கடந்த ஒரு வருடத்தில், `கபாலி’ திரைப்படம் அளவுக்கு பரபரப்பை வேறு எந்தத் திரைப்படமும் உருவாக்கியது இல்லை. ரஜினியின் மற்ற திரைப்படங்கள் வெளியாகும்போதுகூட `கபாலி’க்கு இணையான களேபரங்கள் நடைபெற்றதில்லை. ஒரு விமான  நிறுவனம், ரஜினியின் `கபாலி’ உருவத்தையே தங்கள் விமானத்தில் வால்பேப்பராக வைத்துப் பறக்கவிட்டது. ஹாலிவுட் உலகில் இது புதிதல்ல. எனினும், இந்திய சினிமா விளம்பர உலகின் கண்களை அகல விரியச் செய்தது. ஒரு நிதி நிறுவனம், கபாலியின் முகம் பொறிக்கப்பட்ட தங்கம், வெள்ளி நாணயங்களை `லக்கி சூப்பர் ஸ்டார் காயின்’ என்ற பெயருடன் வெளியிட்டது. இணைய சந்தைகளின் முன்னோடி நிறுவனம் கபாலியின் உருவம் பதிந்த டீ மக், டிஷர்ட்ஸ், கைபேசி உறை போன்றவற்றை விற்பனை செய்தது.

ஒரு படம் வெளியாகிறது என்றால், படக் குழுவினருடன் இணைந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் வியாபாரத் தந்திரங்களை நம்மீது ஏவுவார்கள் என்பது புதிதல்ல என்றாலும், கபாலியின் விளம்பர உத்திகள் உச்சத்தை அடைந்தன. மக்களிடையே இது `கபாலி’ திரைப்படத்தின்மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ரஜினியின் தோற்ற அமைப்பும், அவருடைய ஸ்டைலும் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை உருவாக்கியது. `வானும் மண்ணும் ஃப்ரெண்ட்ஷிப் பண்ணுது உன்னால் ஈஸ்வரா…’ என்று அஜித், விஜய் ரசிகர்களும் `கபாலி’ திருவிழாவில் ஒன்றுகூடி ஆர்ப்பரித்தார்கள்.

“நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு” என ரஜினி சொன்னதும், கள யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு தன் வயதுக்கேற்ற தோற்றத்தில் அதேசமயம் ஸ்டைலுடனும் களம் இறங்கியதாக சினிமா ஆர்வலர்கள் ஆடி, பாடி மகிழ்ந்தார்கள். ‘நெருப்புடா… நெருங்குடா…’ என வயது வித்தியாசமின்றி பலரும் சொல்லி, ரஜினி மாதிரி நடந்துவந்து தன்னை அழகுபார்த்தனர். `கபாலி’யின் வசனங்கள் படம் வருவதற்கு முன்பே டப்ஸ்மாஷ்களில் பிரபலாமாகின. `கோச்சடையான்’, `லிங்கா’வுக்குப் பிறகு குகை மனிதர்கள்போல வாழ்ந்திருந்த ரஜினி ரசிகர்கள், `கபாலி’க்குப் பிறகு மிடுக்குடன் வெளியுலகில் தலைகாட்ட ஆரம்பித்தனர்.

தற்போது `பிக் பாஸ்’ விவாதிக்கப்படுவதுபோல, சென்ற வருடம் இந்த நாள்களில் எல்லாம் `கபாலி’யே பேசுபொருளாக இருந்தது. நம் ஊர் ரசிகர்களைப்போலவே தமிழ்நாட்டில் தங்கி வேலைசெய்யும் பிற மாநிலத்தவரும் `கபாலி’க்காக ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஒரு பெரிய திருவிழாவின் உச்சம் நடைபெற்ற நாள், 22-7-2016.

kabali_angry_11169

படம் வெளியான பிறகு, மக்களின் கொண்டாட்டத்தை `கபாலி’ தக்கவைத்ததா, அவர்களின் மனநிலையைப் பூர்த்திசெய்ததா என்றால், `ஆம்’ என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், ரஜினியின் வாடிக்கையான சினிமாவை எதிர்பார்த்து போன ரசிகர்கள், தொய்வடையவே செய்தார்கள். தலைவரின் அறிமுகக் காட்சி என்றாலே தலையில் பூசணிக்காய் உடைப்பது, வில்லன் முகத்தில் குத்துவிட்டு க்ளோஸ்-அப்பில் சினம்கொள்வது, பாட்டு பாடிக்கொண்டே அறிமுகமாவது என, தன் முதல் காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ரஜினி, `கபாலி’யில் சாந்த சொரூபியாக அறிமுகமானார். சுவர் ஓரத்தில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டு அறிமுகமாகும் ரஜினி, நமக்குப் புதிது. அதுமட்டுமன்றி பல வருடங்களாக சினிமாவில் அவர் வெளிப்படுத்திய உடல்மொழியிலிருந்து விலகி, முற்றிலும் புதிதாக தன்னை வெளிப்படுத்தினார். கதாநாயக பிம்பத்திலிருந்து விலகி, அந்த வயதுக்கே உரிய இயல்புடன் நடித்தார். அவர் வசனம் பேசும் நிறைய காட்சிகள், விழா மேடைகளில் பேசும் யதார்த்த ரஜினியையே நினைவுப்படுத்தின.

