taramaniram

‘தரமணி’ தணிக்கையில் நடந்தது என்ன என்று இயக்குநர் ராம் விளக்கமளித்துள்ளார்.

ஆகஸ்ட் 11-ம் தேதி ‘தரமணி’ வெளியீடு என்று படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது. இதற்கு தணிக்கை அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளார்கள். இதனை படக்குழு தொடர்ச்சியாக போஸ்டர்கள் மற்றும் டீஸர் வழியாக சாடியுள்ளது.

இப்படத்தின் தணிக்கையில் என்ன நடந்தது என்பது குறித்து இயக்குநர் ராம் கூறியிருப்பதாவது:

இன்றைய நவீன இளைஞனும், யுவதியும் காதலை எப்படி பார்க்கிறார்கள், காதலிக்கிறார்கள், காதலை எப்படி புரிந்து கொள்கிறார்கள், காமத்தை எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை. இன்றைய நவீன யுவதி பற்றிய கதை என்பதால், மதுகுடிப்பவராக இருக்கும்போது அதைக் காட்டியுள்ளேன்.

தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் தராவிட்டாலும் கேட்டு வாங்கியிருப்பேன். காமத்தைப் பற்றியும், காதலைப் பற்றியும் 13 வயது நிரம்பாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது இளைஞர்களுக்கான படம். அவர்கள் பார்த்தால் போதும்.

தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தற்கான காரணத்தைத் தான் கண்டித்தேன். ஆண்கள் குடிக்கும் காட்சிகள் இருந்தால் ‘யு/ஏ’, பெண்கள் குடிக்கும் காட்சிகள் இருந்தால் ‘ஏ’ என்றார்கள். குடிப் பழக்கம் கெட்டது தான். அதில்  ஆண், பெண் பேதமை ஏன் என்பது தான் என்னுடைய கேள்வி. 14 கட் கொடுத்து அதை கட் செய்தால் ‘யு/ஏ’ தருகிறோம் என்றார்கள். நீங்கள் ‘ஏ’ கொடுங்கள் என்று கேட்டு வாங்கியிருக்கிறோம்.

இவ்வாறு ராம் தெரிவித்துள்ளார்.

Comments

comments