[

தமிழக அரசின் கேளிக்கை வரி விதிப்பை எதிர்த்து கடந்த நான்கு நாட்களாக தியேட்டர் உரிமையாளர்கள் நடத்தி வந்த ஸ்டிரைக் நேற்றுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது. இன்று முதல் தியேட்டர்கள் வழக்கம் போல செயல்பட ஆரம்பித்துள்ளன.

ஜிஎஸ்டி வரியுடன் கூடிய டிக்கெட் கட்டணத்துடன் முன் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன. இணையதளங்கள் மூலம் புக் செய்வதில் மேலும் 30 ரூபாய் கட்டணத்தையும் தரவேண்டும். இதனால், சென்னையில் உள்ள பிரபலமான மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் நீங்கள் டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்றால் 153 ரூபாய் மற்றும் 30 ரூபாய் சேர்த்து 183 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன்பாக இந்தக் கட்டணங்கள்150 ரூபாயாக இருந்தன.

கேளிக்கை வரி விதிப்பு தொடர்பாக கமிட்டி ஒன்று அமைக்கப்பட உள்ளது. அரசு சார்பிலும், திரையுலகினர் சார்பிலும் தலா 6 பேர் இடம் பெற உள்ள இந்தக் குழு கேளிக்கை வரி பற்றி முடிவெடுக்கும். அனேகமாக கேளிக்கை வரி முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அதனால், டிக்கெட் கட்டணங்கள் மேலும் உயர வாய்ப்புகள் அதிகம்.

இன்று முதல் ஆரம்பமாகியுள்ள புதிய தியேட்டர் டிக்கெட்கட்டணங்கள் ரசிகர்களிடம் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டிரைக்கிற்கு முன்பு வெளியான படங்கள் இன்று மீண்டும் ரிலீசான நிலையில், அந்தப் படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. முன்பதிவுகள் அனைத்தும் காலியாகவே உள்ளன.

மேலும், உணவு பண்டங்களை தியேட்டர்களில் தனி விலைக்கு விற்கக் கூடாது என்ற அரசாணையும் விரைவில் வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இனி, பெரிய படங்களை மட்டுமே ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்து பார்க்க வேண்டிய சூழல் உருவாகும். சிறிய படங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய சூழலே ஏற்படும்.

Comments

comments