sivaji-memorial-740x431

நடிகர் சிவாஜி கணேசன் மீது இருந்த தனிப்பட்ட வெறுப்பு காரணமாகவோ என்னவோ, அவர் வாழ்ந்த காலத்திலும், இறந்த பிறகும் தொடர்ந்து அவமானப்படுத்தி வந்தார் ஜெயலலிதா.

சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறில் கட்டப்பட்ட மணிமண்டபத்தின் பணிகளை வருடக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டதற்கும் இதுவே காரணம்.

பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகு ஒருவழியாக சிவாஜியின் மணிமண்டபத்தை வருகிற 1-ஆம் தேதி திறக்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அக்டோபர் 1-ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெறவிருக்கிற இந்த விழாவில் சிவாஜியின் திரு உருவ சிலையை விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தவிருக்கிறார்.

சிவாஜியின் மணிமண்டப திறப்பு விழா மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெறவிருப்பதாக அறிவிப்பட்டிருப்பததான் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் சிவாஜியை அவமானப்படுத்துவதுபோல் கருத்து தெரிவித்த ஜெயக்குமாரை வைத்து சிவாஜி மணிமண்டபத்தை திறப்புவிழா நடத்துவதற்கு சிவாஜி பேரவையைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விழா சம்பந்தமாக சிவாஜி கணேசன் குடும்பத்தின் சார்பில் சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘‘மறைந்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் எங்கள் அப்பா மீது வைத்திருந்த பாசம், மரியாதை நிமித்தமாக அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று விரும்பி அதற்கான அரசாணையை பிறப்பித்திருந்தார்.

அதன்படி அப்பாவுக்கு கட்டப்பட்டுள்ள மணிமண்டப திறப்பு விழா வருகிற 1-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இவ்விழாவில் தமிழக முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் கலந்துகொள்ளவில்லை என்ற தகவல் எங்கள் குடும்பத்துக்கும், சிவாஜி ரசிகர்களுக்கும் பெரும் வேதனை மற்றும் ஏமாற்றம் தருகிறது.

தமிழ் சினிமா மூலம் நமது கலாச்சாரத்தை, தமிழ் மொழிக்கு பெருமைகளை சேர்த்தவர் எங்கள் அப்பா!

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கனவு திட்டமான சிவாஜியின் மணிமண்டப திறப்பு விழாவில் முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் மற்றும் அனைத்து அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள்.

சிவாஜி கணேசன் குடும்பத்தினரின் இந்த வேண்டுகோளை ஏற்று நல்ல ஒரு முடிவை அறிவிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’’

என்று அதில் பிரபு குறிப்பிட்டுள்ளார்.

வழக்கம்போல் இதுகுறித்தும் திரைப்படத்துறையினர் அமைதியாக இருக்கிறார்கள் என்பதுதான் கொடுமை.

சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள இழுக்கு பற்றி குறைந்தபட்சம் நடிகர் சங்கம் கூட தன்னுடைய கண்டனத்தைத் தெரிவிக்கவில்லை என்பது மேலும் கொடுமை.

இன்னும் எதற்கெல்லாம் இப்படி வாய்மூடி மௌனியாக, அரசாங்கத்தின் அடிமையாகவே இருக்கப்போகிறார்களோ?

Comments

comments