‘ஓப்பன் தி டாஸ்மாக்கு’ என்கிற சமூகநீதிப்பாடலோடு பிக்பாஸ் வீட்டின் காலை துவங்கியது. (உச்ச நீதி மன்ற உத்தரவிடமிருந்து ஜகா வாங்கி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மறுபடியும் கடைகளைத் திறக்கத் துவங்கி விட்டார்களாமே!. அதன் குறியீடுதான் இந்தப் பாடலா?)

கோல்டன் கார்டை தேடும் பயணம் காலையிலேயே துவங்கி விட்டது. சுஜா இரவு இதற்காக முயன்றும் அவருக்கு கிடைக்கவில்லை போல. ஆனால் ஆரவ்விற்கு அடித்தது ஜாக்பாட். மிக சாமர்த்தியமாக ஒளிக்கப்பட்ட கார்டை, தேர்ந்த துப்பறிவாளன் போல கண்டுபிடித்து விட்டார். இதன் மூலம் அவருக்கு ஐந்து மதிப்பெண்கள் கிடைக்கும்.

ஸ்டோர் ரூமில் மணி அடிக்க சென்று பார்த்தனர். ஒரு குறிப்பிட்ட பிராண்டின் சமையல் பொருட்கள் இருந்தன. அந்தப் பொருட்களை வைத்து தினமும் ஒருவர் சமைக்க வேண்டும். சமையல் குறிப்புகளும் வழங்கப்பட்டிருக்கும். சமையல் செய்பவர் தலையில் செஃப் தொப்பி அணிய வேண்டும்” என்று பயங்கர பந்தவாக இருந்தது.

முதல் செஃப் ஆக ஆரவ் மாறினார். பட்டாணிகளை வைத்து எதையோ செய்தார். அதைச் சாப்பிட்டார்களா, இல்லையா என்பதை காண்பிக்கவில்லை.

79_2_09409

**

பிந்துவின் சோம்பேறித்தனம் குறித்து சிநேகன் உண்மையிலேயே கோபித்துக் கொண்டாரா அல்லது ஹரீஷ் உள்ளிட்டவர்களை வைத்துக் கொண்டு விளையாடினாரா என்று தெரியவில்லை. “பிக் பாஸிற்கு எதுக்கு வந்தீங்க? எந்த வேலையும் செய்யறதில்லை. எப்ப பாரு சும்மா உட்கார்ந்திக்கிட்டு. பொம்பளைப் பிள்ளைக்கு சமையல் கூட செய்யத் தெரியலைன்னா என்ன அர்த்தம்?” என்று திருமணமாகி ஒரு வருடம் ஆன கணவன், மனைவியை வெளுத்து வாங்குவது போல் வாங்கினார்.

‘அதி என்னா. பொம்பளேப் பசங்க… ஆம்பளைப் பசங்க.. நான் வேலை செய்யாமயா இருக்கேன்… சமையலுக்கு காய்கறி நறுக்கித் தந்ததெல்லாம் யாரு? நேத்தி கூட.. task நடுவுலயும் தோசை சுட்டுத் தந்தேன். உன்க்கு தெரியுமா?” என்று தத்தக்கா பித்தக்கா தமிழில் பிந்து பதிலுக்கு வெளுக்க.. “அது task. நீங்க செஞ்சுதான் ஆகணும்.. சிநேகன் சீனியர்.. அவரைப் போய் நீ –ன்னு சொல்றீங்க.. நீ… க்கும் நீங்களுக்கும் வித்தியாசம் தெரியலை. ஆளை நீ.. ன்னு சொல்றது… பால் இருக்காங்க..ன்னு சொல்றது. என்னாதிது?” என்று தாமும் அதட்டினார் ஹரீஷ். “நீ என்ன பிஸ்தாவா?” என்று பிந்து எகிற ‘ம்.. பாதாம்”-என்று தன்னுடைய உலக லெவல் நகைச்சுவை உணர்வைக் காட்டினார் ஹரீஷ்.

**

கோல்டன் டிக்கெட் சவாலின் மூன்றாவது ஆட்டம் பற்றி விவரிக்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டின் வெளியில் இருந்து துணிப்பந்துகள் வீசப்படுமாம். அந்த கைக்குட்டைகளை வைத்துக் கொண்டு பெட்ஷீட் தைக்க வேண்டுமாம். இதில் ஒரு முக்கியமான விஷயம், எவருக்காவது இதில் கறுப்பு நிற துண்டு கிடைத்தால் அது அதிர்ஷ்டமாம். அவர் எவரிடமும் சென்று தொந்தரவு செய்யலாம். அவருக்கு துணி போதவில்லையென்றால் மற்றவர்களிடம் உரிமையாக கேட்டு வாங்கலாமாம்….  ‘ரூம் போட்டு யோசிப்பாய்ங்க போலிருக்கு’.

