1_12411

தன் படங்களின் மூலம் பகுத்தறிவு, நாத்திகம், பாலியல் பேசும் இயக்குநர் வேலு பிரபாகரன், இப்போது புதுமாப்பிள்ளை. `ஒரு இயக்குனரின் காதல் டைரி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ஷெர்லிதாஸைக் கரம்பிடித்தவர், `காதல் கனவு கொலை’ என்ற டைட்டிலோடு அடுத்த படத்துக்கும் தயார்.

“ஒவ்வொரு மனிதனுக்குமே ஆயுள் இருக்கிற வரை எதிர்பாலின அணைப்பும் துணையும் வேணும். தனிமைச் சிறையிலேயே இருந்தால் மனிதன் செத்துடுவான். அறுபது வயசுல ஒரு பெண்ணைத் தேடினா, அதை காமெடியா, சீர்கேடான ஒரு விஷயமா, பாவி மாதிரி பாவிக்கிற பார்வை இந்தச் சமூகத்துக்கு இருந்தாலும், எனக்கும் காதல் வந்தது… கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.  வயதான ஆண் மீது காதல்கொண்ட ஒரு பெண்ணை இந்தச் சமூகம் உருவாக்கலை. பலபேர் ‘இந்த வயசுல கல்யாணமா?’ங்கிறரீதியிலயும், `அப்படி இப்படி இருக்க முடியாதே’ங்கிற பாலியல்ரீதியிலயும் கேள்வி கேட்பாங்க. வயதான ஒருத்தனை விரும்பிட்டா, அந்தப் பெண்ணை கீழ்த்தரமா பார்க்கிற, பேசுற சமூகம் இது. ஆனால், பாலியல் உறவுகள் தாண்டி, எல்லா மனிதர்களுக்கும் ஒரு அடிப்படை உணர்வு உண்டு. எனக்கும் அது இருக்கு.

ஷெர்லியை எனக்கு 15 ஆண்டுகளா தெரியும். என் முந்தைய படத்தில் நடிச்ச பெண். கட்டுப்பெட்டியா இருந்த பெண்ணை, என் படத்துக்காக குறைவான ஆடை உடுத்தி நடிக்கவெச்சேன். என் படத்துக்கான நியாயம் உணர்ந்து, அவங்களும் நடிச்சாங்க. தொடர்ந்து இதுமாதிரி வாய்ப்புகள் வரவே, அவங்க நடிக்கலை. அரபு நாட்டுல ஐ.டி வேலைபார்க்கிற பொண்ணு. ஆறு மாசங்களுக்கு முன்னாடி, இங்கே வந்தப்போ சந்திச்சோம்… நிறைய பேசினோம். எனக்கும் அவங்க மேல ஒரு ஈர்ப்பு இருந்தது. என் உடல்நிலை அவங்களுக்குத் தெரியும். ‘இன்னும் சில வருஷம் உயிரோடு இருந்தாலும், உங்களோடு வாழ்றது எனக்குப் பெருமைதான்’னு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஷெர்லி, என் எல்லா போராட்டங்களுக்கும் உறுதுணையா இருப்பாங்கனு நம்புறேன்!” – கல்யாணக் கதையைப் பேசியபடி உரையாடலைத் தொடர்ந்தார், வேலுபிரபாகரன்.

Velu_prabhakaran.05_11453

“ஒளிப்பதிவாளர், நடிகர், இயக்குநர்… பல தளங்களில் இயங்கியிருக்கீங்க. உங்களைப் பற்றி, உங்க படங்களைப் பற்றிய முழுமையான தரவுகள் இல்லையே… வேலு பிரபாகரன் யார்?”

“சொந்த ஊர் அரக்கோணம். இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் சினிமா என்பது கவர்ச்சிகரமான ஊடகம். கொஞ்சம் வாட்டசாட்டமா இருந்தாலே நடிகர் ஆகணும்கிற எண்ணம் வந்திடும். சினிமாவுக்குப் போனா ஈஸியா சம்பாதிக்கலாம்.

