_18494 (1)

நடிகர் சங்கத்தின் செயலாளர் – தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் இரண்டு குதிரைகளில் சவாரி செய்து வருகிறார் விஷால்.

ஆனாலும் அவரால் நினைத்ததை செய்ய முடியவில்லை.

தயாரிப்பாளர் சங்கத்தில் குடியிருந்த பழைய நாட்டாமைகள் பல்வேறு தடைகளை, சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

அவற்றை எதிர்கொள்ள வேண்டியிருப்பதோடு, தான் விரும்பிய சீர்திருத்தத்தையும் செய்வது விஷாலுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அவசரக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னும் இதுபோன்று பல அவசரக்கூட்டங்கள் நடைபெற்றும் யாதொரு பலனும் இல்லை.

இந்நிலையில் மீண்டும் அவசரக்கூட்டம் என்றதும் சாய்ந்தாடு என்ற படத்தை தயாரித்து இயக்கிய கஸாலி தன் மனக்குறையை, குமுறலை வாட்ஸ்அப்பில் கொட்டி இருக்கிறார்.

அது வைரலாகி கோடம்பாக்கத்தின் சந்துபொந்துகளில் எல்லாம் பேசுபொருளாகி இருக்கிறது.

 

நல்லது.
முடிந்தவரை எல்லோரும் வருகிறோம்.
எங்களுக்காக இந்த நிர்வாகம் என்ன செய்யப் போகிறது?
ஃபெஃப்ஸியில் இருக்கும் யார் நினைத்தாலும், யாருடைய படத்தின் படப்பிடிப்பையும் நிறுத்திவிட முடியும்.
வசதியுள்ள பெரிய நிறுவனங்கள், பெரிய நடிகர்கள் தமிழ்நாட்டைத் தாண்டி ஷூட்டிங் செல்வார்கள். முடிந்தால் முழு படத்தையும் வெளிநாட்டிலேயே எடுப்பார்கள். அந்த வசதியில்லாத நடுத்தர, சிறிய படங்களின் நிலைமை?
பணம் போட்டு படம் தயாரிக்கும் நாம் யார்?
தயாரிக்கும்போது தொழிலாளர் பிரச்சனை, கலைஞர்கள் பிரச்சனை.
தயாரித்தபின் வியாபாரம் செய்ய முடியாமல் பிரச்சனை.
ஏதோ ஓர் ஆர்வத்தில் பணத்தை முதலீடு செய்துவிட்டு எல்லா இடங்களிலும் கூனிக் குறுகி நிற்கும்போது தோன்றுகிறது…
“முதலாளிகளே…” என்று அழைக்கும்போது காமெடியாக!
உண்மையிலேயே நாம் முதலாளிகள்தானா?

நம்மிடமும் தவறுகள் இருக்கின்றன.
பெரிய பெரிய செலவுகளை ஆர்ப்பாட்டமாகச் செய்துவிட்டு இறுதியில் சில சில்லறை செலவுகளக்குக் கஷ்டப்படும்போது பூதாகரமாக நிற்பது ஃபெஃப்ஸி தொழிலாளர்களின் பாக்கி செட்டில்மெண்ட். சில நேரங்களில் முறைப்படுத்தத் தவறி விடுகிறோம்.
நான் கேள்விப்பட்டிருக்கிறேன்… ஏவிஎம் நிறுவனம் பற்றி!
சம்பளத்தைக் குறைவாகக் கொடுத்தாலும் கூப்பிட்டுக் கொடுப்பார்கள்.
அளவாகக் கொடுத்தாலும் அழ வைக்காமல் கொடுப்பார்கள் என்று!
முடிந்தவரை அவர்கள்போல் சம்பள விசயத்தில் நிர்வாகம் செய்ய முயற்சி செய்வோம்.

இந்த அவசரக் கூட்டத்திலாவது யாருக்கும் பயப்படாத, உறுதியான, நிர்வாகத்தைப் பார்த்துப் பெருமைப்படக் கூடிய வகையில், வீண் வம்பு செய்பவர்கள் விலகிப் போகும் வகையில் நடவடிக்கை இருக்கட்டும். நான்கு மாதங்கள் முடியப்போகிறது. இன்னும் சொல்லப் போனால், நூறு நாட்களைக் கடந்து விட்டோம்.இதுவரை என்ன சாதித்திருக்கிறோம் என்று சுய பரிசோதனை செய்வோம்.

எல்லோருக்குமே புரிகிறது…. சொல்லுவது எளிது. நெருப்பாய் தகிக்கும் அந்த சீட்டில் அமர்ந்து நிர்வாகம் செய்வது எவ்வளவு கஷ்டம் என்று!
என்ன செய்ய? எங்கள் எதிர்பார்ப்பு அப்படி. மத்தளம்போல் இரண்டு பக்கமும் அடி வாங்கும் நாங்கள் யாரிடம் முறையிட?

நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளால் எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும், என்ன விளைவுகள் வந்தாலும் உங்களோடு ஒத்துழைக்க, தோள் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.

gazali-director

…கஸாலி.

Comments

comments