பெட்ஷீட் தைப்பதற்காக ஊசி, நூல் வழங்கப்பட்டது. தாரை ஒலி வந்ததும் கார்டன் ஏரியாவிற்கு ஓடினார்கள். வெளியில் இருந்து சரமாரியாக துணிப்பந்துகள் வீசப்பட்டன. ஆரவ் பாய்ந்து பாய்ந்து சென்று பந்துகளை சேகரித்தார். நெருக்கடி காலங்களில் ஆகாயத்திலிருந்து உணவுப்பொட்டலங்கள் வீசப்படும் போது அகதி மக்கள் ஆவேசமாக முந்திச் சென்று எடுப்பது போல பிக்பாஸ் மக்கள் அலைமோதினார்கள். பாவமாக இருந்தது. ஆரவ் அதிக பந்துகளை சேகரித்தார். “கர்ஷீப்பை வெச்சிக்கிட்டு எப்படிய்யா பெட்ஷீட் தைக்கறது?” என்கிற சரியான கேள்வியை எழுப்பினார் வையாபுரி.

“எங்க குதிக்கச் சொன்னாலும் குதிப்பேன்’ என்ற வையாபுரி, ஊசியில் நூல் கோர்க்கவே தடுமாறினார். அவருக்கு கைத்தையலின் அடிப்படை கூட தெரியவில்லை போல. அவரை விடவும் இளையவர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்க, ‘இதை எப்படி செய்யறது” என்று மற்றவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

அவர் பெட்ஷீட் தைப்பதை விடவும் அதற்கிடையில் அனத்திக் கொண்டே இருந்ததுதான் ஒருபுறம் நகைச்சுவையாகவும், இன்னொரு புறம் பாவமாகவும் இருந்தது. .. “ஒண்ணுமே புரியலையே.. என்ன பண்ணப் போறேன்.. இந்த வருஷம் விஜய் டிவி காமெடி அவார்ட் எனக்குத்தான்.. என்றெல்லாம் புலம்பியவர், ‘உள்ளே போடா ராஜா’ என்று நூலிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். எப்படி தைப்பது என்பதை சிநேகனிடம் கற்றுக் கொண்டு வந்திருந்தாலும், துணிகளை முன்னும் பின்னுமாக மாற்றி தைத்ததை பிறகுதான் உணர்ந்தார். ‘அடப் போங்கய்யா’ என்று ரைசா மாதிரி அலுத்துக் கொண்டவர், “இப்ப என்ன செய்யறது” என்று மற்றவர்களிடம் ஆலோசனை கேட்க, ‘பெட்ஷீட் மாதிரியான வடிவத்தில் வருவதுதான் முக்கியம். மாத்தி இருந்தா பரவாயில்ல” என்று சமாதானம் சொன்னார்கள்.

79_3_09027

அனைவரும் சாவகாசமாக பேசிக் கொண்டே தைத்துக் கொண்டிருக்கும் போது மறுபடியும் துணிப்பந்துகள் வந்து விழுந்தன. எல்லோரும் பதறியடித்துக் கொண்டு அவற்றைப் பொறுக்க ஓடினார்கள். கால்வழுக்கி பொத்தென்று விழுந்தார் கணேஷ். நல்லவேளையாக, ஒன்றும் ஆகவில்லை. கணேஷிற்கு போதாத வேளை போல.

இவர்களின் காமெடிகளை பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸிற்கே பொறுக்க முடியவில்லை போல, ‘நீங்க தைச்சுக் கிழிச்சது போதும். அப்படியே நிறுத்துங்க.. அடுத்த சவாலிற்கு நேரமாகி விட்டது” என்று அறிவிப்பு செய்தார். அவரவர்களும் தாங்கள் உருவாக்கிய கந்தல் துணிகளை ஏதோ பொக்கிஷம் மாதிரி பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். விதி.. எப்படில்லாம் வந்து விளையாடுது! தாங்கள் தைத்த பெட்ஷீட்களின் அழகை போட்டியாளர்கள் ரசித்துக் கொண்டிருக்க, கர்ச்சீப்பை கூடத் தாண்டாத வையாபுரி அவர்களை வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்.

