[

திரையரங்குகள் இன்று முதல் மூடப்பட்டதைத் தொடர்ந்து ’இவன் தந்திரன்’ படக்குழு தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘இவன் தந்திரன்’. விமர்சன ரீதியாக இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜிஎஸ்டி வரி போக, தமிழக அரசு நகராட்சி வரியும் சேர்த்திருப்பதால் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் இன்று முதல் அனைத்து காட்சிகளையும் ரத்து செய்துள்ளனர். இதனால் ‘இவன் தந்திரன்’ படக்குழு கடும் அதிர்ச்சியடைந்தது.

தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிட்டுள்ள தனஞ்ஜெயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகவும் வருத்தமான, அதிர்ச்சியான நிலையில் இருக்கிறேன். எனது பல முயற்சிகளுக்குப் பிறகும் தமிழ்நாட்டில் திரையரங்குகள் நாளை முதல் காலவரையின்றி மூடப்படுகின்றன. ’இவன் தந்திரன்’ ஓடாது.

எங்களால் நல்ல படத்தை மட்டும்தான் தர முடியும். அதற்கு மேல், மொத்த அமைப்பும் நொறுங்கும் போது, வேறென்ன செய்ய முடியும். தமிழக அரசு மாநில வரியை நீக்கி திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்,

அப்போதுதான் படம் ஓடி, சம்பாதிக்க முடியும். இந்த பிரச்சினை தீரும் வரை, ‘இவன் தந்திரன்’ படத்தை கள்ளத்தனமாகவோ, இணையத்திலோ பார்க்க வேண்டாம் என தமிழக மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினைக்கு விரைவில் முடிவு எட்ட, தமிழ் திரையுலகினர் கடும் முயற்சி செய்து வருகிறார்கள்.

Comments

comments