suriya11

நீட் தேர்வு காரணமாக மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காமல்போனதால் அரியலூர் அனிதா அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.

அனிதாவின் தற்கொலை, தமிழகம் முழுக்க நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத் தீயை பற்ற வைத்திருக்கிறது.

வழக்கம்போல் சினிமாக்காரர்கள் ட்விட்டரில் பொங்கிவிட்டு அடங்கிப்போய்விட்டனர்.

சூர்யா ஒரு படிமேலேபோய், பிரபல நாளிதழ் ஒன்றில் நீட் தேர்வு குறித்து ஒரு கட்டுரையை எழுதி(?) இருந்தார்.

அதற்கு பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தநிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த தமிழிசை, சூர்யாவை கடுமையாக திட்டித்தீர்த்தார்.

அதற்கு கண்டனம் தெரிவிக்கும்வகையில் சூர்யாவின் ரசிகர்கள் தமிழிசையை கழுவிஊற்றிவிட்டனர்.

தனக்காக போராளியாக மாறிய தன்னுடைய ரசிகர்களை பாராட்ட வேண்டிய சூர்யா, தன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் ரசிகர்களை கண்டித்திருக்கிறார்…

suriya-letter-495x700

“அண்ணன் சூர்யா அவர்கள் நீட் தேர்வை பற்றி தமிழ் ஹிந்து நாளேட்டில் தம்முடைய கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.

அதற்கு சமூகத்தின் பல்வேறு தரப்புகளிடமிருந்தும் ஆக்கபூர்வமான ஆதரவு குரல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

எதிர்பாராத விதமாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்  தமிழிசை செளந்தரராஜன் மட்டும் , மேலோட்டமாக விமர்சித்துள்ளார்.

அது அவரது கருத்து. அதற்கு எதிர்வினையாக, சமூக வலைத்தளங்களில் உங்களில் சிலர் தரமற்ற வார்த்தைகளால் தமிழிசை செளந்தரராஜனை விமர்சிப்பதாக அறிகிறோம்.

இதனை சூர்யா அண்ணன் அவர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்.

கருத்து தளத்தில் வரும் விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்வதும் நமது ஆரோக்யமான செயல்பாடுகளால் எதிர்வினையாற்றுவதுமே சூர்யா அண்ணன் நமக்கு கற்றுத்தந்த நற்பண்பு.

அதைவிடுத்து இது போன்ற தரமற்ற விமர்சனங்களில் இறங்கும் மன்ற உறுப்பினர்களையும், உறுப்பினராக அல்லாமல் சமூக வலைத்தளங்களில் செயல்படும் ரசிகர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

மற்றபடி அந்த கட்டுரையில் இருக்கும் கருத்துக்களிலும் அதன் செயல் வடிவத்துக்கான பணிகளிலும் சூர்யா அண்ணன் எப்போதும் உறுதியாக இருப்பார்.

அகரத்தை பற்றியும், அண்ணன் சூர்யா பற்றியும் சமூகத்தில் உள்ள கல்வியாளர்களுக்கு நன்கு தெரியும்.

‘செயல் அது ஒன்றே மிக உயர்ந்த சொல்’ என்ற தாரக மந்திரத்தில்தான் நம்முடைய நற்பணி இயக்கமானது எப்போதும் செயல் பட்டு கொண்டிருக்கிறது.

“விளம்பரத்திற்காக எதையும் செய்யாதீர்கள், உங்கள் மனதார மற்றவர்களுக்கு உதவுங்கள்” என்ற அண்ணன் சூர்யாவின் சொற்படியே கடந்த இருபது வருடங்களாக மன்றமானது செயற்படுகிறது.

இனிமேலும் செயற்படும். ஒருவர் நம்மை கேள்வி கேட்பதனாலேயே அவரிடம் நம்முடைய உண்மைத் தன்மையை நிரூபிக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை.

நம்முடைய செயல்கள் யாரையும் காயப்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன் அளித்தால் போதுமானது.

எம் தம்பிமார்களின் செயல்கள், தமிழிசை செளந்தரராஜனை எந்தவிதத்திலாவது காயப்படுத்தி இருந்தால், அதற்கான வருத்தத்தை தெரிவித்து கொள்கின்றோம்.“

என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழிசையை தாக்கினால் ஒருவேளை அகரம் பவுண்டேஷனுக்கு பிரச்சனை வரும் என்று நினைத்து சூர்யா இப்படி சரண்டர் ஆனாரோ என்னவோ?

Comments

comments