parthiban-740x431

சினிமாவில் இருக்கும்வரை சிங்கமாக இருந்த ரஜினி, அரசியலுக்கு வர முடிவெடுத்த பிறகு நடிகை கஸ்தூரி எல்லாம் நக்கலடிக்கும் அளவுக்கு காமெடியனாகி வருகிறார்.

தன்னை கிண்டல் பண்ணியவர்களை அடுத்த நாளே வரவைத்து, அவர்களுடன் அளவளாவி அனுப்புவதும் ரஜினியின் பிம்பத்தில் கீறலை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், சேலத்தில் நடைபெற்ற ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகர் ரா.பார்த்திபன்.

சினிமாக்காரர்கள் சாவு வீட்டுக்குப்போனால் கூட, அஜித் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அபத்தமாக கேள்வி கேட்கும் அமெச்சூர் மீடியாக்கள் பெருகிவிட்ட தற்கால சூழலில், சேலத்துக்குப் போன பார்த்திபனை இந்த அமெச்சூர் பார்ட்டிகள் பதம் பார்த்தனர்.

பொதுவாக எம்மனசு தங்கம் படத்தை ஓட வைப்பதற்காக சேலத்துக்கு ஓடோடி வந்தவரிடம், ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

வாயாலேயே வடை சுடுவதில் வல்லவரான பார்த்திபன் சும்மா இல்லாமல், ‘ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி கடவுளிடம் தான் கேட்க வேண்டும்’ என நகைச்சுவையாக பதில் சொன்னாராம்.

அவருடைய இந்த பதில் சர்ச்சையாகிவிட்டது.

“பார்த்திபன் உங்களை கிண்டல் பண்ணி இருக்கிறார்” என்று யாரோ ரஜினியிடம் போட்டுக்கொடுக்க, இந்த தகவல் கேள்விப்பட்டு விளக்கம் அளித்துள்ளார் பார்த்திபன்.

“கமல்+ரஜினி ரசிகன் நான். அதிலும் ரஜினி சார் எனக்கு நெருக்கமான நண்பர்.

பாபுஜி என்ற தயாரிப்பாளரிடம் ’பார்த்திபனை ஹீரோவாப் போட்டு படம் எடுங்கள்’ எனத்தூண்டியவர்.

Ktvi (கதை திரைக்கதை வசனம் இயக்கம்) பார்த்து மெச்சியவர்.

அவருடன் விவாதங்களில்… என் எதிர் கருத்தை ரசித்து மதிப்பவர்.

உதாரணத்திற்கு ’எந்த கோவிலுக்கு வெளியே பிச்சைக்காரர்கள் இல்லையோ, அந்த கோவிலுக்கு உள்ளேதான் கடவுள் இருக்கிறார்’ என்ற என் அக(ழ்வு)ஆராய்ச்சி கூட மறுப்பாக இருந்தாலும் வெறுப்பாக நோக்கமாட்டார்.

நேற்றைய என் பேட்டி கூட அவர் சொன்ன அதே வார்த்தைகளை வழக்கமான என் நகைச்சுவை கலந்து ரசிக்க சொன்னதேயன்றி அவரது ரசிகர்களைப் புண்படுத்தும் நோக்கமில்லை.

அப்படியானால் அது என்னையும்தானே புண்படுத்தும்? (காண்க முதல் வரி).

இதே கேள்விகளுக்கு இதே பதில்களை இதே சிரிப்புடன் போன மாதமும் சொன்னேன்.

சிறு சலசலப்புமில்லை ஆனால் நேற்றைய மேடையும் சூழலும் ஏதோ ஓர் அரசியலை கிண்டியிருப்பதை அறிகிறேன்.

கமல், ரஜினி இருவரும் அரசியலுக்கு வந்தாலும் ஆதரிப்பேன்.

காரணம், அரசியலில் ஆதாயம் தேவையில்லை இருவருக்கும். ஆனால் விமர்சிப்பது தனிமனித உரிமை.

பொதுவாழ்வில் விமர்சனங்களை எதிர்கொள்ள இன்னும் தொண்டர்களாக மாறாத ரசிகர்களுக்கு சிரமமாகவே இருப்பதால் அவர்களின் கோபத்தை சிலர் கொச்சையாகவும் பலர் ரஜினி சாரின் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் ’நீங்களுமா?’ என அதிர்ந்திருக்கிறார்கள்.

அவர்களின் மென்மையான உணர்வு புரிவதால் இந்த விளக்கத்தை மனப்பூர்வமாக தெரிவிக்கிறேன்.

நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அந்த நாள் விரைவில் வர வேண்டுமென அவர் வணங்கும் ஆண்டவனை நானும் வேண்டுகிறேன்.”

Comments

comments