_L6A0021(1)_11478

தமிழகத்தில், வரி விலக்கு பெற்ற படத்திற்கு கூட, அதிக கட்டண வசூல் செய்வதும், வாகன நிறுத்தம், தின்பண்டம் என, அனைத்திற்கும் மும்மடங்கு விலை நிர்ணயிப்பதுமாக இருந்த தியேட்டர்களுக்கு, ஜி.எஸ்.டி., வைத்த, செக் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தியேட்டர்கள் ஸ்டிரைக் : ஜி.எஸ்.டி., மற்றும் கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, நான்கு நாட்களாக நடந்த போராட்டத்தில், 1,127 தியேட்டர்கள் மூடப் பட்டன. இதனால், ஒரு நாளுக்கு, 22 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆனாலும், இறுதி வரை, அரசு செவி சாய்க்கவில்லை. இதனால், வேறு வழியில்லாமல், தியேட்டர்கள், நேற்று முதல் திறக்கப்பட்டன.

பொய் கணக்கு காட்ட முடியாது : பேச்சு நடத்தி கட்டணத்தை நிர்ணயிக்க, அரசும், திரைத் துறையி னரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இனி, டிக்கெட் கட்டணம் உயர்ந்தாலும், அதன்பலன், அரசுக்கே செல்லும். ஆனால், ஒரே நாளில், 100 கோடி ரூபாய் வசூல் என, கூற முடியாது. அதே போல், டிக்கெட் வசூலிலும், பொய் கணக்கு காட்ட முடியாது.

டிக்கெட் விலை கிடு கிடு : ஜி.எஸ்.டி.,யால், பெங்களூருவில், 200 ரூபாயாக இருந்த டிக்கெட் விலை, 250 ரூபாயாக உயர்ந்து உள்ளது. அதே போல், கேரளாவில், 250; தெலுங்கானாவில், 225 ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், மல்டி பிளக்ஸ் தியேட்டர்கட்டணம், 250 – 350 வரை விலை உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

லைசன்ஸ் ரத்து : இது குறித்து, ரசிகர்கள் கூறியதாவது: தியேட்டர், கேன்டீனில் பொருட்களுக்கு, மும் மடங்கு விலை ஏற்றி விற்பதை, அரசு தடுக்க வேண்டும். இல்லையென்றால், வெளியிலிருந்து கொண்டு வரப்படும் பொருட்களை அனுமதிக்க வேண்டும்.கார் நிறுத்தத்திற்கு, 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். பெரும் பாலான தியேட்டர் கழிப்பறைகள், சுத்தமாக இருப்பதில்லை. இவை அனைத்தையும் கணக்கில் வைத்து, டிக்கெட் கட்டணத்தை, அரசு நிர்ணயிக்க வேண்டும். மீறும் தியேட்டர் களின், லைசென்சை ரத்து செய்ய வேண்டும் என்பதே, எங்கள் விருப்பம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Comments

comments