_L6A0021(1)_11478

‘விஐபி-2’ படத்தை தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இம்மாதம் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர்.

ஆனால் இப்போது ‘விஐபி-2’ படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து படத்தின் இயக்குநரான சௌந்தர்யா ரஜினிகாந்த், ‘விஐபி-2’வின் ரிலீஸ் தவிர்க்க முடியாத சில காரணங்கள் ஆகஸ்ட் மாதத்தின் முதல் இரண்டு வாரத்திற்குள் தள்ளி வைக்கப்படுகிறது என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விஐபி-2 படத்தின் நாயகனான தனுஷோ தன்னுடைய பிறந்தநாளில் படம் வெளிவராமல்போன ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, விஐபி-2 ரிலீஸ் ஆகும் நாளே என்னுடைய பிறந்தநாள் என்று ட்வீட் செய்துள்ளார்.

‘வேலையில்லா பட்டதாரி-2’ படம் மட்டுமல்ல, ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக சொல்லப்பட்ட அஜித் நடித்துள்ள விவேகம், சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் உட்பட ஏராளமான படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது.

இத்தனை படங்களுக்கும் தலைவலியாக மாறியது ஜி.எஸ்.டி.யோ… கேளிக்கை வரியோ… முக்கிய அமைச்சர்கள் கேட்கும் 30 கோடி லஞ்சமோ அல்ல, சென்சார் போர்டு என்கிற தணிக்கைக்குழுவின் அதிகாரிதான்.

தணிக்கைக்குழுவினர் படம் பார்க்க விண்ணப்பித்துவிட்டு, தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி அல்லது லஞ்சம் கொடுத்து தான் விரும்பிய நேரத்தில் படம் பார்க்க வைத்து சர்ட்டிஃபிகேட் பெற்றனர்.

இந்த நடைமுறை ஒழித்துக் கட்டப்பட்டு புதிய முறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஆன்லைன் மூலமே படங்களை தணிக்கைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்பி வைக்கப்பட்ட வரிசைப்படி மட்டுமே தணிக்கைக்குழுவினர் படத்தை பார்ப்பார்கள்.

இந்த புதிய நடைமுறை ஒரு பக்கம், சென்னை மண்டலத்தின் தணிக்கை அதிகாரி மதியழகன் என்பவரின் ஆட்டம் இன்னொரு பக்கம்…. என தயாரிப்பாளர்கள் திண்டாடி வருகின்றனர்.

இந்தப் பிரச்சனை காரணமாகவே பல படங்கள் திட்டமிட்ட தேதியிலிருந்து சில வாரங்கள் கழித்தோ சில மாதங்கள் கழித்தோ திரைக்கு வரும் சூழல் உருவாகிவிட்டது.

Comments

comments