_18494 (1)

சர்ச்சைகள் தாண்டி ஹிட்டடித்துக்கொண்டிருக்கிறது `பிக் பாஸ்’. கடந்த மூன்று வாரங்களாக நாளொரு சர்ச்சை, வாரம் ஒரு திருப்பம் என `பிக் பாஸ்’ மாஸ் காட்டிக்கொண்டிருக்கிறது. இதனாலேயே அன்புமணி முதல் சராசரி  மனிதன் வரை மற்றவர்களின் கவன ஈர்ப்புக்கு பிக் பாஸ் பெயரைத்தான் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். பெண்கள் மட்டுமே சின்னத்திரையில் அதிக கவனம் செலுத்தக்கூடியவர்கள் என்ற பிம்பத்தை உடைத்திருக்கிறது `பிக் பாஸ்’ நிகழ்ச்சி.  டீக்கடைகளில், அலுவலக கேன்டீன்களில், அலுவல்ரீதியான மீட்டிங்குகளில், மால்களில், கடற்கரைகளில், மீம்களில், சமூக வலைதளங்களில் என எல்லா இடங்களிலும் இப்போது `பிக் பாஸ்’தான் பேசுபொருள். இந்த நிகழ்ச்சிகுறித்து ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் உள்ளன. `பிரபலங்களின் மறுபக்கத்தை, நேரம், இடம், சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் மனித மனநிலையைப் படம்பிடித்துக் காட்டும் நிகழ்ச்சி இது’ எனச் சொல்லப்பட்டாலும், `கலாசாரச் சீரழிவை ஏற்படுத்துகிறது. மற்றவர்களின் அந்தரங்கங்களைப் படம்பிடித்துக் காட்டுகிறது’ எனப் பல்வேறு காரணங்களைச் சொல்லி எதிர்ப்பவர்களும் உண்டு.

எது சரி, எது தவறு என்ற விவாதத்துக்குச் செல்வதற்கு முன், இப்போதைக்கு இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சி பார்க்கும் அநேக மக்களிடையே பேசுபொருளாகியிருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மூன்று வாரங்கள் முடிந்துவிட்ட நிலையில் `பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து ஐந்து பேர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் / வெளியேறியிருக்கிறார்கள். கடந்த மூன்று வாரங்களில், ஓவியாவும் ஜூலியும் வீட்டிலிருந்து வெளியேற்றப்படவேண்டியவர்களின் பட்டியலில் இரண்டு முறை பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த இரண்டு முறையும் மக்களின் ஓட்டுகளால் இவர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதாக `பிக் பாஸ்’  நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. இருமுறையும் ஓவியாவே அதிக ஓட்டுகள் பெற்று காப்பாற்றப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. ஆன்லைனில் விகடன்.காம் நடத்திய சர்வேயில்கூட ஓவியாவுக்கு லைக்ஸ் குவிந்தன.

`ஓவியா, அழகாக இருக்கிறார்; மழையில் ஆடுகிறார்; கேமரா முன்பு ஏதாவது செய்கை செய்துகொண்டே இருக்கிறார். அதனால்தான் அவருக்கு அதிகம் ஓட்டுகள் வருகின்றனபோல’ எனக் கவலைப்படுகிறார் காயத்ரி ரகுராம். ஆனால், அவற்றை எல்லாம் தாண்டி ஓவியாவின் பிஹேவியர்தான் அவருக்குப் பெரும் ரசிகப் பட்டாளத்தைத் தந்திருப்பதாகத் தெரிகிறது.

இதுவரை நடந்த முடிந்த மூன்று வார நிகழ்ச்சிகளில் ஓவியா, மற்றவர்களைவிட எந்த வகையில் அதிகக் கவனம் ஈர்த்திருக்கிறார்?

1. கடுமையாக எதிர்க்காதே:

தனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால், அதை வெளிப்படையாகச் சொல்லிவிடுவதில்லை. நாசூக்காகத் தெரிவித்துவிடுகிறார். `எனக்கு டிஃப்ரென்ட் ஒப்பினியன் இருக்கு’ எனச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறார். தன் பேச்சை யாரும் காதுகொடுத்துக் கேட்கவில்லையெனில், அவர்களிடம் மீண்டும் சென்று தன் கருத்துக்கு நியாயம் கற்பிப்பதெல்லாம் கிடையாது. அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுகிறார்.

2. எதிராளியை உருவாக்கிக்கொள்ளாதே:

ஓர் இடத்தில் ஒருவன் ஹீரோ ஆக வேண்டுமென்றால், அங்கே வில்லனும் இருக்க வேண்டும். ஓவியா வேண்டுமென்றே யாரையும் எதிராளியாக உருவாக்கிக்கொள்வதில்லை. தன்னை எதிரியாக ஒருவர் கருதினாலும் அதுகுறித்து அவர் அலட்டிக்கொள்வதில்லை; வேண்டுமென்றே யாரிடமும் வம்பிழுப்பதுமில்லை.