குமுதவள்ளியின் நினைவு வரும்போதெல்லாம் சட்டென முகம் மாறி, காலச்சக்கரத்தில் பின்னோக்கி ஓடி அவளுடான உரையாடல்களை நினைத்து ஏங்கும் தருணங்களில் `வானம் பார்த்தேன்…’ பாடலின் வயலின் இசையும் சேர்ந்துகொள்ள… `ஆஹா! இந்த ரஜினியைப் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு!’ என்ற ஏக்கம் தீர ஆரம்பித்தது. போதைப் பழக்கத்துக்கு அடிமையான மீனா (ரித்விகா) “சார், பார்க்கிறதுக்கு எங்கப்பா மாதிரியே இருக்கீங்க” என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ள தடுமாறும் காட்சி, தான் ஏற்று நடத்தும் சீர்திருத்தப் பள்ளி மாணவர்கள் கபாலியின் காதலைப் பற்றிக் கேட்கையில் அவருடைய உதவியாளர் அமீர் (ஜான் விஜய்) அதைப் பற்றிக் கூறுகையில், வெட்கப்பட்டுக்கொண்டு சிரிக்கும் காட்சி,  நடிப்பு என்பது உணர்வுகளை அதீதமாக வெளிபடுத்துவதல்ல என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம்.

`கபாலி’ படம் முழுக்க ரஜினி இப்படி நுணுக்கமான முகபாவனைகளாலும் உடல்மொழியாலும் `முள்ளும் மலரும்’ காளியை நினைவூட்டியபடியே இருப்பார். சில ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியைச் சந்தித்து, அவள் இவரைக் கட்டிப்பிடித்து அழுகையில் பதிலுக்கு வரும் அழுகையை அடக்கிக்கொண்டு அதை மூச்சுக்காற்றாக வெளியேற்றி, தாய்க்கே தன் மகளை அறிமுகப்படுத்திவைப்பார். `மாயநதி…’ பாடல் முழுக்க குமுதவள்ளியுடன் கபாலி செய்யும் ஊடல்கள் ஓவியங்களாக்கப்படவேண்டியவை. ரஜினி நடித்த மிகச்சிறந்த காதல் படங்களில் `கபாலி’யும் ஒன்று. அதே சமயம் தன் பழங்கால நினைவுகளைச் சுமந்தபடி மனைவியைத் தேடி அலையும் ஒரு முதியவரின் கதை என்கிற அளவில் `கபாலி’யைச் சுருக்கிவிடவும் முடியாது.

kabali_with_wife_11392

மலேசியாவுக்கு புலம்பெயர்ந்து சென்று, அடிமைகளாக வாழும் தோட்டத் தொழிலாளிகளின்  உரிமைக்காகக் குரல்கொடுக்கும் ஒரு பிரதிநிதியாக இருக்கிறார். “We Are not Slaves, We are Employees, We need equality” என்கிற முழக்கத்துடன் அடிமைகளிலிருந்து ஒருவன் மேலெழுந்து வருவதை, சக தமிழர்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `கபாலி’ அதிகாரத்துக்கு வருவதும், அவன் கோட் சூட் போடுவதும் வீரசேகரனுக்கும் தமிழ் மாறனுக்கும் உறுத்திக்கொண்டே இருக்கிறது. எந்த அரசியல் தலைவரை முன்னுதாரணமாகக்கொண்டு கபாலி மக்கள் நல அரசியலில் இறங்கினானோ, அவரின் மகன் ஒருகட்டத்தில் கபாலியின் எழுச்சியைக் கண்டு பொறுமி “நீ யாருங்கிறத மறந்துட்டியா? உன்னை எல்லாம் எங்க வீட்டுல விட்டேன் பாரு” என்று பொது விருந்தில் அவமானப்படுத்துகிறான். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவன் மேலெழுந்து வரலாம். ஆனால், அது அதிகாரப் பீடத்தை நோக்கி இருக்கக் கூடாது என்கிறவர்களின் சூழ்ச்சியினால், 25 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு `கபாலி’ தன் அதிகாரத்தை நிலைநாட்டுகிறார்.

