0

இந்தியா முழுக்க ஒரே வரி என்ற கொள்கையில் உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.டி தமிழகத்தில் மட்டும் தலையை சிலுப்பிக் கொண்டு வேறு மாதிரி நிற்கிறது. அதுவும் சினிமாத்துறையை கிழித்து தொங்க விட முடிவெடுத்துவிட்டார் முதல்வர் எடப்பாடி. ஏன் இப்படியொரு கொலவெறி?

இதுகுறித்து கிருஷ்ணவேணி பஞ்சாலை, பறந்து செல்ல வா படத்தின் இயக்குனர் தனபால் பத்மநாபன் தனது முக நூலில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது அப்படியே இங்கே-

எடப்பாடி அரசு மோடியின் கைப்பாவையாக மக்களால் பார்க்கப்படுவது நாம் அறிந்ததே. பொறுத்துப் பொறுத்து பார்த்த எடப்பாடி பழனிசாமி இப்போது மறைமுகமாக, ஆனால் மிகவும் நுட்பமான ஒரு தாக்குதலை மோடி அரசாங்கத்தின் மீது நடத்தியிருக்கிறார்.

இன்று முதல் நாம் ஜிஎஸ்டி தேசமாகிறோம். முன்னொரு காலத்தில் சுதந்திரத்தை நள்ளிரவில் பெற்றதுபோல் இப்போது ஜிஎஸ்டி என்றழைக்கப்படும் ‘நாடெங்கும் சீரான வரி சீர்திருத்தம்’ எனும் சரித்திரத்தை நேற்று நள்ளிரவில் மோடி துவக்கி வைத்திருக்கிறார்.

இந்த ஜிஎஸ்டி-யை வைத்துதான் எடப்பாடி தன் விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார். நாடு முழுவதும் சீரான வரி விதிப்பதே ஜிஎஸ்டியின் அடிப்படை நோக்கம் என்று சொல்லப்படும் பொய்யை மக்களிடம் அம்பலப்படுத்தி விட வேண்டும் என்று நினைத்தவர் சாதுர்யமாக யாருக்கும் சந்தேகம் வராத வகையில் தன் முதல் காயை நகர்த்தியிருக்கிறார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்தது சினிமா. எல்லாக் காலத்திலும் திராவிட அரசியலுக்கு உதவிய சினிமா எடப்பாடி அரசை மட்டும் கைவிட்டு விடுமா என்ன? பாமரர்கள் முதல் பணக்காரர்கள் வரை எல்லோருக்கும் புரியும்படி ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டுமானால் சினிமாவையே நாட வேண்டும் என்ற தமிழகத்தின் அரசியல் அரிச்சுவடியை அறியாதவர் அல்ல எடப்பாடி.

அதிரடியாக ஜிஎஸ்டி வரிக்கும் மேலாக 30% வரியை திரையரங்க நுழைவுச் சீட்டு விற்பனைக்கு விதித்திருக்கிறார். இதர வரிகளையும் சேர்த்தால் 100 ரூபாய்க்கு 62% வரி செலுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் இல்லையா அது இதுதான். இப்போது பாமர மக்களுக்கும் ஜிஎஸ்டியை வைத்து பீதியைக் கிளப்பியாயிற்று. ஜிஎஸ்டி என்றால் இந்தியா முழுவதும் சீரான வரி விகிதம் என்ற பொய்யையும் அம்பலப்படுத்தியாகிவிட்டது. தென்னிந்தியாவில் மற்ற மாநிலங்கள் எல்லாம் பொழுதுபோக்கு வரியை நீக்கியிருக்கும் நிலையில் எடப்பாடியின் இந்த துணிச்சலான முடிவை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இதோடு நிற்கவில்லை நண்பர்களே. இப்போது பிஜேபியின் ஆதரவாளர்களாக கருதப்படும் ரஜினி, கமல் உள்ளிட்டோரும் தங்கள் துறையின் நலனுக்காக ஜிஎஸ்டியை எதிர்த்து குரல் கொடுத்தாக வேண்டும். மோடி அரசை எதிர்த்து ரஜினிகாந்தையே பேச வைக்கும் வித்தையை அறிந்தவர்தான் எடப்பாடி.

ரஜினி, விஜய் உள்ளிட்டோர் தாங்கள் அரசியலுக்கு வரலாம் என்று அவ்வப்போது கடுப்பைக் கிளப்பிக் கொண்டிருந்த சூழ்நிலையில் சினிமாத் தொழிலையே நாசமாக்கிவிட்டால் எதிர்கால அரசியல் சந்ததியினர் நிம்மதியாவார்கள் என்ற தொலைநோக்குப் பார்வையும் இதில் உண்டு.

தன் மீது துளியும் சந்தேகம் வராத வகையில் மோடிக்கு எதிராக ஒரு நூதனமான ஆட்டத்தை எடப்பாடி ஆரம்பித்திருக்கிறார். தமிழன் சதுரங்க விளையாட்டிலும் சளைத்தவன் அல்ல.

Comments

comments