NTlrg_20170802151346026339

‘விவேகம்’ படம் முதலில் ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவரலாம் என்ற ஒரு பேச்சு இருந்தது. படத்திற்கு சென்சார் முடிந்த பிறகு 24ம் தேதிதான் வெளியாகும் என்று அறிவித்தார்கள். ‘விவேகம்’ படத்துடன் எதற்கு மோத வேண்டும் என்று வெளியீட்டிற்குத் தயாராக இருந்த சில படங்களின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்காமல் இருந்தார்கள்.

‘தரமணி’ படத்தின் வெளியீட்டுத் தேதியை மட்டும் ஆகஸ்ட் 11 என்று எப்போதோ அறிவித்துவிட்டார்கள். ‘விவேகம்’ படத்துடன் வெளிவருவது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இருந்தாலும் மற்றவர்கள் எதற்கு நாமே சிக்கிக் கொள்வது என யோசித்திருக்கலாம். ‘விவேகம்’ 24ம் தேதி வெளியாகும் என்று சொன்னதும் நேற்றே மற்ற புதிய படங்களின் வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளிவர ஆரம்பித்தது.

உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ், சூரி நடிக்க தளபதி பிரபு இயக்கியுள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, தனுஷ், கஜோல், அமலா பால் நடிக்க சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘வேலையில்லா பட்டதாரி 2′ ஆகிய படங்கள் ஆகஸ்ட் 11ல் வெளியாகும் என நேற்று அறிவித்தார்கள். அந்தப் படங்களுடன் விதார்த், பாரதிராஜா நடிக்க, நித்திலன் இயக்கியுள்ள ‘குரங்கு பொம்மை’ படமும் ஆகஸ்ட் 11ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களுடன் தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘கௌதமி புத்ர சாதகர்ணி’ படத்தின் தமிழ் டப்பிங்கும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தையும் அதிக தியேட்டர்களில் வெளியிட முயற்சி செய்து வருகிறார்கள்.

ஆக, இன்றைய நிலவரப்படி ஆகஸ்ட் 11ம் தேதியன்று “தரமணி, வேலையில்லா பட்டதாரி 2, பொதுவாக எம்மனசு தங்கம், குரங்கு பொம்மை” ஆகிய நேரடித் தமிழ்ப் படங்களும், ‘கௌதமி புத்ர சாதகர்ணி’ படமும் வெளிவர உள்ளன. ஒவ்வொருவரும் அவர்களது படங்களை அதிக தியேட்டர்களில் வெளியிட முயற்சிக்கிறார்கள். இதனால், நல்ல தியேட்டர்களைப் பிடிப்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments

comments