“காருக்குள்ள யாரு, கடைசியா பாரு” என்று ஒரு சவாலாம். யார் இப்படியெல்லாம் தலைப்பு வைப்பது? சிநேகன் மாதிரியே, பிக் பாஸ் டீமிக்குள்ளும் ஒரு கவிஞர் இருக்கிறார் போல. அந்தக் காரை எங்கிருந்து பிடித்து வந்தார்களோ. தெரியவில்லை. நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு பழைய ‘சொப்பன சுந்தரி’ வைத்திருந்த விண்டேஜ் வகை வாகனமாக இருந்தது. கால்களை சற்று நீட்டி கூட வைக்க முடியாத அந்தக் குறுகிய காருக்குள், பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஏறி உட்கார வேண்டுமாம். பஸ்ஸர் ஒலி அடித்தவுடன், அனைவரும் கலந்தாலோசித்து ஒருவரை நாமினேட் செய்து, “அவர் ஏன் இறங்க வேண்டும்?” என்பதற்கான காரணங்களைச் சொல்லி இறக்க வேண்டுமாம். இப்படியே கடைசிவரை தாக்குப் பிடிக்கும் நபருக்கு பத்து மதிப்பெண்கள் கிடைக்கும்.

முதலில் சென்ற சிநேகன், ஏதோ அந்த காரை 180 மைல் வேகத்திற்கு ஓட்டப் போவது போல ஓட்டுநர் இருக்கையைப் பிடித்துக் கொண்டார். ஆரவ் அவரது பக்கத்தில் அமர்ந்து கொள்ள, தாமதமாக பிறகு வந்தவர்கள் எங்கு அமர்வது என்று தெரியாமல் விழித்தனர். பின் இருக்கையை சுஜாவும் கணேஷூம் ஆக்ரமித்துக் கொள்ள, பிந்துவும் ஹரீஷூம் எப்படி அமர்வது என்று குழம்பினார்கள். பிறகு கணேஷின் மடியில் பிந்து அமர்ந்து கொள்ள ஹரீஷ் கார்னர் சீட்டில் ஒதுங்கினார். சற்று முன்னர்தான் கணேஷிற்கு போதாத வேளை என்று சொல்லியிருந்தேன். அப்படி இல்லை போல.

‘இந்த வண்டி எவ்ள மைலேஜ் தரும்.. எவ்ள வேகம் போகும்’ என்றெல்லாம் வையாபுரி விசாரித்துக் கொண்டிருந்தார். ரொம்ப முக்கியம். எப்படியாவது நேரம் போக வேண்டும் அல்லவா? ஒரு மாதிரியாக காருக்குள் நெருக்கடி நிலையை அவர்கள் உணரத் துவங்கியபோது, ‘சிறகுகள் நீளுதே” என்ற உற்சாகமான பாடல் ஒலிக்கத் துவங்கியது. சற்று நேரம் தங்களின் சங்கடத்தை அவர்களால் மறக்க முடிந்தது. பாடலுக்கு ஏற்ப தலையாட்டத் துவங்கினார்கள். ஆனால் பிக் பாஸ், தெளிய வைத்து தெளிய வைத்து அடிப்பதில் விற்பன்னர் என்பதை மறந்து போனார்கள்.

இரவு மணி 11:15. ‘அடுத்த பாட்டைப் போடுங்கப்பா’ என்ற குரல் எழுந்தது. பிக் பாஸ் என்ன எப்எம்மில் ஆர்ஜேவாகவா இருக்கிறார்? “யாராவது இறங்குங்கப்பா?’ என்று அனைவரும் பிந்துவைப் பார்த்தனர். “ஏதாவது ஒரு காரணம் சொல்லுங்க?” என்றார் பிந்து. “வேற என்ன காரணம். இடம் இல்லை அதுதான்” என்றார் ஹரீஷ். நியாயமான காரணம்தான்.

“காத்து வரட்டும் ஏஸி போடுங்க” என்று எவரோ சொல்ல, வையாபுரி அதை தவறாக புரிந்து கொண்டார் போல. வேறு வகையான காற்றை அவர் வெளியேற்ற, மற்றவர்களை மூக்கைப் பிடித்துக் கொண்டனர். காலையில் பட்டாணியை வைத்து செய்து தந்த பிரத்யேக உணவு இம்மாதிரியாக பிரதிபலிக்கும் என்று ஆரவ் எதிர்பார்த்திருக்க மாட்டார். அவர்தான் வையாபுரியின் பக்கத்தில் அமர்ந்திருந்தார். இது வையாபுரியின் ‘திட்டமிட்ட’ உத்தியா அல்லது தன்னிச்சையாக நிகழ்ந்த ‘விபத்தா’ என்று தெரியவில்லை.

