[

கடந்த 23ஆம் தேதி வெளியான ஜெயம் ரவியின் வனமகன் திரைப்படமும், 30ஆம் தேதி வெளியான கௌதம் கார்த்திக்கின் இவன் தந்திரன் படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் தமிழ்நாடு முழுக்க உள்ள திரையரங்குகள் ஜூலை 3 ஆம் தேதி முதல் மூடப்பட்டன.

கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி அனைத்து தமிழ் சினிமா சங்கங்களும் தமிழக அரசோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

நேற்று திரையரங்குகள் ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்று இன்று திரையரங்குகளை மீண்டும் திறந்துள்ளனர்.

திரையரங்க உரிமையாளர் அடாவடியாய் செய்த அடைப்பு போராட்டத்தினால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தது வனமகன், இவன் தந்திரன் படங்கள்தான்.

ஸ்ட்ரைக் வாபஸ் பெறுவதாக அறிவிப்பு வெளியானதும் இரண்டு படக்குழுவினரும் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் ஜெயம் ரவி, இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் அழகப்பன், கௌதம் கார்த்திக், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் கண்ணன், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

“நான் இந்த படம் இல்லைனா வேற படத்தில் நடிக்கப்போய் விடுவேன், ஆனால் இயக்குனர் கண்ணனுக்கு அப்படி இல்லை.

ரொம்ப கஷ்டத்தில் தான் இந்த படத்தை எடுத்திருக்கிறார்.

ரங்கூன் ஏதோ ஒரு படம் ஓடிருச்சுனு இல்லாம, அடுத்தடுத்து ஹிட் என்றாகியிருக்க வேண்டியது.

கடவுள் புண்ணியத்தால் மீண்டும் ரிலீஸாகிறது.

தமிழ் சினிமாவில் பல தேவையில்லாத சின்ன சின்ன விஷயங்களை குறைத்தால் சினிமா இன்னும் சூப்பராக இருக்கும்.

மக்கள் எப்போதுமே கோடிகளில் புரளும் சினிமாக்காரர்களுக்கு என்ன பிரச்சினை என்ற கோணத்திலேயே பார்க்கிறார்கள்.

இங்கும் பல பிரச்சினைகள் இருக்கு.

திரையரங்குகளின் ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லோரும் தியேட்டருக்கு வந்து படத்தை பாருங்கள்” என்றார் ஆர்.ஜே.பாலாஜி.

“வனமகன் படம் இயக்குநர் விஜயின் கனவுப்படம். வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. அது மீண்டும் தொடர வேண்டும். படத்தை விளம்பரப்படுத்திய பல ஊடக நண்பர்களும், நீங்கள் கஷ்டப்படும் இந்த சூழலில் எங்களுக்கு பணம் வேண்டாம் என்று சொல்லி எங்களுக்கு ஆதரவு தந்தனர்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் தயாரிப்பாளர் கோ. தனஞ்செயன்.

“இரண்டாவது வாரம் 30 திரையரங்குகள் அதிகமாகி, வினியோகஸ்தர்கள் சந்தோஷப்பட்டு, வணிக வெற்றி பெறும் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில்தான் இந்த ஸ்ட்ரைக் ஆரம்பித்தது.

நான், இயக்குனர் கண்ணன் எல்லாம் தயாரிப்பாளர் ஆனது ஒரு விபத்து.

இதற்கிடையில் சிடியில் நிறைய பேர் பார்த்து விட்டு என்னிடம் பேசினார்கள்.

இதே மாதிரி ஒரு அனுபவம்தான் தலைவா படத்தின் போதும் எனக்கு ஏற்பட்டது.

எனக்கே கூட தெலுங்கு சினிமா அல்லது விளம்பரப் படம் எடுக்க போய் விடலாமா என்று தோன்றியது.

இந்த சினிமாவை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன.” என்றார் இயக்குனர் விஜய்.

“வாட்ஸாப்பில் நான் வெளியிட்ட ஆடியோ ஒரு தனிப்பட்ட மனிதனின் வலி இல்லை.

ஒட்டு மொத்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்களும் இன்று அந்த வலியை அனுபவித்து வருகிறார்கள்.

இரண்டு வருடம் கஷ்டப்பட்டு ஸ்க்ரிப்ட் எழுதி எடுத்த படம்.

வேறு ஒரு தயாரிப்பாளர் கடைசி நேரத்தில் விலகியதால் நான் தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த கஷ்ட காலத்தில் உடன் நின்ற எல்லாருக்கும் நன்றி” என்றார் இயக்குனர் கண்ணன்.

“பல ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படுவதை பார்த்து மிகவும் மனம் உடைந்து போனேன்.

நடிகர்கள் வெளியில்தான் தன்னம்பிக்கையோடு தெரிவோம்.

உள்ளுக்குள் பாதுகாப்பற்ற நிலையைத்தான் உணர்கிறோம்.

அந்த சமயத்தில் ரசிகர்களின் ஆதரவு தான் எங்களுக்கு பூஸ்ட்.

நிறைய இடங்களில் நாங்கள் கேட்காமலேயே திருட்டு விசிடியை ரசிகர்கள் தடுத்திருக்கிறார்கள்.

முழு அனுபவம் தியேட்டரில் தான் கிடைக்கும்.

என்னை பிடிக்கலைனா என்ன பார்க்காதீங்க, மற்றவர்களின் உழைப்பை மதித்து படத்தை பாருங்க” என்றார் கௌதம் கார்த்திக்.

“மே மாதமே வனமகன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தோம். தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக்னு சொன்னதை மதித்து படத்தை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தோம். பல தடங்கல்களை தாண்டி ரிலீஸ் செய்திருக்கிறோம்.

சினிமா துறையினருக்கும் கஷ்டம் இருக்கும் என்பது ஏன் எல்லோருக்கும் புரிவதில்லை.

நம் தமிழ்நாட்டுக்கு சினிமாதான் ஒரே கொண்டாட்டம்.

பல நல்ல விஷயங்களும் சினிமாவில் தான் சொல்லப்படுகின்றன. அதை அழிய விடக்கூடாது” என்றார் ஜெயம் ரவி.

Comments

comments