0

“ஜிஎஸ்டி வரியை நாங்கள் எதிர்க்கவிலை, மாநில அரசின் கேளிக்கை வரியைத்தான் எதிர்க்கிறோம்,” என்று சொல்லி கடந்த மூன்று நாட்களாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இதனால், நாள் ஒன்றுக்கு சுமார் 20 கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஷாப்பிங் மால்களில் உள்ள தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளதால் அனைத்து மால்களிலும் மக்கள் வரத்து குறைந்துள்ளது.

இதனிடையே, திரையுலகினருக்கும், அரசு தரப்பினருக்கும் இன்றும் பேச்சு வார்த்தை நடைபெறும் என்று தெரிகிறது. கேளிக்கை வரி விதிப்பை எதிர்க்கும் திரையுலகினர் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த கோரிக்கை வைத்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 10 வருடங்களாக தியேட்டர் கட்டணங்களை சீரமைக்கப்படாமல் இருப்பதால், இந்த சந்தர்ப்பத்தில் அதையும் மாற்றி அமைக்க வேண்டும் என்று திரையுரகினர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். அதனால்தான் பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

கேளிக்கை வரி விதித்தால் 120 ரூபாய் டிக்கெட் கட்டணங்கள் 200 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. அதே சமயம், டிக்கெட் கட்டணங்களை கேளிக்கை வரி இல்லாமல் 200 ரூபாய் வரை உயர்த்தலாம் என அரசாங்கத்திடம் முறையிட்டுள்ளார்களாம். இதில் மட்டும் திரையுலகினர் அனைவரும் ஒன்றுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒரு படம் ஓடினாலே, தங்களது சம்பளத்தை கோடிக்கணக்கில் உயர்த்தும் நடிகர்கள் அவர்களுடைய சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளாமல், படத்தின் பட்ஜெட்டை குறைக்காமல் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த கோரிக்கை வைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என இந்த விஷயத்தைப் பற்றிக் கேள்விப்படும் ரசிகர்கள் கோபப்படுகிறார்கள்.

சிவகார்த்திகேயன் சம்பளமே தற்போது 25 கோடி ரூபாய் என பேசப்படுவதும் அதற்கு உதாரணம் என்கிறார்கள்.
தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்தால் மக்கள் தியேட்டருக்கு வருவது மேலும் குறையும் என்று திரையுலகினர் கருதாது ஆச்சரியமாகவும் உள்ளது. நடிகர்கள் ஒருவராவது தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்கிறோம் என அறிவித்துள்ளார்களா?. ஆனால், சமூகத்தின் மீது ஏதோ அக்கறை உள்ளது போல் மட்டும் மற்ற விஷயங்களில் அடிக்கடி நடிக்கிறார்கள் என்றும் பலர் சமூக வலைத்தளங்களில் கொந்தளிக்கிறார்கள்.

Comments

comments