[

பரதேசி, தங்கமீன்கள், குற்றம் கடிதல் போன்ற படங்களை தயாரித்த ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்ப்பரேஷன் தற்போது தயாரித்துள்ள படம் ‘அண்டாவக் காணோம்’.

புதுமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் ஸ்ரேயா ரெட்டி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

‘திமிரு’ படத்திற்கு பிறகு ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரேயா ரெட்டி மீண்டும் நடித்துள்ள படம்.

அண்டாவக் காணோம் படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் இயக்குநர்கள் ராம், செல்வபாரதி, கிருஷ்ணா, பிரம்மா, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், கார்த்திக் ரிஷி, ரஞ்சித் ஜெயக்கொடி, நடிகர் வெங்கட், ஜாஸ் சினிமாஸ் கண்ணன், தயாரிப்பாளர் லியோ விஷன் ராஜ்குமார், ஆல்பர்ட், நடிகர் இளையராஜா, வினோத், நடிகை நவீனா, இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, பாடலசிரியர் மதுரகவி, தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

‘’ஒரு அண்டாவை சுற்றி நடைபெறும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை.

அதோடு, ஒரு கிராமம் அங்கு நடக்கும் பிரச்சனைகள் பற்றி யதார்த்தமாக பேசும் இப்படத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்களில் நாங்கள் படப்பிடிப்பு நடத்திய கிராமத்தின் மக்களே நடித்துள்ளனர்’’

என்று அண்டாவக் காணோம் படத்தின் மீது சுவாரஸ்யம் கூட்டினார் இயக்குநர் வேல்மதி.

ஸ்ரியா ரெட்டியின் வீட்டில் உள்ள ஒரு அண்டா காணாமல்போவதை அடுத்து நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் கதை. படத்தில் வரும் அண்டாவுக்கு நடிகர் விஜய்சேதுபதி குரல் கொடுத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

“9 ஆண்டுகள் கழித்து நான் மீண்டும் நடிக்க வந்திருக்கும் படம், இயக்குநர் வேல்மதி கதை சொன்னபோது எனக்கு புரியவே இல்லை.

திமிரு அளவுக்கு கதை இருக்குமா என்று கேட்டேன்.

இயக்குநர் வேல்மதி மிகவும் தன்னம்பிக்கையோடு திமிரு பத்தி பேசாதீங்க, அதைவிட மிகச்சிறந்த படமாக இருக்கும்னு சொன்னார்.

இது உங்களோட படம்… நீங்க ஒண்ணும் தயாராக வேண்டாம், நேரா ஷூட்டிங்க்கு வாங்கன்னார்.

மிகவும் பொறுமையாக பக்கத்தில் உட்கார்ந்து தேனி வட்டார வழக்கைச் சொல்லி கொடுத்தார்.”

என்று அண்டாவக்காணோம் படத்தில் நடித்த அனுபவத்தை ஆங்கிலத்திலேயே விவரித்தார் சென்னையில் வளர்ந்து தெலுங்குப் பெண்மணியான ஸ்ரியா ரெட்டி.

அண்டாவக் காணோம் படத்தின் இசையை மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் இணைந்து வெளியிட்டனர்.

விழாவில் துவக்கத்தில் அண்டாவக் காணோம் படத்தின் பாடல் காட்சிகள், டிரய்லர் திரையிடப்பட்டன.

திமிரு படத்தைப் போலவே அடித்தொண்டையில் கத்தி மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் ஸ்ரியா ரெட்டி.

பாராட்டத்தக்க நடிப்புதான், சந்தேகமில்லை. அதற்காக “ஸ்ரியா ரெட்டியை தமிழ் சினிமாவின் ஸ்மிதா படேல், ஷபனா ஆஸ்மி” என்று மனோபாலா பாராட்டியதெல்லாம் ரொம்ப ஓவர்.

பாராட்ட வேண்டியதுதான்… அதுக்காக இப்படியா?

மனோபாலாவை மற்றவர்கள் மன்னித்தாலும் ஸ்மிதா படேலின் ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காது.

Comments

comments