_18494 (1)

பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், பெட்டிங் புகாரில் சிக்கி கிரிக்கெட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இப்போது அந்த வழக்கு நடந்து வருகிறது. ஸ்ரீசாந்த் இப்போது முழு நேர நடிகராகிவிட்டார். தற்போது தமிழ், மலையாளத்தில் தயாராகி வரும் டீம் 5 என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இவர்கள் தவிர பேர்லேமேனி, தேஷ்பாண்டே ஆகியோரும் நடிக்கிறார்கள். சைஜித் ஒளிப்பதிவு செய்கிறார், கோபிசுந்தர் இசை அமைக்கிறார். தமிழ் வசனங்களை நந்த கிஷோர் எழுதுகிறார். வைரபாரதி பாடல்களை எழுதுகிறார். ரெட் கார்பட் பிலிம்ஸ் சார்பில் ராஜ் ஜக்காரியாஸ் தயாரிக்கிறார். சுரேஷ் கோவிந்த் இயக்குகிறார். படத்தில் நடிப்பது பற்றி ஸ்ரீசாந்த் கூறியதாவது:

நான் சினிமாவில் நடிக்க வந்ததில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. என் தந்தை சினிமா நடிகர், என் சகோதரி நடிகை, என் மைத்துனர் பாடகர் என எங்கள் குடும்பம் சினிமா குடும்பம். நான் பள்ளியில் படிக்கும்போது நடனம், நடிப்பு, கிரிக்கெட், படிப்பு நான்கிலும் கவனம் செலுத்தினேன். வாழ்க்கைக்கு கிரிக்கெட்டை தேர்வு செய்தேன். அதன் உயரங்களையும் தொட்டுவிட்டேன். இப்போது அதிலிருந்து விலகி சினிமாவுக்கு வந்திருக்கிறேன். இது எனது 3வது படம். ஆனால் முதலில் வெளியாகும் படம். இதில் நான் பைக் ரேசராக நடிக்கிறேன். இதற்காக ரேஸ் பைக் ஓட்டக் கற்றுக் கொண்டேன். ஒரு தாய்க்கும் மகனுக்குமான கதை.

தமிழ் படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. நான் சென்னையில் பல வருடங்கள் இருந்தேன். அப்போது நிறைய தமிழ் படங்கள் பார்ப்பேன். ரஜினி, கமல் இருவரின் பரம ரசிகன். சினிமாவில் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றில்லை. ஒரு காட்சியில்கூட நடிக்க தயாராக இருக்கிறேன். அது நல்லவிதமாக இருக்க வேண்டும். கன்னடத்தில் தற்போது வில்லனாக நடிக்கிறேன். தமிழில் விஜய், அஜித் நடிக்கும் படங்களில் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அந்த ஆசை விரைவில் நிறைவேறும் என்று நினைக்கிறேன். என்றார்.

 

Comments

comments