A-R-Rahman2_Bacardi-Arena_BNWDelhi_Maanas-Singh1

லண்டனில் நடைப்பெற்ற இசை நிகழ்ச்சியில் தமிழ் பாடல்களை பாடியதற்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு கண்டனம் தெரிவித்து அவருடைய இந்தி ரசிகர்கள் ட்விட்டரில் பதிவு செய்துவருகின்றனர்.

ஏ.ஆர். ரஹ்மான் பங்குபெறும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று இங்கிலாந்தின லண்டன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு லண்டனில் உள்ள பல இந்தியர்களும் வந்திருந்தனர். இந்தியில் உருவான “ஸ்லம்டாக் மில்லியனர்” (Slumdog Millionaire) படத்தில் இசை அமைத்தற்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. மேலும் அவர் இந்தி மற்றும் பல பிற மொழி படங்களிலும் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லண்டனில் கடந்த 8ம்தேதி “நேற்று இன்று நாளை” என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பாடப்பட்ட 28 பாடல்களில் 12 பாடல்கள் தமிழ் திரைப்பட பாடல்களும் 16 பாடல்கள் இந்திபாடல்களும் பாடியுள்ளார். ஆனால் வட இந்திய ரசிகர்களோ ஏ.ஆர். ரஹ்மான் தமிழ் திரைப்பட பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டு இந்தி பாடல்களை தவிர்த்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.  மேலும் ஏ.ஆர். ரஹ்மான் வேண்டுமென்றே இந்தி பாடல்களை தவிர்த்ததாகவும் தமிழ் பாடல்கள் எதுவும் எங்களுக்கு புரியவில்லை எனக் கூறியும் நுழைவுச்சீட்டிற்கான பணத்தை திரும்ப அளிக்க வேண்டும் என கூறியும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மேலும் ஏ.ஆர். ரஹ்மானின் வட இந்திய ரசிகர்கள் ட்விட்டரில் ஏ.ஆர். ரகுமானுக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர். மேலும் ஹிந்தி பாடல்களின் மூலம் தான் ஏ.ஆர். ரஹ்மான் சர்வதேச அளவில் புகழ்பெற்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு ஏ.ஆர். ரஹ்மானின் தமிழ் ரசிகர்கள், ஏ.ஆர். ரஹ்மான் சென்னையில் பிறந்தவர் என்றும், அவர் தமிழ் பாடல்களின் மூலமே இசை வாழ்வை தொடங்கினார் என்றும், உண்மையாக இசையை ரசிப்பவர்கள் மொழியை குறித்து கவலைப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் வட இந்தியர்களின் கருத்து, தமிழகத்தின் மீது இந்தியை திணிக்க முயலும் அவர்களின் மனநிலையையே வெளிப்படுத்துவதாகவும் கூறி ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவருகின்றனர்.

Comments

comments