yaar-ivan

எம்.ஜி.ஆர். நடித்த `படகோட்டி’, சிவாஜி கணேசன் நடித்த `உத்தம புத்திரன்’ உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குநர் டி.பிரகாஷ் ராவ்.

இவரது பேரன் டி.சத்யா, `பீமிலி கபடி ஜட்டு’, `எஸ்.எம்.எஸ்’, `ஷங்கரா’ ஆகிய தெலுங்கு படங்களை இயக்கி வெற்றி கண்டவர். இவற்றில் `பீமிலி கபடி ஜட்டு’ என்ற படம் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த வெண்ணிலா கபடி குழு படத்தின் ரீமேக்.

தமிழில் வெண்ணிலா கபடி குழு வெற்றியடைந்ததைப்போலவே அதன் ரீமேக்கான `பீமிலி கபடி ஜட்டு’ படமும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

தனக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்த `பீமிலி கபடி ஜட்டு’ படத்தில் கபடி விளையாட்டு பிரதானமாக இருந்ததை வெற்றி சென்ட்டிமெண்ட்டாக எண்ணியோ என்னவோ, தற்போது இயக்கும் வீடெவாடு என்ற தெலுங்குப்படத்திலும் கபடி விளையாட்டை பிரதானமாக வைத்திருக்கிறார் டி.சத்யா.

இந்தப் படம் ‘யார் இவன்’ என்ற பெயரில் தமிழிலும் வெளியிடப்படுகிறது.

இந்த படத்தின் தயாரிப்பாளரான சச்சின் ஜோஷி கதாநாயகனாக நடிக்கிறார்.

ஈஷா குப்தா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில் பிரபு, சதீஷ், கிஷோர், தன்யா பாலகிருஷ்ணன், சுப்ரீத் ரெட்டி, சத்ரு, டெல்லி கணேஷ், ஹாரிஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 15 ஆம் தேதி யார் இவன் படம் திரைக்கு வருகிறது.

படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்த படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

யார் இவன் படத்தின் கதை என்ன?

“யார் இவன்’ காதலும், கபடியும், ஆக்ஷனும் கலந்த க்ரைம் திரில்லர். கதையின் நாயகன் சச்சின் கபடி விளையாட்டு வீரர்.

பணக்கார கதாநாயகி ஈஷா குப்தா கபடி ரசிகை.

இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள்.

திருமணம் நடந்த இரண்டாவது நாளே கதாநாயகி படுகொலை செய்யப்படுகிறார்.

அவரை கொலை செய்ததாக கதாநாயகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

இப்படி எதிர்பாராத திருப்பங்களுடன், விறுவிறுப்பான காட்சிகளுடன் நகரும் இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் நிச்சயம் திருப்தி செய்யும்.

பணக்கார நாயகியின் அப்பாவாக பிரபுவும், கொலையை விசாரிக்கும் காவல் துறை அதிகாரியாக கிஷோரும் நடித்திருக்கிறார்கள்”

என்கிறார் இயக்குநர் டி.சத்யா,

Comments

comments