்மை அடகு வைத்தால் சங்கத்தை எதிர்த்து சி.சி.ஐ.க்கு செல்வேன்’’ என்றும், விஷால் பதவி விலக வேண்டும் என்றும், வாட்ஸ்அப்பில் கடுமையான பதிவுகள் வரத்தொடங்கியுள்ளன.

விஷாலுக்கு எதிராக ஒலிக்கத்தொடங்கியுள்ள குரல்களை கவனமாக கவனிக்கத்தொடங்கியுள்ளனர் தயாரிப்பாளர் சங்கத்தின் பழைய நாட்டாமைகள்.

அனேகமாக விரைவில் விஷாலுக்கு எதிரான கலகக்குரல்கள் ஓங்கி ஒலிக்க வாய்ப்பிருக்கிறது.

Comments

comments