எந்த மனிதனுக்கும் தானும் தன் சமூகமும் குறைந்தவர்கள் அல்ல என மற்றவர்களைப்போல உடையணிகிறார். கால்மீது கால் போட்டு அமர்ந்துகொள்கிறார். `யாருக்கும் தாழ்ந்தவன் அல்ல. உனக்கு இருக்கும் எல்லா உரிமைகளும் எனக்கும் இருக்கின்றன’ என்கிற மனோபாவமும் அடிமைத் தளத்திலிருந்து மீளவேண்டும் என்கிற சுதந்திர வேட்கையும்தான் கபாலியின் நடை, உடையில் இருக்கும். சம உரிமைக்கான அரசியல்தான் படத்தில் பிரதானமாகப் பேசப்பட்டது. பல ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்தவனின் அதிகாரப் பிரவேசத்தைத் தடுப்பவர்களை எதிர்கொள்வது உணர்ச்சிகரமானது. அழுத்தம் குறைவான காட்சிகளில்கூட கபாலி தன் ஆற்றாமையை வெளிப்படுத்துவதை இந்த விதத்தில்தான் அணுக முயற்சி செய்ய வேண்டும்.

நம்மிடம் இருக்கும் கலையை, யாருக்காகப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் ஒரு படைப்பாளியின் அரசியல் தெளிவு இருக்கிறது. அதுவும் ரஜினியை வைத்து உரக்கப் பேசியதில் பா.இரஞ்சித் வெற்றிபெறவே செய்தார். அவரின் வெற்றிக்கணக்கு `கபாலி’ பாடல்கள் வெளியான சமயத்திலேயே தொடங்கியது. படத்தின் பாடல் வரிகளிலேயே பலர் நிம்மதி இழந்தார்கள். பா.இரஞ்சித் லோக்கல் பாலிட்டிக்ஸ் அரசியல் பேசுகிறார் என்பதிலிருந்து, சாதியைச் சொல்லி பிறப்பைக் களங்கப்படுத்துவது வரை பிரபல நாளேடுகள் முதல் ஃபேஸ்புக் விமர்சனம் வரை படம் வெளியான சமயத்தில் அவர் வசைபாடப்பட்டார். சாதிப் பெருமிதங்களை `அந்த மக்களின் வாழ்க்கை முறை’ என்ற முத்திரையுடன் வெளிவந்த ஏராளமான திரைப்படங்களைப் பற்றியும் அதை இயக்கியவர்களைப் பற்றியும் வைக்கப்படாத அறச்சீற்றங்கள் இரஞ்சித்தின்மீது வைக்கப்பட்டன. இத்தனைக்கும் `கபாலி’யில் எந்தக் குறிப்பிட்ட வர்க்கப் பெருமிதங்களும் முன்வைக்கப்படவில்லை. சாதிப்பெருமை பேசுவதற்கும், சாதி மறுப்பு பேசுவதற்கும் இடையேயுள்ள வேறுபாடு புரிந்துகொள்ளப்படாமல் ஜன ரஞ்சகமாகப் பலியாக்கப்படும் முன்னோடிகளுள் பா.இரஞ்சித்தும் ஒருவர்.

cogs3bkukaannst_072916103648_11402

படம் வெளிவந்து ஒருவிவாதமாக மாறிக்கொண்டிருந்த சூழலில், பா.இரஞ்சித் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் “யாரிடம் இந்த அரசியலை முன்வைக்கிறானோ, அவரிடம் ஓர் உரையாடலை உண்டு பண்ண வேண்டும். நீயும் நானும் உட்கார்ந்து பேசணும்” என்றார். அப்படியோர் உரையாடலின் தொடக்கப்புள்ளிதான் `கபாலி’ மாதிரியான திரைப்படங்கள். பொதுச் சமூகத்தை இந்தத் திரைப்படம் அரசியல்ரீதியாக எந்த அளவுக்குச் சீண்டியது என்பதிலிருந்தே இதன் முக்கியத்துவத்தை எளிமையாக்கிக்கொள்ளலாம்.

சினிமா என்கிற சட்டகத்துக்குள் வைத்துப் பார்க்கும்போது மற்ற திரைப்படங்களைப்போலவே `கபாலி’யிலும் சில போதாமைகளும், தர்க்கப் பிழைகளும் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், தமிழ் சினிமா வரலாறை ஆழ உழுதுப்பார்த்தால் ஒடுக்கப்பட்டவர்கள் எப்படிச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள், அதிலிருந்து `கபாலி’ எந்த அளவுக்கு மாறுபட்டது என்பதையும் புரிந்துகொண்டு அணுகுகையில் இந்தப் படத்தை இன்னும் நெருக்கமாக உணர முடியும்.

`கபாலி’ வெளிவந்த ஒரு வருடம் முழுமையடையும் இந்த நாளில், அதன் எல்லா பக்கங்களையும் திறந்து பார்க்கும் ஒரு சிறிய முயற்சியே இந்தக் கட்டுரை.

Comments

comments