_18494 (1)

தங்கப்பதக்கம், வால்டர் வெற்றிவேல், மூன்று முகம், சாமி என காவல்துறையினரின் நேர்மை மற்றும் நியாயங்களைப் பற்றி பொய்யாகப்பேசியுள்ள எத்தனையோ படங்களை வெள்ளித்திரையில் கண்டிருக்கிறோம்.

காவல்துறையினரின் உண்மை முகத்தை உள்ளது உள்ளபடி சித்தரித்த தமிழ்ப்படங்கள் வெகு அபூர்வம்.

அதிலும் பெண் காவலர்களைப் பற்றிய படங்கள் மிகவும் குறைவு.

விரைவில் வெளியாகவிருக்கும் ‘மிக மிக அவசரம்’ இந்த ஆதங்கத்தைப் போக்குவதோடு, பெண் காவலர்களின் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி உரக்கப்பேசுகிற படமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

சமீபத்தில் வெளியான ‘மிக மிக அவசரம்’ படத்தின் டீஸர் இந்த நம்பிக்கையையும்… எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.

நாமும் கிரண்பேடியைப்போல், திலகவதியைப்போல் பெரிய போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் – என்ற லட்சியத்தோடு காவல்துறைக்கு வரும் பெண்களின்நிலை உண்மையில் கவலைக்கிடமாகவே உள்ளது.

பந்தோபஸ்து என்ற பெயரில் இத்துப்போன அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு காவல்காப்பதும், மந்திரி வரும் பாதைகளில் மணிக்கணக்கில் காத்துக்கிடப்பதுமாக பெண் காவலர்களின் பணி மிகவும் துயரம் தருவதாகவே இருக்கிறது.

இவை எல்லாவற்றையும்விட, உயர் போலீஸ் அதிகாரிகளின் பாலியல் தொல்லை.

சில மாதங்களுக்கு முன் ஒரு பெண் காவலருடன் உயர்போலீஸ் அதிகாரி செல்போனில் பேசும் கிளுகிளுப்பேச்சு வாட்ஸ்அப்பில் வெளியாகி காவல்துறை மீதே காரி உமிழ வைத்தது.

‘மிக மிக அவசரம்’ படத்தில் இப்படியொரு காட்சி இடம்பெற்றுள்ளது.

அமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்குநராக அவதாரமெடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’.

கதாநாயகியை பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், ‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை’ ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பெண் காவலர்கள் இன்றைய சூழலில் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளையும் தைரியமாகப் பேசும் மிக மிக அவசரம் படத்தில், உயர்அதிகாரிகளின் பாலியல் வேட்கைக்கு உடன்படாத பெண் காவலர்கள் படும் துன்பங்களையும் துயரங்களையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் சுரேஷ்காமாட்சி.

தன்னுடைய இச்சைக்கு இணங்காத பெண் காவலர் ஸ்ரீபிரியங்காவை, பல்வேறு வழிகளில் துன்புறுத்தும் உயர் அதிகாரியாக ‘வழக்கு எண்’ முத்துராமன் நடித்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘மிக மிக அவசரம்’ படம் ‘மிக மிக அவசியம்’ பார்க்க வேண்டிய படமாக இருக்க வாய்ப்பிருக்கிறது…

 

Comments

comments