_18494 (1)
இந்த நாட்டில் எந்த பிரச்சனை என்றாலும் உடனே ரஜினிகாந்த் என்ன சொன்னார் ?, கமல்ஹாசன் என்ன கருத்து தெரிவித்தார் என்றுதான் அனைவரும் கேள்வி கேட்பார்கள். ஜல்லிக் கட்டுப் பிரச்சனையின் போது கூட கமல்ஹாசன் அடிக்கடி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அதே போல, ஜிஎஸ்டி வரி விதிப்பு பற்றி கமல்ஹாசன் தொடர்ந்து தன்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார். அதே சமயம் ரஜினிகாந்த் இது பற்றி இதுவரை எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை.

மற்ற பொதுப் பிரச்சனைகளுக்காகக் கூட ரஜினிகாந்த் வாயைத் திறக்கவில்லை என்றால் பரவாயில்லை. ஜிஎஸ்டி பிரச்சனை அவர் இருக்கும் திரையுலகத்திற்கும் சேர்த்த பிரச்சனைதான். தமிழ்த் திரையுலகத்தில் பல ஆண்டுகாலமாகவே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெயரைப் பெற்றிருப்பவர். அவர் சார்ந்த துறையில் பலர் தவித்துக் கொண்டிருக்கும் போது இதுவரை அவர் எதுவுமே சொல்லாமல் இருப்பது பலரையும் கோபப்பட வைத்துள்ளது.

ஒரு வேளை இந்த ஜிஎஸ்டி மற்றும் நகராட்சி வரி விதிப்பு ஆகியவற்றைப் பற்றி முன்கூட்டியே தெரிந்துதான் அதிலிருந்து தப்பிக்க அவர் அமெரிக்கா சென்றுவிட்டாரோ என்று திரையுலகில் சிலர் குரல் எழுப்புகிறார்கள்.

திரையுலகத்திற்குண்டான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தால் அது இந்திய அளவில் எதிரொலித்திருக்கும், ஆனால், அவர் அதைச் செய்யவில்லை என்றும் அவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள். தான் சார்ந்த துறைப் பிரச்சனையைப் பற்றியே குரல் கொடுக்காதவர் அரசியலுக்கு வந்தால் மக்களின் பிரச்சனைகளுக்கு எப்படி குரல் கொடுப்பார் என்றும் கேள்வி கேட்கிறார்கள்.

Comments

comments