3. பாதிக்கப்பட்டவனிடம் பேசுதல்:

யாரை மற்றவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒதுக்குகிறார்களோ, அவர்களிடம் சென்று இவர் மட்டுமே ஏதாவது பேசுகிறார். அதே சமயம் ஒதுக்கப்பட்ட நபரிடம் சென்று அவர்களின் கோபத்தை மேலும் தூண்டிவிடுமாறு எதையும் சொல்வது கிடையாது. அறிவுரைகளையும் அளிப்பது கிடையாது. மற்றவர்களிடம் பழகுவதைப் போன்ற அதே மனநிலையில் பழகுகிறார். தனக்கு காரியம் ஆக வேண்டும் என்பதற்காகக் கூட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் நபர் நண்பனாகவே இருந்தாலும்கூட, அமைதிகாப்பவர்கள்தான் இங்கே அதிகம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் யார் பாதிக்கப்பட்டாலும் சகஜமாக ஓவியா பேசுவது மக்களுக்குப் பிடித்திருக்க வாய்ப்பிருக்கிறது. `கூட்டத்தில் யாரும் பெரியவர் கிடையாது. எல்லோரும் சமம்தான்’ எனக் கருதும் ஒருவராலும் எதற்காகவும் பயப்படாத சுயநலமற்றவர்களால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும் என்பது தெளிவு.

4. லிவ் த மொமென்ட்:

வீட்டில் அதிகபட்சம் இருக்கப்போவது நூறு நாள்கள். எவ்வளவு நாள்கள் இருக்கிறோமோ அப்போது அங்கே கிடைக்கக்கூடிய சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறார். `ஊரெல்லாம் மழை பெய்ய வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால், வீட்டுக்குள் சென்று அடைந்துகொள்கிறார்கள்’ என மக்களின் மனநிலை பற்றிச் சொன்னார் கமல்ஹாசன். ஓவியாவோ மழை பெய்தால் அதில் நனைகிறார்; ஆடுகிறார். எந்த நிகழ்வையும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அப்போதைய நிமிடத்தை சந்தோஷமாகக்  கழிக்கவே விரும்புகிறார். காதல் வந்தால் பட்டெனச் சொல்லிவிடுகிறார். டாஸ்க் தரப்பட்டாலும் அதையும் மகிழ்ச்சியாகவே செய்கிறார்.

5. புறணி பேசாமை:

எந்தக் காரணத்துக்காகவும் தொடர்ந்து ஒருவரைப் பற்றி புறணி பேசுவதைத் தவிர்த்துவருகிறார் ஓவியா. அதே சமயம் எவரின் மனதையும் காயப்படுத்தும்விதமாகப் பேசுவதையும் தவிர்க்கிறார். எந்தக் காரணத்துக்காகவும் மற்றவர்களைப் பற்றி கீழ்த்தரமாகப் பேசுவது, வன்மத்துடன் பேசுவது போன்றவற்றையும் செய்வதில்லை.

இதுபோன்ற காரணங்களால், மக்களுக்கு ஓவியாவைப் பிடித்திருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் உண்மைத்தன்மை மர்மமாகவே இருக்கும் நிலையில், இப்போதைக்கு ஓவியாவின் இந்த பிஹேவியர் மக்களுக்குப் பிடித்திருக்கிறது என்றே கருதவேண்டியதிருக்கிறது. மனித மனம் என்பது அடிக்கடி மாறக்கூடியது. இங்கே நிச்சயம் ஓவியாபோல எல்லாரும் இருக்க முடியாது. ஆனால், அவரைப்போல எல்லோரும் இருக்க விரும்பலாம். யதார்த்தத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையே நிறைய இடைவெளி இருக்கின்றன. யதார்த்தத்தில் நம்மால் நூறு பேரை ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாது என நன்றாகவே தெரியும். ஆனால், திரையில் நாயகன் நூறு பேரையும் ஒரே சமயத்தில் உரித்துத் தொங்கவிடும்போது விசில் அடித்து வரவேற்கிறோம் அல்லவா! அதே மனநிலைதான் இங்கேயும்.

oviya-biography_12215

ஒரு வீட்டுக்குள் அடைபடும் அனைவரும் எப்படி இருக்கப்போகிறார்கள், எப்படி அடித்துக்கொள்ளப்போகிறார்கள் என்பதைத் தொலைக்காட்சி மூலம் காணும் ரசிகர்களுக்கு, ஓவியாவின் கேரக்டர் சர்ப்ரைஸாக இருக்கிறது. ஒருவேளை எல்லோரும் ஓவியா மாதிரியே இருந்திருந்தால், நிகழ்ச்சியை இத்தனை பேர் பார்த்திருப்பார்களா, நிகழ்ச்சி நூறு நாள்கள் சுவாரஸ்யமாகச் செல்லுமா என்பது சந்தேகம்தானே! .

ஆதரவு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். இந்த ஒரு புள்ளியில் அணுகும்போது, வழக்கமாக கார்னர் செய்யப்படும் கடைசி நபரிடமும் சகஜமாகப் பழகும் ஓவியாவின் பிஹேவியர் நமக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், நமக்கு கும்பல் மனநிலை இருக்கிறது. இது மிகப்பெரிய முரண் அல்லவா! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித சூழ்நிலையில் ஒவ்வொருவிதமான மனநிலையில் இருப்பார்கள் எனும் யதார்த்தத்தை நாம் கடந்துபோய்விடுகிறோமா?

Comments

comments