Vivegam-still

சூரிய வெளிச்சத்தை கைக்குட்டையால் மறைத்துவிட முடியாது என்பதைப்போல, விவேகம் உண்மையான வெற்றிப்படம் என்றால், அதை எந்த எதிர்மறை விமர்சனங்களினாலும் தடுத்துவிட முடியாது.

அதுவே விவேகம் படத்தில் விஷயம் இல்லை என்றால், எத்தனை ட்விட்டர் காக்கைகள் தாங்கிப்பிடித்தாலும் விவேகம் வெற்றிப்படமாகிவிடாது.

பணம் வாங்கிக் கொண்டு பொய்யான அல்லது மிகையான தகவல்களை பரப்பும் ட்விட்டர் காக்கைகள் ஒரு பக்கம், அஜித்தின் ரசிகர்கள் என்ற பெயரில் சமூகவலைத்தளங்களில் திரியும் வெறிபிடித்த கூட்டம் இன்னொரு பக்கம்…. விவேகம் படத்தின் உண்மையான வசூல் நிலவரத்துக்கு மாறான பொய்களை வைரலாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியும் விவேகம் திரையிடப்பட்டுள்ள பல தியேட்டர்கள் வெறிச்சோடித்தான் கிடக்கின்றன.

விவேகம் படம் வெளியான முதல்நாளே புள்ளிவிவர புருடாக்களைக் கொட்டி சமூகவலைத்தளங்களை குப்பைத்தொட்டியாக்க ஆரம்பித்துவிட்டார்கள் இந்த பொய்யர்கள்.

முதல் நாள் வசூல் 15 கோடி…

2ஆவது நாள் வசூல் 20 கோடி…

3 ஆவது நாள் வசூல் 30 கோடி…

– என்கிற ரீதியில் அடிப்படையற்ற தகவல்களை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் சிலரோ… மலேஷியாவில் இத்தனை கோடி வசூல், அமெரிக்காவில் அத்தனை கோடி வசூல், சந்திர மண்டலத்தில் இத்தனை கோடி வசூல் என்று கொஞ்சம் கூட விவேகமில்லாத தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இவர்கள் தருகிற வசூல் விவரங்களை கூட்டினால் கால்குலேட்டரே காரித்துப்பும் போலிக்கிறது.

இவர்களின் லேட்டஸ்ட் பொய்…. விவேகம் படத்தின் வசூல் 100 கோடியை தொட்டுவிட்டது என்பது.

படத்தின் வசூல்விவரங்களை தயாரிப்பாளரோ…. விநியோகஸ்தரோ… தியேட்டர்அதிபர்களோ மட்டுமே சொல்வதுதான் அதிகாரபூர்வமான தகவலாக இருக்க முடியும்.

விவேகம் படத்தின் வசூல் விவரங்களை பொருத்தவரை சம்மந்தப்பட்டவர்கள் இதுவரை வாயை திறக்கவில்லை.

யார் யாரோ பொய்யான புள்ளி விவரங்களை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களின் கூற்றுப்படி விவேகம் படம்100 கோடி கிளப்பில் சேர்ந்துவிட்டதாகவே எடுத்துக் கொள்வோம்.

உலக அளவில் 100 கோடி வசூல் செய்திருந்தாலும் சந்தேகமில்லாமல் வசூல்ரீதியில் விவேகம் தோல்விப்படம்தான்.

காரணம்… சுமார் 110 கோடிக்கு பிசினஸ் செய்யப்பட்டிருக்கிறது.

110 கோடிக்கு படம் பிசினஸ் என்றால்… சுமார் 175 கோடி வசூல் செய்தால்தான் தியேட்டர்காரர்களின் ஷேர் போக, போட்ட முதலீடே கைக்கு வரும்.

தமிழ்நாட்டு கதைக்கு வருவோம்….

ஏற்கனவே நாம் குறிப்பிட்டபடி, தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸ் சுமார் 60 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது.

தியேட்டர்காரர்களின் ஷேர், எண்டர்டெயின்மெண்ட் டாக்ஸ், ஜி.எஸ்.டி. எல்லாம் போக, விநியோகஸ்தர் போட்ட 60 கோடியை திரும்ப எடுக்க வேண்டுமானால், தமிழ்நாட்டில் மட்டுமே விவேகம் படம் 100 கோடியை வசூலித்தாக வேண்டும்.

அப்படியே 100 கோடியை  வசூலித்தாலும் போட்ட முதலீட்டை திரும்ப எடுக்க முடியுமே தவிர, சொற்ப லாபத்தைக் கூட பார்க்க வாய்ப்பில்லை.

திரைப்பட வியாபாரத்தின் சூட்சுமம்… சூத்திரம் இப்படியாக இருக்க, எவ்வித அறிவும் இல்லாமல், விவேகம் 100 கோடி கிளப்பில் சேர்ந்துவிட்டது என்று பொய்யை பரப்புவது வெறிபிடித்த அஜித் ரசிகர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியைத்தரலாம்.

திரைத்தொழிலுக்கு ஆரோக்கியமானதல்ல.

Comments

comments