அப்பா, ஓவியர் – நாடகக் கலைஞர். நானும் அப்படியே வளர்ந்தேன். என் சித்தப்பா ஏக்நாத் மூலமா, சென்னை திரைப்படக் கல்லூரியில `ஒளிப்பதிவு’ பிரிவுல இடம் கிடைச்சது. நுணுக்கமா இல்லைன்னாலும், நுணுக்கம் மாதிரி தெரியிற அளவுக்கு ஒளிப்பதிவைக் கத்துக்கிட்டு பண்ணேன். ஆனா, இயக்குநரின் கருவியா மட்டுமே ஒளிப்பதிவாளர் இருந்தார். எடுக்கும்போதே, `இந்தப் படம் ஓடாது. குப்பைப் படம்’னு கோபம் வந்துச்சு. இயக்குநர் ஆனேன். `நாளைய மனிதன்’, `அதிசய மனிதன்’, `அசுரன்’, `ராஜாளி’, `கடவுள்’, `சிவன்’, `புரட்சிக்காரன்’னு பல படங்கள் இயக்கியிருக்கேன்.

எங்க அப்பா ஏழைக் குழந்தைகளுக்கு தன்னால் முடிஞ்ச உதவிகள் பண்ணுவார். ஓவியங்களை ரசனையோடு கற்றுக்கொடுப்பார். மாணவர்கள் வரைஞ்ச ஓவியங்களை வகுப்பறையிலேயே ஏலத்துக்கு விற்று, அதில் வரும் பணத்துல சக மாணவர்களுக்குச் சாப்பாடு போடுவார். ஆனா, அவர் வாழ்க்கையின் இறுதிநாள்கள் பெரும் பிரச்னையா இருந்தது. கிழிஞ்ச, நஞ்சுபோன சட்டையோடு உணவுக்காகப் பெரும்பாடுபட்டார். அப்போதான் முதல்முறையா எனக்கு கடவுள் மீது கேள்வி வந்தது; சந்தேகம் வந்தது. கடவுளைப் பற்றிய விவாதங்களைப் படிக்க ஆரம்பிச்சேன்.

இன்னொரு சம்பவம் என்னை ரொம்பப் பாதிச்சது. ஷூட்டிங்கில் ஒருநாள், லென்ஸ் பாக்ஸ் மேல கால் போட்டுப் படுத்திருந்தேன். ரெண்டு மணி நேரம் தூங்கிட்டு, காலையில சூரிய உதயத்தை எடுக்கவேண்டிய கட்டாயம். திடீர்னு ஒருத்தர் என்னை உசுப்பி, `லென்ஸ் பாக்ஸ் மேல கால் படக் கூடாது’னு சொன்னார். கோபம் வந்து, ‘இந்தப் பெட்டிக்குள்ள என்னென்ன லென்ஸ் இருக்கு, அதோட பயன்பாடு என்ன… எல்லாத்தையும் எனக்குச் சொல்லணும்னு’ சொல்லிட்டேன். கிட்டத்தட்ட 20 வருஷங்களா லென்ஸோடு டிராவல் பண்ற அவருக்கு, `லென்ஸ் பாக்ஸ்மேல கால் வைக்கக் கூடாது’ங்கிற அளவுக்குத்தான் அறிவு இருக்கு. அவரோட இடத்துல ஒரு வெள்ளைக்காரன் இருந்திருந்தால், இத்தனை வருஷங்களா லென்ஸோடு புழங்கி, புதுப்புது லென்ஸ்களைக் கண்டுபிடிச்சிருப்பான். அப்போதான் சமூகத்தைப் பற்றி யோசிச்சேன்.