மனித உடலை தூரத்திலிருந்து நாம் என்னதான் ரொமான்ஸாக பார்த்தாலும், அருகில் நெருங்கும் போது வியர்வை நாற்றம், வாய் நாற்றம், அபானவாயு உள்ளிட்ட பல யதார்த்தமான விஷயங்கள் வெளிவருகின்றன.  நாம் ஒரு உணவு அரைக்கும் இயந்திரம் என்பதைக் காட்டி விடுகின்றன. ‘பாதி வண்டி இங்க இருக்கு. மீதி எங்கே?” என்று ஜோக் அடித்தார் ஹரீஷ்.

இரவு 11:30 – பிந்துவால் தாங்க முடியவில்லை. கணேஷின் மீது சிரமப்பட்டு அமர்ந்திருக்கும் நிலை. இரண்டு ஆண்களின் நடுவில் சிக்கி அமர்ந்திருப்பது அவருக்கு அசெளகரியமாக இருந்திருக்கலாம். பாவம். ‘நான் இறங்கிக் கொள்கிறேன். என்னால் முடியவில்லை. பாயிண்ட்லாம் வேணாம்” என்று இறங்கிக் கொண்டார். ‘கிளம்பு, காத்து வரட்டும்” என்று இதர போட்டியாளர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.

79_4_09387

இரவு 11:45 – “பிக் பாஸ் எனக்கு முதுகு வலி இருக்கு. மாத்திரையெல்லாம் போடணும். என்னால் முடியலை” என்று வையாபுரி அனத்த துவங்கினார். பஸ்ஸர் ஒலி கேட்ட பிறகு நாமினேட் ஆகிய பிறகுதான் இறங்க வேண்டுமா என்று அவருக்கு குழப்பம். ஆந்தை போல விழித்திருந்த பிக் பாஸ் அதை தெளிவுப்படுத்த, ‘சரிங்க ஆண்டவரே” என்று அமைதியானார். “கமல் சார் என்னல்லாம் திட்டப் போறாரோ.. எதுவா இருந்தாலும் சமாளிப்பேன்னு சொல்லிட்டேன். ஆனா இவ்ள கஷ்டமா இருக்குமின்னு தெரியலை” என்றெல்லாம் அனத்தல் தொடர்ந்தது. ஒருவழியாக இரவு 12:05-க்கு பஸ்ஸர் ஒலிக்க, ‘யப்பா. ஆள விடுங்கடா சாமி” என்று தப்பித்து ஓடினார்.

இரவு 12:30-க்கு ஆரவ்வின் வெளியேற்றம் நிகழ்ந்தது. ‘இது எவ்ள நேரம் போகும் –ன்னு தெரியலை. அதனால் நான் இறங்கிக்கறேன்” என்று நாமினேட் ஆகாமல் இறங்கிக் கொண்டார். சில நிமிடங்களில் ஹரீஷூம் மனம் மாறினார். ‘நாளைக்கு வேற டாஸ்க்லாம் இருக்கும்.. தூங்கலைன்னா அதைச் செய்ய முடியாது. நான் போறேன்” என்று இறங்கிக் கொண்டார்.

மீதமிருப்பவர்கள் சிநேகன், கணேஷ், சுஜா. ‘யாராவது ஒருவர் இறங்கக்கூடாதா” என்பதை அவர்களுக்குள் சற்று தீவிரமாக உரையாடிக் கொண்டனர்.

நேரம் நள்ளிரவைத் தாண்டியது. இரவு 01:00 மணி. “நான் இந்த வாரம் எவிக்ஷன்ல இருக்கேன். எனக்கு பிஸிக்கலாகவும் பிரச்சினை இருக்கு. உங்களுக்கே தெரியும். இந்த பத்து மதிப்பெண்கள் எனக்கு முக்கியம். புரிஞ்சுக்கங்க” என்றார் சிநேகன். “ப்ரோ… எனக்கு கிடைச்ச வாய்ப்பை வெச்சு ஒருமுறை உங்களை காப்பாத்தியிருக்கேன்” என்றார் கணேஷ். நியாயமான விஷயம். “காமிரா முன்னாடி சீட்டை காட்டறதுக்கு நீங்க அலை பாய்ஞ்சபோது சரின்னு விட்டுட்டேன்” என்று சுஜாவிடம் சொன்னார் சிநேகன்.

