NTLRG_20170704151838739249

கோடை விடுமுறை முடிந்ததும், ஜுன் மாதத்தில் அதிகப் படங்களே வராது என்று சொல்லியவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது ஜுன் மாதம். அதிலும் மாதக் கடைசியில் வெளிவந்த படங்களுக்கு தியேட்டர்காரர்களே ‘கேளிக்கை வரி எதிர்ப்பு ஸ்டிரைக்’ என்ற ஒரு விஷயத்தால் பேரதிர்ச்சியைக் கொடுத்துவிட்டார்கள்.

ஜுன் 30ம் தேதி வெளிவந்த 7 படங்கள் என்ன பாவம் செய்தது?. திரையுலகத்தைச் சேர்ந்தவர்களே அந்த 7 படங்களையும் கழுத்தை நெறித்துக் கொன்றதை எந்த வகையில் சேர்த்துக் கொள்வது. இந்தப் படங்களுக்கு குறைந்த பட்சம் ஒரு வார காலம் நேரம் கொடுத்து அந்தப் படங்கள் முடிந்தவரையில் வசூலைச் செய்ததும், ஸ்டிரைக்கை ஆரம்பித்திருக்கலாமே. இதோ, ஸ்டிரைக் ஆரம்பித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. 7 படங்களின் தயாரிப்பாளர்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜுலை மாதத்தில் படங்கள் வருவது எந்த அளவிற்கு பாதிக்கப்படப் போகிறது என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

ஜுன் மாதத்தில் மொத்தமாக 25 படங்கள் வெளிவந்துள்ளன. கோடை விடுமுறைக்கு முன்பாக மார்ச் மாதத்தில் 25 படங்கள் வெளிவந்ததுதான் இந்த வருடத்தின் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக படங்கள் வந்தது. அதை மீண்டும் கோடை விடுமுறைக்குப் பின்பு வந்த ஜுன் மாதத்திலும் நிகழ்ந்திருக்கிறது.

ஜுன் 2ம் தேதி ‘ஒரு இயக்குனரின் காதல் டைரி, நீதான் ராஜா, டியூப் லைட், 7 நாட்கள், முன்னோடி, விளையாட்டு ஆரம்பம், போங்கு, ஒரு கிடாயின் கருணை மனு’ ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ மட்டுமே சிறந்த படமாக அமைந்தது. இந்தப் படம் வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் தமிழிலும் தரமான புதிய இயக்குனர்கள் அடுத்தடுத்து வந்து கொண்டேயிருக்கிறார்கள் என்ற தைரியத்தைக் கொடுத்துள்ளது. இந்தப் படம் தவி மற்ற 7 படங்களும் வந்த சுவடு தெரியாமல் ஓடிப் போயிருக்கின்றன.

ஜுன் 9ம் தேதி ‘சத்ரியன், ரங்கூன்’ ஆகிய படங்கள் வெளிவந்தன. தொடர்ந்து தோல்விப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் விக்ரம் பிரபு, ‘சத்ரியன்’ படம் தனக்கு நல்ல திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்த்தால், ‘சத்ரியன்’ படமும் அவருக்கு சறுக்கலையே ஏற்படுத்தியது.

அறிமுகப்படத்திலிருந்து தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த கௌதம் கார்த்திக்குக்கு ‘ரங்கூன்’ படம் பெரிய வெற்றிப் படமாக அமையவில்லை என்றாலும் அவருடைய திறமையை வெளிக்காட்ட உதவியது. சரியான விளம்பரத் திட்டமிடல் இல்லாதது ‘ரங்கூன்’ படத்திற்கு தோல்விக்கான காரணமாக அமைந்தது.

ஜுன் 15ம் தேதி ‘பீச்சாங்கை’ என்ற ஒரே ஒரு படம் அமைந்தது. புதிய கதைக் களத்தைக் கொடுத்திருந்தாலும் ‘பீச்சாங்கை’ என்ற தலைப்பே இந்தப் படத்திற்கு வில்லனாக அமைந்தது. சில இளம் அறிமுக இயக்குனர்களின் ஆர்வக் கோளாறின் வெளிப்பாடுதான் இம்மாதிரியான தலைப்புகள். இனியாவது, தலைப்பு என்பது ஒரு படத்திற்கு எவ்வளவு அர்த்தமானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

ஜுன் 16ம் தேதி ‘வெருளி, தங்கரதம், உரு, மரகத நாணயம்’ ஆகிய நான்கு படங்கள் வெளிவந்தன. இவற்றில் ‘மரகத நாணயம்’ படம் மட்டும் வித்தியாசமான பேய்க் கதைப் படமாக அமைந்து ஓரளவிற்கு வெற்றியைப் பெற்றது. மற்ற படங்கள் ஜுன் மாதப் படங்களின் எண்ணிக்கையின் கூட்டலைக் கொஞ்சம் அதிகரித்தது.

