IMG-20170713-WA0025_18200

“ஜூலை 15-ம் தேதி என்னுடைய பிறந்தநாள். தமிழக மக்களுக்காக நான் அயராது பாடுபட்டேன். கிராமப்புற மக்களின் குழந்தைகள் படிக்கவேண்டும் என்பதற்காக, கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களைத் திறந்தேன். அதற்காக மக்கள் எனக்குக் கொடுத்த பட்டம் ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’. நான் சார்ந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய செல்வாக்கோடு இருந்தேன். தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் வலம் வந்தேன். இலவச மதிய உணவுத்திட்டம் கொண்டு வந்தேன். நாட்டு மக்களுக்கு நல்லது செய்தேன். என் சமூகம் இன்றைக்குத் தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால், அதற்கு நான் காரணமாக இருந்தேன் என்று சொல்கிறார்கள். இவ்வளவுசொல்லும் மக்கள், என்னை முண்டமாக வெள்ளைத்துணியால் பல ஆண்டுகள் கட்டிப்போட்டிருக்கிறார்கள். எனக்கு எப்போது கிடைக்கும் விடுதலை என்று ஒவ்வொருநாளும் கண்ணீர் வடிக்காமல் இருந்ததில்லை. அவ்வளவு வேதனைகளைத் தாங்கிக்கொண்டு இருக்கிறேன்.

20170713_120805_18514எங்கே என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. நான் நிற்பது சிவகங்கையில்தான். உங்கள் எல்லோருக்கும் தெரிந்த இடம்தான், இருந்தாலும் ஞாபகப்படுத்தினால்தான் உங்களுக்குப் புரியும். வீரமங்கை வேலுநாச்சியார் அரண்மனை எதிரிலேயேதான் நிற்கிறேன். மழை, வெயில் என அனைத்துக் கொடுமைகளையும் அனுபவித்துக்கொண்டு கால்கடுக்க நிற்கிறேன். என் அன்பு காங்கிரஸ் பேரியக்கத்தின் கதர் ஆடை நண்பர்கள், தேர்தல் நேரத்தில் மூச்சுக்கு முந்நூறு தடவை ‘காமராஜர் ஆட்சி தருவோம்’ என்று மக்களிடம் மண்டியிடுகிறார்களே? என் நிலைமையை என்றைக்காவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? நான் என்ன பாவம் செய்தேன் இந்த அரசாங்கத்துக்கு. என் நண்பர் நடிகர் திலகம் என்னை ஏன் மார்பளவு சிலையாக இங்கே திறந்தார். அவர் செய்த வேலையால்தான், இன்றைக்கு நான் இந்த நிலைமைக்கு ஆளாகி நிற்கிறேன்” என்று காமராஜர் புலம்பும் சத்தம் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்குக் கேட்கிறதோ இல்லையோ நமக்குக் கேட்கிறது.

“காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களே, நீங்கள் என்னை ஏன் கவனிக்க மறுக்கிறீர்கள்? தம்பி, சிதம்பரம் நீ கூடவா என்னை எட்டிப்பார்க்கக் கூடாது. நீ நினைத்திருந்தால் எனக்கு விடுதலை பெற்றுக் கொடுத்திருக்கலாம். உனக்கு மனமில்லை. காமராஜர் என்று ஒருவன் இருந்தானா என்று வேண்டுமானால் நீ பேசுவாய்! வீரம்செறிந்த மண்ணான சிவகங்கையில் என்னை விடுவித்துக் கொள்வதற்காக நான் மன்றாடிக் கொண்டிருக்கிறேன். இந்த லட்சணத்தில் எனக்கு பிறந்தநாள், அதுவும் சென்னையில். முதலில் நீங்கள் எனக்கு விடுதலை வாங்கிக்கொடுங்கள் போதும். அதுதான் உண்மையான பிறந்தநாள்” என புலம்பிக் கொண்டிருக்கிறார் காமராஜர்.

சிவகங்கையில் காமராஜர் சிலையை இன்னும் திறந்து வைக்காதது பற்றி நாடார் மகாஜன சங்க துணைத் தலைவர் கதிரேசனிடம் பேசினோம். “சிவகங்கை வேலுநாச்சியார் அரண்மனை முன்பு துணியால் கட்டிய நிலையில் காமராஜர் சிலை நிற்கிறது. 1976-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜிகணேசன், காமராஜரின் மார்பளவுச் சிலையைத் திறந்து வைத்தார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த ராஜசேகர் சிமெண்ட் சிலையாக மாற்றினார். காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப்பூசலால் அந்தச்சிலை உடைந்து, அங்குள்ள தெப்பக்குளத்தில் போட்டு விட்டார்கள். காமராஜர் சிலை இப்படி சிதிலமடைந்து கிடக்கிற தகவலை, சிவந்தி ஆதித்தனாரிடம் தெரிவித்தேன். சிலை செய்பவரை அழைத்து பத்துலட்சம் ரூபாய் கொடுத்தார். அவரும் சிலையைக் கொண்டுவந்து வைத்துவிட்டுச் சென்று விட்டார். கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து நாங்களும் சிலையைத் திறக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறோம். நகராட்சி அனுமதி கொடுக்கவில்லை. இது ‘பழையசிலை; புதிய சிலை இல்லை’ என நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். பழைய சிலையை வைக்கக்கூடாது என எந்த ஆர்டரும் கிடையாது. மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் எல்லாம் சிலையைத் திறக்க ஒப்புதல் கொடுத்து விட்டனர். விரைவில், நாங்கள் எப்படியாவது காமராஜரை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து விடுவோம். அதற்கான முயற்சிகள் நடந்துகொண்டுதான் உள்ளது” என்கிறார் நம்பிக்கையோடு.

பெருந்தலைவர் காமராஜருக்கே இந்த நிலைமை என்றால், மக்களின் நிலைமை என்னவோ!?

Comments

comments