சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாதஸ்வரம் அவமதிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் விஜய் டிவி நிர்வாக இயக்குநர் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் டி.வி.யில், ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதலே சர்ச்சை தான். நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ஜூலி தன்னை கட்டிப்பிடிக்க ஆள் இல்லை என நடிகர் ஸ்ரீயிடம் கூறி சர்ச்சையில் சிக்கினார்.

நடிகை காயத்ரி ஓவியாவை பார்த்து சேரி பிஹேவியர் என கூறினார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

காயத்ரி மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி பல்வேறு அமைப்புகள் இந்த நிகழ்ச்சியை தடை விதிக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினர்.

காயத்ரி தவறான வார்த்தைகளை பேசியதற்கும் மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கடந்த ஜூலை 14-ந்தேதி ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சக்தி நாதஸ்வர வித்வானாக நடித்தார்.

அப்போது, தெய்வீக இசை கருவியான நாதஸ்வரத்தை சக்தி அவமதித்ததாக கூறப்படுகிறது. அந்த நாதஸ்வரத்தை உணவு அருந்தும் மேஜையில் வைத்து அவமதித்தனர்.

மேலும் அந்த நாதஸ்வரத்தை தூக்கி போட்டு பிடித்துக் கொண்டு செயல்பட்டார். இது இசை வேளாளர் சமுதாயத்தினரின் நம்பிக்கையையும், தெய்வீக இசை கருவியான நாதஸ்வரத்தையும் அவமதிக்கும் விதமாக உள்ளது என எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஜய் டிவி நிர்வாக இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோர் அக்டோபர் 6ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Comments

comments