[

பெங்களூருச் சிறை டி.ஐ.ஜி. ரூபா, இடமாற்றப்பட்டதைக் கண்டித்து கைதிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ‘இந்த இடமாற்றம், நிர்வாக ரீதியான நடவடிக்கை’ என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூருச் சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில், சசிகலாவுக்குத் தனி சமையலறை என சிறை விதிமுறைகள் மீறி சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும், அதற்காக இரண்டு கோடி ரூபாய் வரை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகவும் சிறை டி.ஐ.ஜி ரூபா பகிரங்கமாக தெரிவித்தார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டது.

இந்தச்சூழ்நிலையில், சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான தடயங்கள் அழிக்கப்பட்டதாக ரூபா தெரிவித்தார். ரூபாவின் அதிரடி, கர்நாடக சிறைத்துறை அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ரூபாவை இடமாற்ற கர்நாடக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக, நடந்த ஆலோசனையில் ஏ.டி.ஜி.பி, சத்யநாராயண ராவ், டி.ஐ.ஜி. ரூபா, சிறைக்கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் மாற்றப்பட்டனர். ஏ.டி.ஜி.பி. சத்யநாராயண ராவ், எங்கும் இடமாற்றப்படவில்லை. பெங்களூரு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கமிஷனராக ரூபா இடமாற்றப்பட்டார்.
இந்த இடமாற்றத்துக்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, இது, நிர்வாக ரீதியான நடவடிக்கை என்று ரூபா இடமாற்றத்துக்கு விளக்கமளித்துள்ளார். இந்தச்சூழ்நிலையில் ரூபா இடமாற்றத்தைக் கண்டித்து சிறைக்கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. தமிழகத்தில் பணியாற்றிய ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகளும் ரூபாவின் நேர்மைக்கு கிடைத்த பரிசே இந்த இடமாற்றம் என்று தெரிவித்தனர்.
ரூபாவை இடமாற்றியதற்கான காரணங்கள் குறித்து விசாரித்தோம். இதுகுறித்து பெங்களூரு சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், “ரூபா, நேர்மையான அதிகாரி. அவரது அதிரடி நடவடிக்கை சிறையில் உள்ள சில அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் விதிமுறைகள் மீறி வி.வி.ஐ.பி.களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. ஏற்கெனவே உளவுத்துறை மூலம் தகவல் உயரதிகாரிகளுக்குச் சென்றாலும் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. சிறைத்துறை டி.ஐ.ஜியாக ரூபா, பொறுப்பேற்றதும் அவரது கவனத்துக்கு இந்தத் தகவல்கள் சென்றன. அவரும் அதை உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். வழக்கம்போல அதை யாரும் கண்டுக்கொள்ளவில்லையாம். இதன்பிறகே சசிகலா சலுகைகள் குறித்தும் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் விவரத்தையும் அறிக்கையாக அனுப்பினார். அதன்பிறகே ஏ.டி.ஜி.பி சத்யநாரயணராவ்விற்கும் டி.ஐ.ஜி ரூபாவுக்கும் இடையே நேரிடையாக மோதல் ஏற்படத் தொடங்கியது. இருவரது மோதலால் பல உண்மைகள் வெளிவரத்தொடங்கின.
ஐ.பி.எஸ். அதிகாரிகளின் இந்த மோதல் குறித்து உளவுத்துறை மூலம் முதல்வருக்குத் தகவல் சென்றது. மீடியாக்களுக்கும் தகவல் பரவின. சசிகலா விவகாரத்தை பா.ஜ.க. அரசியலாக்கியது. இதனால், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடி கர்நாடக அரசுக்கு ஏற்பட்டது. இதையடுத்து, பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகளை மாற்ற முடிவு செய்யப்பட்டது. சத்யநாராயண ராவ், ரூபா, கிருஷ்ணகுமார் என மூன்று பேர் இடமாற்றப்பட்டனர்.
‘இந்த முடிவு எதிர்பார்த்ததுதான்’ என்று தன்னுடைய நெருக்கமானவர்களிடம் ரூபா போனில் தெரிவித்துள்ளார். மூன்று பேரும் இடமாற்றப்பட்டாலும் சசிகலா விவகாரம் முடியவில்லை. அதுதொடர்பான விசாரணை சிறையில் நடந்துவருகிறது. சிறைக் காவலர்களிடம் தனித்தனியாக விசாரணை நடந்துவருகிறது. தடயங்களும் சேகரிக்கப்பட்டு வருவதால் அது, சிறைத்துறை அதிகாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ரூபா, டி.ஐ.ஜியாக பொறுப்பேற்பதற்கு முன்பிலிருந்தே சசிகலாவுக்குத் தேவையான சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் உள்ளது. இதனால் சசிகலா, சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணையால் சசிகலாவுக்கும் சிக்கல் எழுந்துள்ளது. அவரது நடவடிக்கைகள் உன்னிப்பாக கண்காணிப்படுகின்றன. குறிப்பாக சசிகலாவைச் சந்திக்க வந்தவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.
சிறைத்துறை அதிகாரிகளின் செல்போன்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், சிறைத்துறை அதிகாரிகளில் சிலர் வேறு செல்போன் நம்பர்களைப் பயன்படுத்திய தகவலும் கிடைத்துள்ளது. அந்த எண்கள் குறித்து ரகசிய விசாரணை நடந்துவருகிறது. விசாரணை குறித்த அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”என்றனர்.

சிறையில் நிலவிய போட்டி 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் பிளாக் பணிக்கு சிறைக் காவலர்களிடையே கடும் போட்டி நிலவியுள்ளது. இந்தப் பணியில் ஈடுபட்ட சிறைக்காவலர்கள், அதிகாரிகளிடம் விசாரணை அதிகாரிகள் விசாரித்துவரும் வேலையில், சசிகலாவிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம். மேலும், ரூபா கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்றால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் கர்நாடக காவல்துறை தயாராக உள்ளதாம்.

 பா.ஜ.க. உற்சாகம் 

சசிகலா விவகாரத்தை பெரிதுப்படுத்தி காங்கிரஸ் ஆட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த கர்நாடக பா.ஜ.க.வினர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரூபா இடமாற்றத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக உள்துறையினரிடம் பா.ஜ.க. எடியூரப்பா முறையீடு செய்துள்ளார்.

 சிரித்த முகத்துடன் ரூபா 

இடமாற்ற உத்தரவு குறித்த தகவலைக் கேட்டதும் ரூபா முகத்தில் எந்தவித மாற்றமும் தெரியவில்லை என்று சொல்கின்றனர் அவரது அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள். எப்போதும் போல சிரித்த முகத்துடனே அவர் காணப்பட்டார். இடமாற்றத் தகவலைத் தனக்கு நெருக்கமானவர்களிடம் போனில் தெரிவித்தார் என்று சொல்கின்றனர் ரூபாவுக்கு வேண்டப்பட்டவர்கள்.

 சசிகலா தரப்பு அதிர்ச்சி 

சசிகலா விவகாரத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஏ.டி.ஜி.பி. சத்யநாராயண ராவ், டி.ஐ.ஜி ரூபா, கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் என இடமாறும் அதிகாரிகளின் பட்டியல் நீள்கிறது. இன்னும் சிலரை மாற்ற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இடமாற்றப்பட்ட அதிகாரிகளுக்குப் பதில் புதிய ஐ.பி.எஸ். அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் காங்கிரஸ் அரசுக்கு வேண்டப்பட்டவர்களாம். அதிகாரிகள் இடமாறுதல் சசிகலா தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Comments

comments