Dhanush’s-VIP-2-gets-‘Vivegam’-touch

ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகவிருந்த ‘விவேகம்’ படம் ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக வெளியான அறிவிப்பு சுமார் 10 தயாரிப்பாளர்களின் வயிற்றில் பால் வார்த்தது.

விவேகம் படம் வெளியானால் நமக்கு எவனும் தியேட்டர் தரமாட்டான் என்று ஒதுங்கி நின்றவர்கள் எல்லாம் குஷியாகி தங்களது படங்களை ஆகஸ்ட் 11 அன்று வெளியிட தயாரானார்கள்.

ஆகஸ்ட் 11ல் ரிலீஸாகவிருப்பதாக ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த ‘தரமணி’ படத்துடன், ஜோதிகா நடித்துள்ள ‘மகளிர் மட்டும்’, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கியுள்ள ‘மாயவன்’, நித்திலன் இயக்கத்தில் விதார்த், பாரதிராஜா நடித்துள்ள ‘குரங்கு பொம்மை’, சிபிராஜின் ‘சத்யா’, ஸ்ரீகண்டன் இயக்கியுள்ள ‘தப்புத்தண்டா’, ராணா டகுபதி, காஜல் அகர்வால் நடித்துள்ள ‘நான் ஆணையிட்டால்’ ஆகிய படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்தன.

இவர்களின் மகிழ்ச்சியில் மண்ணைப்போட்டது விஐபி-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.

விவேகம் வந்தாலும் சரி.. வரவில்லை என்றாலும் சரி என்ற மனநிலையில் இருந்த தனுஷ் – தாணு கூட்டணி விஐபி-2 படத்தை ஆகஸ்ட் 11 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்தது.

அது மட்டுமல்ல, மளமளவென தியேட்டர்களை புக் பண்ணும் வேலையையும் முடுக்கிவிட்டனர். தற்போதைய தகவலின்படி 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களை புக் பண்ணிவிட்டதாக தகவல் அடிபடுகிறது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக வாய்ப்பிருக்கிறது.

விஐபி-2 படத்தின் பட்ஜெட்டான 26 கோடியை மூன்றே நாட்களில் எடுத்துவிடும் வேகத்தோடு இயங்கிக் கொண்டிருக்கிறது தனுஷ் ஆர்மியும், தாணு ஆர்மியும்.

இவர்களின் திடீர் பாய்ச்சலைக் கண்டு ஆகஸ்ட் 11 அன்று தங்களின் படங்களை வெளியிட எண்ணியிருந்தவர்கள் திகைத்துப்போயிருக்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின் மட்டும் தன்னுடைய பொதுவான எம்மனசு தங்கம் படத்தை எப்பாடுபட்டாவது ஆகஸ்ட் 11 அன்று வெளியிட்டே ஆக வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சொல்லிவிட்டாராம்.

அவரது விருப்பப்படியே, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தை வருகிற 11-ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர்.

தளபதி பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிவேதா பெதுராஜ் நடித்துள்ளார்.

காமெடியனாக இருந்தாலும் உதயநிதிக்கு இணையான கேரக்டரில் நடித்துள்ளார் சூரி.

டி.இமான் இசை அமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விநியோகத்துறையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்துக்கும் கணிசமான எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்கும் என்பதே யதார்த்தம்.

ஆக… விஐபி-2, பொதுவாக எம்மனசு தங்கம் ஆகிய இரண்டு படங்களும் பங்குபோட்டுக் கொண்டது எஞ்சிய தியேட்டர்களில்தான் மற்ற படங்கள் ரிலீஸாகும் இக்கட்டான நிலை.

என்ன செய்வது? வாழ்க்கையில் மட்டுமல்ல, திரையுலகிலும் வலியவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

Comments

comments