_KAMAL_HAASAN

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மத்திய மாநில அரசுகளை விமர்சித்து தைரியமாக முழக்கமிட்டு அனைத்து மீடியாக்களையும் தன் பக்கம் திருப்பியவர் ஜூலியானா. சமூக ஊடகங்களால் வீரத் தமிழச்சி என்று வர்ணிக்கப்பட்ட ஜூலி, தனது பிக் பாஸ் வியாபாரத்துக்குப் பொருத்தமானவர் என்று தேர்வு செய்தது விஜய் டி.வி.

நூறு அல்லது இருநூறு கோடிகளை செலவு செய்து, சில ஆயிரம் கோடிகளை அறுவடை செய்யும் பிக் பாஸ் வணிகத்துக்காக முதலில் வளைக்கப்பட்டவர் கமல் ஹாசன். அவருக்கு 20 கோடி ருபாய் சம்பளம் பேசப்பட்டதாக தகவல். பிக் பாஸ் பெற்றுள்ள பெரும் வணிக வெற்றி காரணமாக இந்த சம்பளம் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அடுத்ததாக சில லட்சம் சம்பளத்தில் 100 நாள் கால்ஷீட் தரக்கூடிய சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர்களும், நடிகைகளும் வளைக்கப்பட்டனர். இந்த நடிகர் – நடிகை வட்டாரத்துக்கு வெளியில் இருந்து அழைத்துவரப்பட்ட ஒரே நபர் ஜூலி. ஒரே காரணம் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது அவருக்கு கிடைத்த பிரபலம்.

ஆரம்பத்தில் ஜூலியை காயத்ரியும், ஆரத்தியும் வறுத்தெடுப்பதுபோல் நாடக காட்சிகள் அமைக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கு ஜூலி மீது பரிதாபம் ஏற்படுத்தப் பட்டது. அப்போது ஜூலியால் தான் டிஆர்பி ரேட்டே எகிறியது.
அது போர் அடிக்கத் தொடங்கியதும், ஜூலியை நாடக காரியாக சித்தரித்தும், ஓவியாவை புதுமைப் பெண்ணாக சித்தரித்தும் நாடக காட்சிகள் அமைக்கப்பட்டன. சீரியல் நடிகைகளே தோற்குமளவுக்கு கண்ணீர் சிந்தி, கத்தி நடித்த ஜூலி மீது வெறுப்பு ஏற்படுத்தப்பட்டது. எதற்கெடுத்தாலும் சிரித்துக்கொண்டு, டேக் இட் ஈஸி பாலிசி கொண்ட புதுமைப் பெண்ணாக சித்தரிக்கப்பட்டார் ஓவியா.

பின்னர் அதுவும் போர் அடிக்கத் தொடங்கியதும், ஓவியாவின் அணுகுமுறை பிக் பாஸ் கமல் ஹாசனாலேயே விமர்சிக்கப்பட்டது. “ஒருவர் வருந்தி மன்னிப்பு கேட்கும்போது நீங்கள் இப்படி சிரிப்பது மனிதப் பண்பு ஆகாது” என்று வகுப்பு எடுக்கப்பட்டது.

ஓவியாவை கீழிறக்கி, ஜூலியை தட்டிக்கொடுக்கும் இந்த அணுகுமுறை இன்னும் எத்தனை நாள் ஓடும் என்று தெரியவில்லை.

ஆனால் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றுவதற்காகவே ஒருவரை சில நாட்கள் வானளாவத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்பதும், பின்னர் அவரை டமார் என்று கீழே போட்டுவிட்டு அடுத்தவரைத் தூக்கி வைக்கிறார்கள் என்பதும் ரசிக மகா ஜனங்களுக்கு தெரிவதில்லை. எல்லாமே எழுதப்பட்ட ஸ்க்ரிப்டுக்கு ஏற்ப, இயக்கப்பட்ட காட்சிகள் என்பது எத்தனை பேருக்குப் புரியும்?

ரசிகர்களின் அறியாமைதானே தொலைக்காட்சி உரிமையாளர்களின் மூலதனம்!

Comments

comments