_18494 (1)

திருவிடைமருதூர்: கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுப்பதை எதிர்த்து போராடி கைது செய்யப்பட்ட 10 பேரை விடுவிக்காவிட்டால் லட்சிய திமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கதிராமங்கலத்தில் ஆழ்துளை கிணறுகள் மூலம் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியை ஓஎன்ஜிசி நிறுவனம் எடுத்து வருகிறது.இதனால் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக பல்வேறு போராட்டங்கள் அப்பகுதி மக்கள் நிகழ்த்தி வருகின்றனர். கதிராமங்கலம் பொது மக்கள் நடத்தி வரும் 19-ஆவது நாள் காத்திருப்பு போராட்டத்தில் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால் இந்த பொன் விளையும் பூமியானது பாலைவனமாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 80-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களை திமுக கொண்டிருந்தாலும் இது திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் அக்கட்சி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வராமல் உள்ளது.

கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர். இது கண்டிக்கதக்கது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் லட்சிய தி.மு.க. போராட்டம் நடத்தும் என்றார் அவர்.

Comments

comments