001_14046

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி, மாநில அரசின் கேளிக்கை வரி என இரட்டை வரி விதிப்பால் தமிழ் சினிமா அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தியேட்டர் அதிபர்கள், திரையரங்குகளை காலவரையின்றி மூடி விட்டனர். தமிழ் திரையுலகம் ஸ்தம்பித்து நிற்கிறது. இந்த நிலையில் இரட்டை வரிவிதிப்புக்கு எதிரான போராட்டத்தைஇன்னும் வலுப்படுத்த வேண்டும் என்று கமல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது திட்டமிட்டே கடினமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியின் கீழ் இன்னும் பல சித்ரவதைகளையும், ஊழல்களையும் திரைப்படத்துறை சகித்துக் கொள்ள இருக்கிறது. இப்பிரச்னையை பொறுத்தவரை பக்குவமடைந்த ஒருவனாக திரைத்துறையினருடன் ஒற்றுமையாக செயல்பட என்னால் முடிந்தவரை நான் முயற்சி செய்கிறேன். அதேவேளையில், சுயநலமுள்ள அரசியல்வாதிகளின் கைகளில் மாட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை.
தமிழ்நாட்டைத் தவிர பிற அண்டை மாநிலங்கள் ஜிஎஸ்டி-யை கருத்தில் கொண்டு சினிமாவுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளுக்கு விலக்களித்துள்ளன. கேரள திரைத்துறையினர், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் வரிவிதிப்பு குறித்து வேண்டுகோள் விடுத்தபோது, அவர் உடனடியாக திரைப்படத் துறைக்கு இனி எந்த வரியும் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார். மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய அரசுகளும் திரைத்துறைக்கு பல்வேறு சலுகைகளை செய்து தந்துள்ளன.

தமிழகம் ஊழலில் பீகாரையே விஞ்சிவிட்டது. தமிழகத்தில் நிலவும் ஊழலில் திரைப்படத் துறை உள்ளிட்ட பல துறைகள் சிக்கிக் கொண்டுள்ளன. இதை எதிர்க்க நான் இன்னும் வலுவான போராட்டங்களை எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Comments

comments