‘அதுக்கென்ன பண்றது. நான் முந்தி வரலை என்ன நடந்தாலும் சரி. இந்த task-ஐ நான் முடிச்சாகணும். கமல் சார் என்ன சொன்னார், போட்டி கடுமையா இருக்கும். பாசம்-லாம் ஒருபக்கம் வெச்சுட்டு உத்வேகத்துடன் விளையாடுங்க –ன்னு சொன்னாரா இல்லையா நான் இறங்கப் போவதில்லை. இதுல சீனியர், ஜூனியர் –னு எதுவும் கிடையாது. இந்த விளையாட்டிற்குள் தாமதமாக வந்தது என் தப்பு கிடையாது” என்றெல்லாம் சற்று கோபமாகச் சொன்னார் சுஜா.

நம்முடைய பிடிவாதத்தை மறைக்க சிலரின் மீது செயற்கையாக கோபத்தை உற்பத்தி செய்து கொள்வது மனித குணத்தின் ஒரு அம்சம்தான்.

நிலைமை சற்று அசெளகரியமாகியது. இரவு 01:45. “ஓகே. எனக்கும் கமல் சார் கையால டிக்கெட் வாங்கணும்னு ஆசைதான். ஆனா என்னை விட நீங்க இரண்டு பேரும் சொல்ற காரணங்கள் என்னை விடவும் அதிகமா இருக்கு. சரி. நான் இறங்கிக்கறேன்” என்று கிளம்பி விட்டார் கணேஷ்.

**

79_1_09151

“தப்பிச்சம்டா சாமி” என்று காரை விட்டு இறங்கி உறங்கப் போன அனைவரையும் பிக் பாஸ் நிம்மதியாக தூங்கவிடவில்லை. அவர்களை தூக்கத்திலிருந்து எழுப்பி “ஏன் தோல்வி மனப்பான்மையோடு இயங்குகிறீர்கள்? உங்களுக்காக முன்னரே கதவு 2 நிமிடங்கள் திறந்திருந்ததே? அப்போதே போய்த் தொலைந்திருக்க வேண்டியதுதானே. மறுபடியும் கதவு திறந்து அந்த வாய்ப்பு தரப்படும். கிளம்புங்க.. ஏன் இப்படி விட்டுக்கொடுத்தீங்க.. ஏன் போராடலை’ என்பதையெல்லாம் யோசியுங்க” என்று கறாரான குரலில் கேட்டு  விளாசினார்.

பாவம், ஒவ்வொருவரும் தூக்க கலக்கத்தில் ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னார். ஆரவ்வின் நிலைமைதான் பாவம், சரியான தூக்கத்தில் இருந்தார் என்பது நன்றாகத் தெரிந்தது. ‘கூடிப் பேசி நாமினேட் ஆகாமல் ஏன் இறங்கினீர்கள்?” என்று கேள்விக்கணை அவர் மீது பாய்ந்தது.

“தோல்வி மனப்பான்மைல்லாம் இல்ல. மன்னிச்சுடுங்க. இனி அப்படி நடக்காது. மக்கள் வாக்களித்து வெளியேறச் சொன்னால் மட்டுமே வெளியேறுவேன். இனி போட்டிகளில் கவனமாக இருப்பேன்.” என்றார். இப்படியே ஆளாளுக்கு ஒவ்வொரு காரணம் சொன்னார்கள்.

ஆனால் ஒரு முதலாளிக்கே உரிய கறார்தன்மையோடு அவர்களுக்கான உளவியல் அழுத்தத்தைத் தந்தார் பிக் பாஸ். இனி வரும் போட்டிகளில் துளியளவு கூட கருணையையோ, நட்பையோ காட்டக்கூடாது என்பது அவர்களுக்கு பலமாக உணர்த்தப்பட்டது. அவர்களுக்குள் இருக்கும் மனித உணர்வுகளைப் பிடுங்கி… கீழே இறக்கும் பணியை பிக் பாஸ் சிறப்பாகவே செய்தார். எனவே மோதல்கள் இனி அதிகம் நிகழும் போல.

அடுத்த முறை பழைய சைக்கிள் ஒன்றை கொண்டு வந்து எல்லோரும் அதில் பயணிக்க வேண்டும் என்று சொல்வார்கள் போலிருக்கிறது. சர்க்கஸ் வித்தையெல்லாம் கற்றுக் கொண்டுதான் இனி பிக் பாஸ் போட்டிக்கு செல்ல வேண்டும் போல.

Comments

comments