producer-council_vishal2-740x431

ஃபெப்சி அமைப்பைச் சேர்ந்த திரைப்படத்தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையில்லான பிரச்சனை இன்று நேற்றாக அல்ல, காலம்காலமாகவே புகைந்து கொண்டிருக்கிறது.

இதற்கு என்ன தீர்வு என்று தெரியாமலே ஒருவர் மீது ஒருவர் வன்மத்துடனும் போலியான புன்னகையுடனும் இணைந்து பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் தொடர்ச்சியாக, இனி ஃபெப்சி தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பு நடத்த மாட்டோம் என்று அறிவித்துவிட்டார் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால்.

அவரது அறிவிப்பு தயாரிப்பாளர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சி அலையை உண்டாக்கி இருக்கிறது.

விஷாலை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.

இன்னொரு பக்கம், விஷாலின் இந்த அறிவிப்பினால் வேலைவாய்ப்பு பறிபோகும் ஆபத்தை உணர்ந்த தொழிலாளர்கள் விஷால் மீது மண்ணை வாரித்தூற்றிக் கொண்டிருக்கின்றனர்.

உச்சகட்டமாக விஷாலுக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஒருபக்கம் கொலை மிரட்டல்…. மறுபக்கம் கொண்டாட்டம்…. என இரண்டுவிதமான வினைகளை எதிர்கொண்டு வருகிறார் விஷால்….

தொழிலாளர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் இப்பேற்பட்ட ஆதரவு ஏன்?

பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் இங்கே இரண்டு பேருடைய கருத்துக்கள்…

மீரா கதிரவன்.

இயக்குநர்/தயாரிப்பாளர்

“எங்களுடைய விழித்திரு திரைப்படம் சென்னையிலுள்ள சாலைகளில் ஓர் இரவில் நடக்கிற கதை… ஆகையால் படப்பிடிப்பு முழுவதுமே இரவிலேயே நடத்த வேண்டியிருந்தது.

அதுவும் இரவு பத்து மணி தாண்டினால் மட்டுமே சாலையில் கேமராவை வைக்க முடிந்தது. மாலை ஆறு மணி முதல் நள்ளிரவு 2 மணி வரைக்கும் ஒரு கால்ஷீட் ஆகும். 2மணி முதல் இன்னொரு கால்ஷீட் துவங்கிவிடும். 5 அல்லது 6 மணிக்குள் இரவு முடிந்துவிடும். இரண்டாவது கால்ஷீட் என்பது வெறும் மூன்று மணி நேரங்கள் மட்டுமே. பகலில் ஒரு கால்ஷீட்டில் முடியும் படப்பிடிப்பு வேலைகள் இரவில் இரண்டு கால்ஷீட்டுகளிலும் முடியாது. இதில் அதிகமான ஊழியர்களின் உறக்கச்சடவு வேறு. ஏர்போர்ட் மற்றும் ரயில் நிலையங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு நள்ளிரவில் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதால் அது மாதிரியான படப்படிப்புகளுக்கு இரவு பத்து மணி முதல் காலை 5 மணிவரை ஒரு கால்ஷீட் அடிப்படையிலேயே தினக்கூலி தரப்படும் என்கிற விதிவிலக்கான சட்டங்களை பெப்சி மற்றும் இதர கூட்டமைப்புகள் சேர்ந்து வகுத்து வைத்திருக்கின்றன. அது போன்ற விதிவிலக்கில், ஒரே இரவில், சாலைகளில் நடக்கிற விழித்திரு படப்பிடிப்பையும் ஒரு கால்ஷீட் முறையில் தினக்கூலி வழங்குவதற்கு அனுமதி கேட்டு அப்போதைய பெப்சி தலைமை மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடமும் பேசிப்பார்த்தேன். அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.

வேறு வழியில்லாமல் படப்பிடிப்பு முழுவதையும் ஒன்னரை கால்ஷீட்டில் நடத்தினோம். ஆனால் ஒரு கால்ஷீட்டில் நடக்கும் வேலைகளில் பாதி கூட இரண்டு கால்ஷீட்டில் நடக்கவில்லை. அது தான் உண்மை. இதனாலேயே எனக்கு அதிக பொருட்செலவும் ஆனது. ஒரு படத்தின் தயாரிப்பாளரின் பொருளாதார சக்தி, கதை அமைப்பு, அது நடக்கும் லொக்கேஷன்ஸ் போன்ற தவிர்க்கமுடியாத சிக்கல்களையும் கருத்தில் கொண்டே பெப்சி போன்ற அமைப்புகளின் பைலாக்கள் உருவாக்கப்பட வேண்டும். எல்லாம் எக்கேடு கெட்டுப்போனால் எங்களுக்கென்ன.. இதையெல்லாம் பொறுத்து படம் தயாரிக்க வந்தால் வா..

