0

நாடு முழுவதும் ஒரே வரியான ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. கோரிக்கை நிறைவேறும் வரை, தியேட்டர்கள் செயல்படாது என தமிழ் திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளதால் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு உள்ளிட்ட எந்த விஷயங்களும் நடைபெறவில்லை. இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 1,000 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

இந்த ஸ்டிரைக்கை முடிவு கொண்டு வர தொடர்ந்து அபிராமி ராமநாதன், விஷால் உள்ளிட்ட திரைத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். காலையில் நிதியமைச்சர் ஜெயக்குமாரை அபிராமி ராமநாதன் உள்ளிட்டவர் சந்தித்து பேசினர். அப்போது கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரிக்கை வைத்தனர். அமைச்சரும், முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

தொடர்ந்து நண்பகலில் விஷால், நாசர், சூர்யா உள்ளிட்ட நடிகர் சங்க உறுப்பினர்களும், அபிராமி ராமநாதன் உள்ளிட்ட தியேட்டர் உரிமையாளர்களும் முதல்வர் பழனிசாமியை சந்தித்து கேளிக்கை வரி தொடர்பாக பேசினர்.

இந்த விஷயத்தில் இன்னும் அரசு சார்பில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆகையால் தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டம் தொடரும் என தெரிகிறது.

Comments

comments