NTLRG_20170801101339986287

2017ம் ஆண்டின் கடந்து போன ஏழு மாதங்களும் ஏற்றமாக இல்லாமல் போனது தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை வருத்தமான ஒரு விஷயம். பெரிய வெற்றி, வசூல் சாதனை, வரலாறு காணாத வெற்றி, மாஸ் ஹிட், சூப்பர் ஹிட் என சொல்லும் அளவிற்கு ஒரு படம் கூட அமையவில்லை. பெரிய நட்சத்திரங்களின் படங்கள் என்று பார்த்தால் விஜய் நடித்த ‘பைரவா’, சூர்யா நடித்த ‘சி 3′ ஆகிய இரண்டு படங்களை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்தப் படங்கள் கூட சுமார் வெற்றி என்ற அளவில்தான் இருந்தன. ஒரு சில ஏரியாக்களில் மட்டுமே படம் லாபமாக அமைந்தது என்றார்கள். பல ஏரியாக்களில் தடுமாற்றமான வசூல்தான்.

வேறு முதல் நிலை நடிகர்கள் நடித்த எந்தப் படங்களும் இந்த ஏழு மாதங்களில் வெளியாகவில்லை. மாதத்திற்கு ஒரு பெரிய நடிகர் நடித்த படம் வந்தால்தான் திரைத் துறையையும் உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். அந்தக் குறை இந்த மாதத்திலிருந்து நீங்கும் வாய்ப்பு உள்ளது. இன்று பிறந்துள்ள ஆகஸ்ட் மாதத்தில் தனுஷ், அஜித் நடிக்கும் படங்கள் வெளிவருவது தமிழ்த் திரையுலகத்திற்கு ஆகஸ்ட் மாதத்தில் ஆக்சிஜன் கொடுப்பது போல இருக்கும்.

தனுஷ் நடித்துள்ள ‘விஐபி 2′ படத்தின் வெளியீட்டுத் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. அனேகமாக அடுத்த வாரம் இந்தப் படம் வெளியாகலாம். அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படம் ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ஜோதிகா நடித்துள்ள ‘மகளிர் மட்டும்’, விக்ரம் பிரபு நடித்துள்ள ‘நெருப்புடா’, சந்தானம் நடித்துள்ள ‘சர்வர் சுந்தரம்’, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘செம’ உள்ளிட்ட படங்களுடன் “விவேகம்’ வெளிவரும் 24ம் தேதிக்கு முன்னதாக ஆகஸ்ட் 4, 11, 18 ஆகிய தேதிகளில் மேலும் சில படங்கள் வெளிவருவதற்கான அறிவிப்புகள் எந்த நேரமும் வரலாம். அதனால், ஆகஸ்ட் மாதத்தில் அதிக படங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Comments

comments