மொபைலில் சினிமா பார்க்கும் காலம் கரையேறி, மொபைலிலேயே சினிமா எடுக்கும் அளவுக்கு வளர்ந்த ஹை-டெக் சூழல் இது. குறும்படமோ, ஆவணப்படமோ, திரைப்படமோ… காட்சி மொழியில் அசத்த உதவும் சில ஆண்ட்ராய்டு ஆப்ஸ் இதோ!

ஒளிப்பதிவு:

காட்சியை கேமராவில் பதிவாக்கும் அழகியலுக்கான மெனக்கெடலில் சிரமங்களைக் குறைக்கும் `டி.எஸ்.எல்.ஆர்.கன்ட்ரோலர்’ போன்ற மொபைல் அப்ளிகேஷன்கள் ஆண்ட்ராய்டில் இருக்கின்றன. கேபிள் உதவியோடு டி.எஸ்.எல்.ஆர் கேமராவை இந்த ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் இணைத்தால், உங்கள் மொபைல் மூலமாகவே கேமராவை இயக்கலாம். ஒளிப்பதிவாளரின் க்ரியேட்டிவிட்டியை அதிகரிக்கச் செய்வதோடு, கேமராவைக் கையாள்வதில் இருக்கும் சிரமமும் கொஞ்சம் குறையும். இதற்கு கம்ப்யூட்டர், லேப்டாப் தேவையில்லை. கையடக்க மொபைல் போதும்.

download_17027

எத்தனையோ இயக்குநர்கள் `சூரிய உதயத்தைப் படமாக்கக் காத்திருந்தோம்’, ‘சூரியன் மறைவதை எடுக்கக் கால் கடுக்க நின்றுகொண்டிருந்தோம்’ எனப் பேசியிருக்கிறார்கள். காத்திருப்புகள் தேவையில்லை என்பதற்குதான், `கோல்டன் ஹவர்’ என்ற அப்ளிகேஷன். சூரிய உதயம் அல்லது மறைவைப் படமாக்க இந்த அப்ளிகேஷனின் உதவி போதும். ஏனெனில், சூரிய உதயமோ அல்லது மறைவோ… `இந்த நேரத்தில் தொடங்கி இந்த நேரத்தில் முடியும்’ என்ற அறிவிப்பை இந்த அப்ளிகேஷன் கொடுத்துவிடும். தவிர, இயற்கையான லைட்டிங்கில் படமாக்க விரும்பும் படைப்பாளிகளுக்கு இந்த அப்ளிகேஷன் `லைட்டிங்’ அமைப்பதில் பல வகைகளில் உதவி செய்யும். தவிர, சூரிய உதயத்துக்காகக் காத்திருக்கும் நேரத்தில் படப்பிடிப்பின் பிற பணிகளைக் கவனித்து நேரத்தை மிச்சப்படுத்திக்கொள்ளலாம்.

எடிட்டிங் 

ஆண்ட்ராய்டில் வீடியோ எடிட்டிங்குக்கான அப்ளிகேஷன்கள் அதிகம் இருந்தாலும், சிறந்த வீடியோ எடிட்டிங் அப்ளிகேஷன் `பவர் டைரக்டர்’. வீடியோ எடிட்டிங்குக்கு இந்த மொபைல் அப்ளிகேஷனே பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. வீடியோவை கட் செய்வது, இணைப்பது, வாய்ஸ் மிக்ஸிங்… எனப் பல வேலைகளை இந்த எடிட்டிங் அப்ளிகேஷனில் எளிதாகச் செய்யலாம். தவிர, ஸ்லைடு ஷோ, அனிமேஷன்களை உருவாக்கிக்கொள்ளும் வசதிகளும் இதில் இருக்கின்றன.