இல்லையென்றால் வராதே என்கிற மாதிரியான அனுகுமுறை எந்த சங்கத்திற்கும் உகந்ததல்ல. பென்சிலைப்போல… பேப்பரைப்போல சினிமா உருவாக்கத்திற்கான கருவிகளும் மனித சக்திகளும் மலிந்து ஒரு முழுமையான இண்டிபெண்டண்ட் சினிமாவை நோக்கி தமிழ் திரைப்படத்துறை நகர்ந்து கொண்டிருக்கும் யதார்த்தமான சூழலில் பெப்சி அமைப்பிற்கு அடிப்படை புரிதல் அவசியமாகிறது.

பல வருடங்கள், பல தலைவர்கள் என வெறும் பேச்சு வார்த்தைகளிலும் புலம்பலிலும் மட்டுமே இருந்த இதற்கு தலைவர் திரு.விஷால் மூலம் ஒரு அதிரடி தீர்வு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்கும் நன்றிக்கும் உரியது. இதைத்தொடர்ந்து சினிமாவின் அனைத்துத் துறைகளிலும் சம்பளத்தைத் தாண்டி உருவாகிற வீண் செலவுகளுக்கும் விரயங்களுக்கும் விரைவிலேயே தீர்வைக்கொண்டு வந்து நலிந்து கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களைக் காப்பார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.”

கஸாலி
இயக்குநர்/தயாரிப்பாளர்

“படம் தயாரிக்க வரும் தயாரிப்பாளர்களை நடக்கவிடாமல், ஓட விடாமல் காலில் சங்கிலி கொண்டு கட்டப்பட்டிருந்த இரும்புக் குண்டு, தலைவர் விஷாலின் ஆவேச சம்மட்டி கொண்டு உடைக்கப்பட்டது. கலந்துகொண்ட எல்லா தயாரிப்பாளர்களுக்கும் ஒரு நிமிடம் தங்கள் காதுகளையே நம்ப முடியவில்லை.

“இனி தயாரிப்பாளர்கள் சுதந்திரமானவர்கள். ஃபெஃப்ஸி அமைப்பில் உள்ள உறுப்பினர்களை மட்டும்தான் வைத்துப் படம் எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இனி கிடையாது. அதற்கு முன்னுதாரணமாக நானே எனது துப்பறிவாளன் படப்பிடிப்பை இரண்டு நாளில் சிதம்பரம் பிச்சாவரத்தில் கட்டுப்பாடில்லாத சுதந்திரத்தில் நடத்தப் போகிறேன்”.

வந்திருந்த அனைவருக்கும் அவ்வளவு சந்தோசம்.

யாருடைய வயிற்றிலும் அடிப்பது நோக்கமல்ல. அதேநேரம் தயாரிப்பாளர்கள் இவர்களிடம் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. அதற்கு நானே உதாரணம்.

இப்போது ஆர்வமான இளைஞர்கள் நிறையப் பேர் விஸ்காம் படிக்கிறார்கள்.

வேலை என்று வந்துவிட்டால் வெள்ளைக்காரனையும் தோற்கடிக்கும் ஆர்வத்தோடு செய்கிறார்கள்.

சங்கம் இல்லை. சாதிக்க வேண்டும் என்ற வெறியைத் தவிர வேறு இல்லை. இனி இவர்களைப் போன்ற உழைப்பாளிகள்தான் பொக்கிஷம். சினிமாவின் எதிர்காலம்.

வீண் விரையம் செய்ய எத்தனிக்கும் இயக்குநருக்கும் பொறுப்பை உணர்த்தப்படும்.

பேசியபடி சம்பளத்தை ஒழுங்காகத் தராத தயாரிப்பாளருக்கும் இது பொருந்தும்.

சுதந்திரம்!

பொறுப்பைச் சுமக்கும் சுதந்திரம்!

வேலை செய்ய விருப்படும் யாரையும் வைத்து வேலை செய்யலாம் என்பதைக் கேட்கம்போதே… நல்ல, தரமான படைப்புகள் இனி வருவதற்கான விடியல் தெரிகிறது.

தயாரிப்பில் ஆரம்பித்த இந்த பயன் இனி வெகு விரைவில் பட வெளியீட்டிலும் முறைப்படுத்தப்படும்.

தியேட்டர் மட்டும்தான் வருமானத்துக்கு ஒரே வழி என்று கண்களை மூடிய பூனையைப் போல் கருதாமல், மயக்கம் தெளிந்து, பல வழிகளிலும் வருமானம் ஈட்டும் நடவடிக்கையைத் தொடங்குவோம்.

இந்தப் பிடிவாதம் தொடரட்டும்.

சாதனையைப் பறைசாற்றும் சந்தோசமான நாள்!”

Comments

comments