[

நம்ம வீட்டுப் பெண் என்கிற நிலையை ஒரு உயிரை கொடுத்து எடுத்துக் கொண்டார் அனிதா. திரையுலக பிரபலங்களும் சரி. சாதாரண உழைப்பாளிகளும் சரி. அனிதாவுக்காக ஒரு சொட்டு கண்ணீர் விடாமல், கடந்த சில நாட்களை கடக்கவில்லை.

இந்த நிலையில்தான் நடிகர் விஜய் அனிதாவின் வீட்டுக்கே சென்று அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறியிருக்கிறார். மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாம் விஜய்யின் வருகை. திடுதிப்பென அனிதா வீட்டிற்கு வந்தவர், அவரது அப்பாவின் கைகளை பிடித்து கலங்கியிருக்கிறார். பிறகு ஒரு லட்சம் ரூபாய் நிதியையும் அளித்திருக்கிறார். சுமார் அரை மணி நேரம் அந்த வீட்டிலிருந்தவர், காரிலேயே சென்னை திரும்பிவிட்டார்.

ஆனால் இதற்கு முன்னதாக அங்கு ராகவேந்திரா லாரன்ஸ் சென்று வந்ததாக கூறப்படுகிறது. எந்த புகைப்படங்களும் வெளியாகாத நிலையில், அவர் 15 லட்சத்தை அந்த குடும்பத்திற்கு வழங்கியதாகவும் ஒரு தகவல் வருகிறது. இது குறித்து லாரன்சிடம் கேட்டபோது, “எனக்கும் அனிதாவின் பெற்றோர்களுக்கும் ஆண்டவனுக்கும் மட்டுமே தெரிந்த விஷயம் அது” என்று கூறிவிட்டார்.

‘விளம்பரமே வேண்டாம். நான் கொடுத்த விஷயம் என்னோடு போகட்டும்’ என்று நினைத்த லாரன்சின் நோக்கம் பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் யாருக்குமே தெரியாமல் கொடுத்ததை எப்படி நாளிதழ்களும் செய்தி நிறுவனங்களும் சேர்ந்து துல்லியமாக பதினைந்து லட்சம் என்று எழுதி வருகிறது?

அதுதான் யாருக்கும் புரியவில்லை.

Comments

comments