Daily_News_3754497766495 (1)

சென்னை : சென்னை நகருக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் 4 ஏரிகளில் கடைசி நம்பிக்கையான புழல் ஏரியும் முழுமையாக வறண்டது. கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரியான வீராணம் ஏரி வறண்டு போனது. கிருஷ்ணா கால்வாய் குடிநீரும் நின்றுபோனது. இதனால் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளை மட்டும் நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.3 ஏரிகளும் வறண்டு போன நிலையில் புழல் ஏரியிலிருந்து மட்டும்  தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் புழல் ஏரியும் வறண்டுள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி முற்றிலும் வறண்டு ஜீரோ மில்லியன் கன அடியைத் தொட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி 13 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வறண்டுள்ளது. ஜீரோ மில்லியன் கன அடிக்குக் கீழே தேங்கியுள்ள நீரை மோட்டார் மூலம் உறிஞ்சி சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக புழல் ஏரியில் இருந்து தற்போது 20 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.அனைத்து ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 124 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பதால், இனி வரும் நாட்களில் பலத்த மழை பெய்து ஏரிகளில் தண்ணீர் பெருகினால் மட்டுமே சென்னைக்குத் தொடர்ந்து குடிநீர் வழங்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

Comments

comments