சாதாரணமான படத்திலேயே ஹீரோவை விட வில்லனுக்கு ஸ்கோப் குறைவு. அதுவும் ஒரு சூப்பர் ஹீரோ படத்தில்? வாய்ப்பே இல்லை என்கிறீர்களா? ஒரே ஒரு முறை அந்த அதிசயம் நடந்திருக்கிறது. ‘தி டார்க் நைட்’ படம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. அதற்கான சிறப்புப் பதிவு இது.

photo-0-1480754088646_13247

நோலன் படைப்புகளுள் மிக முக்கியமான இடம் பேட்மேன் சீரிஸுக்கு உண்டு. அதில் இரண்டாம் பகுதிதான் ‘தி டார்க் நைட்’. பயங்கர மூளைக்கார ஆளாக பேட்மேன் இருந்தாலும் அவரைவிட அதிகம் பேசப்பட்டது ‘ஜோக்கர்’ கதாபாத்திரம்தான். பொதுவாக ஜோக்கர் என்றால் கோமாளி, கிறுக்குத்தனம் செய்யும் ஆள், சிரிப்பு காட்டுவார் என நாமே கற்பனை செய்து கொள்வோம். திட்டுவதற்குக் கூட ‘போடா ஜோக்கர்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவோம். அது ஒட்டுமொத்தத்தையும் தகர்த்தெரிந்த ஒரு கதாபாத்திரம்தான் ஹீத் லெட்ஜர் ஏற்று நடித்த ஜோக்கர் ரோல். அதற்காகவே இயக்குநர் நோலனுக்கு ஒரு பெரிய சல்யூட்.

ஒரே ஜோக்கர், ஒரே லெட்ஜர் :

இந்தப் படத்திற்குப் பிறகு எல்லாருக்கும் ஜோக்கர் தோற்றத்தில் ஒரு ஆளைக் கண்டாலோ, ஜோக்கர் என்ற பெயரைக் கேட்டாலோ கண் முன் வந்து நிற்பது ஹீத் லெட்ஜர்தான். இவர் தனது ஸ்டைலில் ‘Why So Serious’ என்று கேட்கும் டயலாக் ரொம்ப ஃபேமஸ். ஆனால் இந்த கதாபாத்திரத்துக்காக இவர் பட்ட மெனக்கெடல் ரொம்பவே சீரியஸ்தான். ஜோக்கருக்கு உண்டான குணாதிசயங்களை தனக்குள் விதைக்க இவர் கொடுத்த விலை 43 நாட்கள் தனிமை. ஒரு மோட்டலில் யாரையும் பார்க்காமல், தனியாக 43 நாட்கள் இருந்த பின்னர்தான் படத்தில் நடிக்கவே வந்தார். அந்த காலகட்டத்தில் ஜோக்கர் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் என யோசித்து தன் டைரியில் அவர் எழுதியவற்றைத்தான் நாம் திரையில் பார்த்தோம். உடனே ரொம்ப சீரியஸான ஆள் என நினைத்துவிடாதீர்கள். ஷூட்டிங் சமயத்தில்தான் ஆள் சீரியஸ், மற்ற நேரங்களில் ஒரு ஸ்கேட்டிங் போர்டை எடுத்துக் கொண்டு செட் முழுக்க சுற்றி வந்து ரகளை பண்ணுவாராம்.

ஸ்க்ரிப்டில் இல்லாத பல விஷயங்களை படத்தில் சேர்த்தார் ஹீத் என நோலனே சொல்லியிருக்கிறார். படத்தில் சிறையில் இருக்கும் காட்சி ஒன்றில் நக்கலாக கைதட்டுவார். அந்த சூழ்நிலையில் கைதட்டினால் அந்த சீன் சிறப்பாக அமையும் என்று யோசித்து செய்தார். படத்தில் பல மாஸ் காட்சிகள் இருந்தாலும், ஹாஸ்பிட்டல் சீன்தான் எவர்க்ரீன். அதில் வெளியே வந்து ரிமோட்டை இருமுறை தட்டி ஒரு ஜெர்க் கொடுத்து நடப்பார். பாம் வெடிக்கும் டைமிங்கை கவனித்து அவரே கொடுத்த ரியாக்‌ஷன் இது. ஜாலி ரியாக்‌ஷன்கள் தவிர்த்து இந்த கதாபாத்திரத்திற்காக நிறைய ரிஸ்க்களையும் எடுத்திருக்கிறார். சிறையில் ஹீரோ கிரிஸ்டியன் பேல் இவரை அடிப்பது போல் ஒரு காட்சி இடம்பெறும். காட்சி தத்ரூபமாக இருக்க, கிரிஸ்டியன் பேலிடம் தன்னை உண்மையிலேயே அடிக்கச் சொன்னாராம். ஜோக்கருக்கான மேக்கப் முழுக்கவே ஹீத்தின் ஐடியாதான்!

why_so_serious__by_lisong24kobe-d5ek08j_13082

இந்தப் படத்தில் ஜோக்கர் கிறுக்கனா… முரடனா? இரண்டுமே இல்லை. ஒவ்வொரு செயலிலும் ஒரு சின்ன புத்திசாலித்தனம் இருக்கும். ஹாஸ்பிட்டலில் ஹாட்வே டென்டைக் காணச் செல்லும் காட்சியே அதற்கு சாட்சி. ‘நீ என் பக்கம் சேர்ந்துவிடு, இல்லை இந்த துப்பாக்கியால் என்னை சுட்டுக் கொன்று விடு’ என்று துப்பாக்கியை அவர் கையில் கொடுத்து தன் தலையில் வைத்துக் கொள்வார். அதில் ஜோக்கரின் கையை கூர்ந்து கவனித்தால், துப்பாக்கியின் மேல் இருக்கும் ட்ரிக்கரை ஜோக்கர் பிடித்துக் கொண்டிருப்பார். ‘என்னதான் மெயின் ட்ரிக்கர் உன் கையில் இருந்தாலும், என் அனுமதியில்லாமல் நீ என்னை சுட முடியாது’ என்பதே அதில் கன்வேயாகும் மெசேஜ். ஹீத் லெட்ஜருக்கு முதலில் ‘பேட்மேன்’ கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவே ஆசை இருந்தது. பின் தோற்றத்தையும், நடிப்பையும் வைத்து நோலன் ஜோக்கர் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

Comments

comments