க்ளாப் போர்டு 

வேறென்ன? ரோலிங்… ஆக்‌ஷன் சொல்லி சட்டென அடிக்கும் க்ளாப் போர்டும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனில் உண்டு. க்ளாப் போர்டில் ஒவ்வொரு முறையில் எழுதி அழித்துக்கொண்டிருக்கும் இம்சை இதில் இருக்காது. ஷூட்டிங் பகலில் நடக்கிறதா, இரவில் நடக்கிறதா? இண்டோர் ஷூட்டிங்கா, அவுட்டோர் ஷூட்டிங்கா… போன்ற தகவல்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

cinema_apps_17313

திரைக்கதை :  

திரைப்பட உருவாக்கத்தின் முதன்மைப் பணி திரைக்கதை அமைப்பது. முதுகு நோக உட்கார்ந்து விரல் தேய பேப்பரில் எழுதிக்கொண்டிருக்காமல், கேர்ள் ஃப்ரெண்டுடன் சாட்டிங் செய்வதுபோல எளிமையாக எழுதலாம் திரைக்கதை. அதற்குதான் `செல்டெக்ஸ்’ என்ற அப்ளிகேஷன் உதவுகிறது. காட்சி அமைப்புக் குறிப்புகளைச் சேர்த்துக்கொள்வது என எளிமையான அதே சமயம் நேர்த்தியான திரைக்கதை அமைப்புக்கு இந்த அப்ளிகேஷன் உத்தரவாதம்.

தவிர, நாம் உருவாக்கிய திரைக்கதையை வேறு யாரும் மாற்றம் செய்யவோ, அழிக்கவோ முடியாதபடி திரைக்கதையை லாக் செய்துவைக்கும் வசதி இருக்கிறது. ஸ்டோரி டெவலப்மென்ட் ஃபார்ம், நாம் உருவாக்கும் காட்சிக்கு எப்படி ஒளியமைப்பு செய்யலாம் என்பதை விளக்கும் ஸ்கெட்ச் டூல், படப்பிடிப்புக்கு எந்தெந்தக் காட்சிகளுக்கு என்னென்ன பொருள்கள் தேவை என்பதைக் குறித்துவைத்துக்கொள்ளும் கேட்லாக்ஸ் வசதி, நாமே ஒரு தேவையை உருவாக்கிக்கொண்டு அதில் தகவல்களைச் சேகரித்துக்கொள்ளும் வசதியும் இதில் இருக்கிறது. முக்கியக் குறிப்பாக, திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்ற அடிப்படையைத் தெரிந்துகொள்ள புகழ்பெற்ற சில திரைப்படங்களின் திரைக்கதைகளும் இதில் இடம்பெற்றிருக்கும்.

ik_multimedia_mobile_recording_fimicpro_text_1600x900_17573

பப்ளிசிட்டி :

குறும்படம், திரைப்படம், ஆவணப்படம், ஆல்பம், வீடியோ கவரேஜ்… என எந்த வகையான ஒளிப்படைப்புக்கும் `போஸ்டர் டிசைன்ஸ்’ முக்கியம். முதல் கவனம் பெறும் அத்தகைய போஸ்டர்களுக்கு விதவிதமான வளைதளங்கள், சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தவேண்டிய அவசியத்தைக் குறைக்கிறது `போஸ்டர் மேக்கர்’ அப்ளிகேஷன். பெரிதுபடுத்திப் பார்க்கும்போது தெரியும் தரக்குறைபாடு தவிர, இது `ஓகே ரக’ போஸ்டர்களை இந்த அப்ளிகேஷன் உதவியோடு உருவாக்கலாம் அல்லது உருவாக்கிய போஸ்டரின் தரத்தை மேம்படுத்தி, செலவையும் நேரத்தையும் குறைத்துக்கொள்ளலாம்.

இதுதவிர, டப்பிங் வசதிக்கு `வாய்ஸ் ரிக்கார்டர்’, ஒலியமைப்புக்கு உதவும் `சவுண்ட் ரிக்கார்டிங்’ அப்ளிகேஷன், ஒலிகளைத் திருத்திக்கொள்ளும் `ஆடியோ எடிட்டர்’ செயலி… என ஒரே ஒரு மொபைல் போன் உதவியுடன் ஒரு திரைப்படத்தைச் செதுக்கலாம், குறும்படம்/ஆவணப்படங்களை எடுத்து அசத்தலாம்.

Comments

comments