இந்தியாவில் மணிரத்னம் போன்று ஒரு இயக்குநரில்லை என்று நடிகர் மாதவன் புகழாரம் சூட்டியுள்ளார்.

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளார்கள். ஜிஎஸ்டி வரித் தொடர்பாக குழப்பங்கள் நீடித்து வருவதால், ஜூலை 7-ம் தேதி வெளியீடாக இருந்த ‘விக்ரம் வேதா’ தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

‘விக்ரம் வேதா’ படத்தை விளம்பரப்படுத்த மாதவன் அளித்துள்ள பேட்டியில் மணிரத்னத்துக்கு அவருக்கும் இடையேயான நட்பைப் பற்றி தெரிவித்துள்ளார். அதில் மாதவன் கூறியிருப்பதாவது:

அவரோடு பல படங்கள் செய்துவிட்டேன். அனைவருமே அவரை மணி என்று தான் அழைப்பார்கள். என்னால் அப்படி அழைக்க முடியவில்லை. நான் யோசிக்கும் போது கூட மணியிடம் என்ன சொல்லலாம் என்று யோசிக்க மாட்டேன். மணி சாரிடம் என்ன சொல்லலாம் என்று தான் யோசிப்பேன்.

அவர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அவரோடு படம் செய்யும் போது நான் மாணவனாக மாறிவிடுவேன். அதை மாற்றினால் நான் மாதவனாக தெரிவதில்லை. கமல் சார், மணி சார், அமிதாப் சார், மற்றும் ஷாருக்கான் போன்றவர்களோடு பணிபுரியும் போது நான் அடுத்த கதாபாத்திரங்கள் வேண்டுமானால் அவர்களின் நிலைக்கு இருக்கலாமே ஒழிய, ஒரு மாதவனாக அப்படியல்ல.

அதே வேளையில், இந்தியாவில் மணிரத்னம் போன்று ஒரு இயக்குநரில்லை. ஏனென்றால் அவர் மட்டுமே பல்வேறு களங்களில் படம் இயக்கியுள்ளார். ‘மெளன ராகம்’, ‘அலைபாயுதே’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘அஞ்சலி’, ‘தளபதி’, ‘ரோஜா’, ‘திருடா திருடா’ உள்ளிட்ட அனைத்து படங்களுமே வெவ்வேறு களங்களில் இயக்கியிருக்கிறார்.

இவ்வாறு மாதவன் தெரிவித்தார்.

Comments

comments