ஜுன் 23ம் தேதி ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன், வனமகன்’ ஆகிய படங்கள் வெளிவந்தன. இயக்குனர் விஜய் வழக்கம் போல ஒரு ஹாலிவுட் படத்தின் கதையைக் காப்பியடித்து தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி உல்டா செய்து ‘வனமகன்’ படத்தைக் கொடுத்தார். பெரிய வரவேற்பு எல்லாம் இந்தப் படத்திற்கு அமையாது என்பது எதிர்பார்த்த ஒன்றே. சிம்பு நடித்து வெளிவந்த ‘அஅஅ’, எதற்கு இப்படிப்பட்ட படத்தை எல்லாம் எடுத்து பணத்தை வீணாக்குகிறார்கள் என்பதுதான் படம் பார்த்த சராசரி ரசிகனின் மனநிலையாக இருந்தது.

ஜுன் 30ம் தேதி ‘அதாகப்பட்டது மகாஜனங்களே, எங்கேயும் நான் இருப்பேன், இவன் தந்திரன், இவன் யாரென்று தெரிகறதா, காதல் காலம், யானும் தீயவன், எவனவன்’ ஆகிய படங்கள் வெளிவந்தன. தியேட்டர்காரர்களின் திடீர் ஸ்டிரைக்கால் இந்தப் படங்கள் மூன்று நாட்களுக்குள்ளாகவே தங்களது வருமானத்தை இழக்க வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டது. மற்ற படங்களுக்கு எப்படியோ, ‘இவன் தந்திரன்’ படம் மட்டுமாவது தியேட்டர்காரர்களின் தந்திரமான ஸ்டிரைக்கிலிருந்து தப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கும் அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது. இப்படி ஒரு நிலை இனி வரக்கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம், இந்தத் தயாரிப்பாளர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்.

ஜுன் மாதத்தில் வந்த 25 படங்களில் ‘மரகத நாணயம்’ படம் மட்டுமே ஓரளவிற்கு வசூலான படமாக இருந்தது. ‘இவன் தந்திரன்’ படம் இந்த வாரமும் தியேட்டர்களில் தொடர்ந்திருந்தால் கண்டிப்பாக வெற்றிப் படமாவாவது அமைந்திருக்கும்.

2017ம் ஆண்டின் அரையாண்டு காலம் இந்த ஜுன் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. நமது கணக்குப்படி 100 படங்கள் வெளிவந்துள்ளன. அடுத்த ஆறு மாதங்களிலாவது அதிகப் படங்கள் வராமல் குறைவாக வந்தாலும் தரமான படங்களாவது வரட்டும் என்றுதான் ஒவ்வொரு ரசிகர்களும் எதிர்பார்ப்பார்கள்.

ஜுன் மாதம் வெளியான படங்கள்…

ஜுன் 2
ஒரு இயக்குனரின் காதல் டைரி, நீதான் ராஜா, டியூப் லைட், 7 நாட்கள், முன்னோடி, விளையாட்டு ஆரம்பம், போங்கு, ஒரு கிடாயின் கருணை மனு

ஜுன் 9
சத்ரியன், ரங்கூன்

ஜுன் 15
பீச்சாங்கை

ஜுன் 16
வெருளி, தங்கரதம், உரு, மரகத நாணயம்

ஜுன் 23
அன்பானவன் அசராதவன் அடங்காதவன், வனமகன்

ஜுன் 30
அதாகப்பட்டது மகாஜனங்களே, எங்கேயும் நான் இருப்பேன், இவன் தந்திரன், இவன் யாரென்று தெரிகிறதா, காதல் காலம், யானும் தீயவன், எவனவன்

Comments

comments