_18494 (1)

மத்திய அரசு ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்துள்ளதால் தமிழக அரசின் கேளிக்கைவரி ரத்து செய்யப்படும் என்ற திரையுலகினர் எதிர்பார்த்தனர்.

அதற்கு மாறாக அதே கேளிக்கை வரியை உள்ளாட்சி – நகராட்சி வரி என்ற பெயரில் மீண்டும் நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு.

இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 3 ஆம் தேதி முதல் தியேட்டர்களை மூடும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் தியேட்டர் அதிபர்கள்.

தமிழக அரசின் 30 சதவிகித கேளிக்கை வரியினால் தமிழ்த்திரையுலகம் பாதிக்கப்படும் என்றும் அதை முழமையாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் திரையுலகினர்.

“90 சதவிகித படங்களுக்கு வரிவிலக்கு கொடுக்கிறோம். அப்புறம் ஏன் கேளிக்கை வரியை எதிர்க்கிறீர்கள்?” என்று கேட்டாராம் அமைச்சர் வேலுமணி.

அதன் அர்த்தம் என்ன?

1939 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டப்படி ஏற்கனவே திரையரங்குகளில் கிராமப்புறங்களில் 20 சதவீத கேளிக்கை வரியும், நகர்புறங்களில் 30 சதவீத கேளிக்கை வரியும் வசூலிக்கப்பட்டு வந்தது.

யு சான்றிதழ் பெற்ற படங்களுக்கு வரிவிலக்கு என்று அறிவிக்கப்பட்டதால் பெரும்பாலான படங்களுக்கு கேளிக்கை வரி விதிக்கப்படவில்லை.

வரிவிலக்கு அறிவிக்கப்பட்ட படங்களுக்கு மக்கள் வரி செலுத்தத் தேவையில்லை என்பதே அதன் அர்த்தம்.

ஆனால் நடைமுறையில், வரியுடன் கூடிய கட்டணமே தியேட்டர்களில் சட்டவிரோதமாக மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு, அந்த பணத்தை தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் பிரித்துக் கொண்டனர்.

இதன் காரணமாக, வரிவிலக்குச் சலுகை என்பது மக்களின் பணத்தை சினிமாக்காரர்கள் கொள்ளையடிப்பதற்கான வழியாகவும், அதற்கு அரசு வழங்கும் அனுமதியாகவும் மாறியது.

இந்த யதார்த்தத்தை தன்னுடைய பேச்சில் அமைச்சர் சுட்டிக்காட்டியதால், கேளிக்கை வரியை ரத்து செய்யும் பேச்சை விட்டுவிட்டு, தியேட்டர் கட்டணத்தை உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்துள்ளனர் தியேட்டர் அதிபர்கள்.

கேளிக்கை வரி நீக்கம் என்று முதல் நாள் தொடங்கிய பேச்சுவார்த்தை அடுத்தடுத்த நாட்களில் தியேட்டர் கட்டண உயர்வு குறித்த பேச்சுவார்த்தையாக மாறியது.

சென்னையில் அதிகபட்சம் 120 ரூபாய் தியேட்டர் கட்டணம் இருந்தாலும், மற்ற ஊர்களில் 5 , 10, 15 ரூபாய், அதிக பட்சம் 50 ரூபாய் என்ற விகிதத்திலேயே தியேட்டர் கட்டணங்கள் இருக்கின்றன.

முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களுக்கு கன்னாபின்னாவென கட்டணங்களை வசூலிக்கின்றனர்.

தியேட்டர்கட்டணங்களை உயர்த்தினாலும், கூடுதலாக மக்களிடம் பணம் பிடுங்குவார்கள் என்பதை அறிந்ததினாலோ என்னவோ, தியேட்டர் கட்டணத்தை உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அமைச்சர்கள் தரப்பிலிருந்து 30 கோடி பேரம் பேசப்பட்டதாக படத்துறையில் பேசப்பட்டு வருகிறது.

இவ்வளவு பெரிய தொகையை யார் திரட்டிக் கொடுப்பது? தியேட்டர்காரர்களா? விநியோகஸ்தர்களா? தயாரிப்பாளர்களா? நடிகர்களா? என்ற குழப்பத்திலேயே அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தை தடைபட்டு, நான்கு நாட்களாக தியேட்டர்கள் மூடப்பட்டன.

கடைசியில், கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்ற திரையலகினர் கோரிக்கையும், தியேட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற தியேட்டர் அதிபர்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்படாமலேயே தியேட்டர் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.

தலைமை செயலகத்தில் 06.06.2017 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் ஆறுபேர் அரசு தரப்பில் ஆறு அடங்கிய குழு அமைத்து கேளிக்கை வரி மற்றும் தியேட்டர் கட்டணத்தை உயர்த்துவது பற்றி விரைவில் முடிவு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமிட்டி என்பதெல்லாம் கண்துடைப்புதான்.

30 கோடியை கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்துவிட்டால் தியேட்டர் கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும்.

அதன் பிறகு உயர்த்தப்பட்ட தியேட்டர் கட்டணம் நடைமுறைக்கு வந்து மக்களிடமிருந்து மேலும் பணம் பறிக்கப்படும்.

இந்த பிரச்சனையில் சினிமாக்காரர்களிடமிருந்து 30 கோடியை பில் போட்டவர்கள் தந்திரனா?

30 கோடியைத்தான் கொடுத்துவிட்டோமே…இனி நம்மை யார் கேள்வி கேட்க முடியும் என்ற தைரியத்தில் இஷ்டத்துக்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்ற கனவில் இருக்கும் தியேட்டர்காரர்கள் தந்திரனா?

இவர்கள் இரண்டு பேருமே இல்லை….

“நீங்க எடுக்கிற படத்தை குடும்பத்தோடு வந்து தியேட்டரில் வந்து பார்க்கிறதுக்கு மொத்த சம்பளத்தையும் மொய் எழுதுணுமா? போங்கடா… வெண்ணை”

என்று சொல்லிவிட்டு தமிழ்ராக்கர்ஸ்.காமில் டவுன்லோட் செய்தும், திருட்டு டிவிடியிலும் படம் பார்க்கும் ரசிகனே தந்திரன்.

Comments

comments