Velaikkaran-Movie-Stills-1-1-740x431

சண்டை சச்சரவுகள் இல்லாமல் சுமுகமாக படத்தை எடுத்து முடித்ததாக யாராவது சொன்னால் அதைவிட அண்டப்புளுகு வேறு எதுவும் இருக்காது.

ஒவ்வொரு திரைப்படங்களின் உருவாக்கத்திலும் உரசல்களும், சண்டைகளும், மோதல்களும் சகஜம்.

படத்தயாரிப்பின்போது ஏற்பட்ட எல்லா காயங்களையும் படத்தின் வெற்றி மறக்கடித்துவிடும் என்றாலும், அந்தப் படத்தை எடுக்கும்போது ஏற்பட்ட காயமும், வலியும் பொய்யாகிவிடாது.

கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் தனி ஒருவன் படத்தை மோகன்ராஜா இயக்கியபோது அவருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் இடையில் நடைபெற்ற சண்டை பாகுபலி போர்க்காட்சிகளைவிட உக்கிரமானது.

சொன்ன பட்ஜெட்டைவிட பல மடங்கு செலவை இழுத்துவிட்டுவிட்டார் என மோகன்ராஜாவை கரித்துக்கொட்டியது கல்பாத்தி தரப்பு.

மோகன்ராஜ் பதிலுக்கு எதிர்வினையாற்ற…. ஏறக்குறைய தனி ஒருவன் படத்தை ட்ராப் பண்ணும் நிலைக்குப்போனது தகராறு.

நல்லவேளையாக, ஜெயம்ரவி நடித்த ஒரு சில படங்கள் வெற்றியடைய, கசப்பை மறந்துவிட்டு தனி ஒருவன் படத்தை திரைக்குக் கொண்டு வந்தனர்.

இயக்குநரும், தயாரிப்பாளரும், ஏன் ஜெயம் ரவியே எதிர்பார்க்காத அளவுக்கு தனி ஒருவன் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

ஏறக்குறைய இதே அனுபவத்தை வேலைக்காரன் படத்திலும் இயக்குநர் மோகன்ராஜா சந்தித்து வருவதாக ஒரு தகவல்.

சிவகார்த்திகேயனின் ‘24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிப்பில் மோகன்ராஜா இயக்கும் வேலைக்காரன் படம் விநாயக சதுர்த்திக்கு ரிலீஸாக இருந்தது.

அந்த தேதியில் அஜித் நடித்த விவேகம் ரிலீஸ் ஆனதால், வேலைக்காரன் ரிலீஸை ஆயுதபூஜைக்கு தள்ளி வைத்தனர்.

ஆயுதபூஜைக்கும் அரை டஜன் படங்கள் வெளிவரவிருப்பதால் தீபாவளிக்கு வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

தீபாவளிக்கு மெர்சல் வெளியாகவிருப்பதால் வேலைக்காரன் படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்காது என்ற நிதர்சனத்தை புரிந்து கொண்டு வேலைக்காரன் ரிலீஸை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருப்பதாக அறிவித்தார்கள்.

ஆனாலும் டிசம்பர் மாதம் ‘வேலைக்காரன்’ வெளியாவது சந்தேகம்தான்.

காரணம்… பலகட்டமாக படத்தொகுப்பு முடிவடைந்தநிலையிலும் வேலைக்காரன் படத்தின் ஃபைனல் ஃபுட்டேஜ் மூன்றரை மணி நேரத்துக்கும் அதிகமாக இருக்கிறதாம்.

இதுவரை எடிட் பண்ணப்பட்ட படத்தை பலமுறை பார்த்த சிவகார்த்திகேயனும் அவரது மானேஜரும் இரண்டேகால் மணி நேரமாக நீளத்தைக் குறைத்தால்தான் படம் தேறும் என்று இயக்குநர் மோகன்ராஜாவிடம் சொல்லி இருக்கின்றனர்.

இயக்குநர் மோகன்ராஜாவோ இரண்டேகால் மணி நேரமாக குறைத்தால் படத்தின் முக்கியமான காட்சிகளை வெட்ட வேண்டியதாகிவிடும். எனவே 2 மணி நேரம் 45 நிமிடமாக ட்ரிம் பண்ணலாம் என்று சொன்னாராம்.

இதற்கு சிவகார்த்திகேயன் தரப்பு உடன்படாததால் மோகன்ராஜா கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.

இதன் காரணமாக, ‘வேலைக்காரன்’ படம் திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்றும், தொடர்ந்து குழப்பம் நிலவிவருவதாகவும் படக்குழுவினர் கிசுகிசுக்கிறார்கள்.

Comments

comments