[

சிம்புவுக்கும் தனுஷுக்கும் நட்போ, பகையோ…. அது நமக்கு அவசியமில்லை.

ஆனால் கண்கொத்திப்பாம்பாக ஒருவரையொருவர் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் பளிச்சென்று தெரிகிறது.

ஆரம்பத்தில் ட்விட்டரில் அரிய கருத்துக்களை உதிர்த்துக் கொண்டிருந்தார் சிம்பு.

பீப் சாங் பிரச்சனைக்குப் பிறகு ட்விட்டரில் சிம்புவை கழுவி ஊற்ற ஆரம்பித்ததும்  விட்டால்போதும் என்று ட்விட்டரைவிட்டு வெளியேறினார்.

அதே சமயம் அவ்வப்போது ட்விட்டரில் கருத்து சொல்வதையும் வழக்கத்தில் வைத்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் பெயர் பரபரப்பாக அடிபட்டபோது சிம்புவும் தன் பங்குக்கு ஓவியாவுக்கு ஆதரவளித்து ட்விட்டினார்.

அதன் பிறகு இந்த தேசத்தில் என்ன சம்பவம் நடந்தது என்று தெரியவில்லை.

சில தினங்களுக்கு முன் திடீரென்று டிவிட்டரிலிருந்து விலகினார் சிம்பு.

‘‘எதிர்மறை எண்ணங்கள் இருந்தாலும் நேர்மறை சிந்தைதான் எனது வலிமையே! ஆனால் இன்றைய சமூக ஊடகத்தில் நேர்மறை எண்ணங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன.

அதில் ஒரு பங்கு வகிக்க எனக்கு பயமாக இருக்கிறது.

ஒரு நட்சத்திரத்துக்கு சமூக ஊடகம் அவசியம் தான்.

ஆனால் நான் என் மனம் சொல்வதை கேட்கிறேன்.

நான் விலகும் முன் சொல்ல விரும்புவது இதுதான், எப்போதும் அன்பை தேர்ந்தெடுங்கள்!’’

என்று தனது விலகலுக்கு காரணமாக ஒரு கருத்தை பகிர்ந்தார்.

அதாவது, மற்றவர்கள் மீது அன்பு செலுத்துங்கள் என்று நாட்டுமக்களுக்கு அட்வைஸ் செய்திருந்தார்.

கட்.

அடுத்த சீன்…

இடம் – த பார்க் ஹோட்டல், விஐபி-2 படத்தின் சக்சஸ் மீட்.

விஐபி-2 படத்தை உலகமகா படம் என்கிற ரீதியிலும், அதன் வெற்றியை மிகப்பெரிய விஷயமாகவும் பில்ட்அப் கொடுத்து பேசிய தனுஷ், தன் பேச்சின் இடையில் இப்படி குறிப்பிட்டார்…

இந்த உலகத்தில் அன்பு ஒன்றுதான் நிரந்தரமானது. உண்மையானது.

தயவு செஞ்சு எல்லாரும் ஒருவருக்கொருவர் அன்பா இருங்க.

நமக்கு நெகட்டிவ் எண்ணங்களே வேண்டாம்.

இந்த உலகம் கொஞ்சம் கொஞ்சமா நெகட்டிவ் ஸ்பேஸ்ஸை நோக்கி போயிக்கிட்டுருக்கு.

மழை இல்லை. மரங்கள் இல்லை. குளோபல் வார்மிங் பெரிசா இருக்கு.

இன்னும் கொஞ்ச நாளில் தண்ணி என்னவா கிடைக்கும்னு தெரியல.

ஒருத்தருக்கொருத்தர் அன்பு செலுத்தினால் மட்டும்தான் இயற்கை நம் மீது திரும்ப அன்பு செலுத்தும்.!”

என்று இயேசு அழைக்கிறார் கூட்டத்தில் பேசுவதைப்போல் பேசிக்கொண்டே போனார்.

சிம்புவும், தனுஷும் இப்படி அன்பை போதிக்கும் புத்தர்களாகிவிட்டது ஒரு பக்கம் இருக்கட்டும், இவர்கள் எல்லாம் அன்பைப் பற்றி பேசுகிற அளவுக்கு நாட்டில் அப்படி என்ன கொடூரமான நிகழ்வு நடந்துவிட்டது?

80 குழந்தைகளை காவு வாங்கிய கோரக்பூர் கொலைபாதகத்தைக் கண்டு இப்படி சொல்கிறார்களா?

நீட் தேர்வு விவகாரத்தினால் நடுத்தெருவில் நிற்கும் நம் மாணவர்களின் எதிர்காலத்தை எண்ணி இப்படி பேச ஆரம்பித்துவிட்டார்களா?

நெடுவாசல், கதிராமங்கலத்தை சுடுகாடாக்கக் கிளம்பியுள்ள அரசாங்கத்தின் செயலைக் கண்டு இப்படி போதிக்க ஆரம்பித்தார்களா?

சேச்சே… இவர்களுக்கு நாட்டில் இப்படி எல்லாம் பிரச்சனைகள் இருக்கின்றன என்பதே தெரியாதே.

வேறு என்னதான் காரணம்?

தெரியலையே… புரியலையே …

Comments

comments