NTlrg_20170715160352558641

மலையாள சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் தான் நடிகர் ஸ்ரீநாத். கடந்த 2010ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் உருவான ‘சிகார்’ என்கிற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அப்போதைக்கு இந்த வழக்கு தற்கொலை என்கிற கோணத்தில் விசாரிக்கப்பட்டு அப்படியே அமுங்கியும் போனது.. ஆனால் தற்போது ஏழு வருடங்கள் கழிந்த நிலையில் ஸ்ரீநாத் மரணம் தற்கொலையல்ல, அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சில தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து ஸ்ரீநாத்தின் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அவரது சகோதரர் சத்யநாத் என்பவர் கேரள முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளாராம்.

இவரது மரணம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதற்கு சத்யநாத் சில காரணங்களை முன் வைத்துள்ளார். ஸ்ரீநாத்தின் கொலையில் சினிமா பிரபலங்கள் சிலருக்கு பங்கிருக்கலாம் என்று அப்போது சொல்லப்பட்டதாம். அதற்கேற்றவாறு ஸ்ரீநாத்தின் இறுதி ஊர்வலத்தில் மலையாள நடிகர் சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள் ஒருவர் கூட கலந்துகொள்ளவில்லையாம். தவிர மறைந்த மலையாள நடிகர் திலகன் கூட, ஸ்ரீநாத் கொலை செய்யப்பட்டார் என தன்னிடம் சிலர் சொன்னதாகவும், ஆனால் பயம் காரணமாக அவர்கள் போலீஸில் உண்மையை சொல்ல முன்வரவில்லை என்றும் அப்போதே சொல்லிவந்தார் எனவும் சத்யநாத் கூறியுள்ளார்.

Comments

comments