நாட்டுப்பற்றுன்னாலே `ஜெய்ஹிந்த் சொல்லணும், தேசியக்கொடியைச் சட்டையில குத்திக்கணும்’னு தோணுதே தவிர, நாட்டோட வளர்ச்சிக்கு என்ன செய்யணும்னு தோணுதா? இவ்வளவு அழுக்குகளோடு இருக்கிற சமூகத்தை நினைக்கும்போதுதான் பெரியார் எனக்கு அறிமுகம் ஆகிறார். `கடவுள் மறுப்பைச் சொன்னவர். அதுக்கு ஏன் அவரைப் போற்றணும்?’னு ஆரம்பத்துல தோணுச்சு. ஆனா, அவரோட புத்தகங்கள், அவரோட விவாதங்கள், அதில் இருக்கும் ஆழம்னு பெரியார் ரொம்பவே என்னை ஈர்த்துட்டார். மூன்று தலைமுறைகளா யோசிச்சாலும், அவரோட எழுத்துகளையும் பேச்சுகளையும் நம்மால் சிந்திக்க முடியாது. அந்த அளவுக்கு வியந்துபோய், அவரோட கொள்கைகளை `கடவுள்’, `புரட்சிக்காரன்’ படங்களில் பிரசாரம் பண்ணேன். அதான் என் வேலையாவும் நான் நினைக்கிறேன். பொறுப்பில்லாத, முட்டாள்தனமான இந்தச் சமூகம், என்னைப் பார்த்துக்காது. நடுவுல பலமுறை மிதிக்கப்பட்டு காணாமப்போயிருக்கேன். ஆனாலும், என்ன செய்ய முடியுமோ, அதைச் செஞ்சுக்கிட்டிருக்கேன். இன்னும் செய்வேன்!”

“இந்த மாதிரி பேசுறவங்களை அரசியல்ல ஈஸியா ஏத்துப்பாங்க. சினிமாவுல எப்படி ஏத்துக்கிட்டாங்க?”

“எங்க ஏத்துக்கிட்டாங்க? சினிமா இண்டஸ்ட்ரியில நான் ஒரு ஒதுக்கப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன், தீண்டத்தகாதவன். அதனால, எனக்கும் அவங்க தேவையில்லை. நான் எந்த யூனியனிலும் உறுப்பினர் இல்லை. தவிர, சினிமாவில் கீழ்த்தரமான கதைகளைப் படைத்துக்கொண்டு, மோசமான செயல்களைச் செஞ்சு, சம்பாதிக்கிற கூட்டத்துக்குத் தொடர்பு இல்லாம, ஒப்பற்றக் கலையை எனக்காகப் பயன்படுத்திக்கிட்டிருக்கேன்.”

Velu_prabhakaran.02_11342

“கமர்ஷியல் டு புரட்சிக் கருத்துகளுக்கு வந்தீங்க. புரட்சியில இருந்து உங்க படைப்புகள் பாலியல் விஷயங்களுக்குப் போனது எப்படி?”

“உலகத்துக்கு நாகரிகத்தைச் சொன்ன நாடு. ரெண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னாடியே இலக்கியம் படைச்சவங்க நாம். உலகமே போற்றும் திருக்குறளை எழுதியிருக்கோம். இப்படி நிறைய பெருமைகள் இருக்கு. அந்தப் பெருமைகளைப் பயன்படுத்தி வாழ்வியல் முன்னேற்றம் அடைஞ்சிருக்கணும். `என் முப்பாட்டன் கதை தெரியுமா?’, `என் தாத்தா ராஜாவா இருந்தவர் தெரியுமா?’னு பேசிக்கிட்டிருக்காங்க. இப்படித்தான் இருக்கு சமூகம்.

உலகத்துல எந்த நோயை எடுத்துக்கிட்டாலும், அது நம்ம நாட்டுலதான் அதிகமா இருக்கும். படிக்காதவங்க எண்ணிக்கை, அதிக குடிசைகள், குழந்தைத் தொழிலாளர்கள்னு கீழ்த்தரமான எல்லா விஷயங்களும் நம்ம நாட்டுலதான் இருக்கு. உலகத்துல யாருகிட்டயும் இல்லாத மாதிரி, நவீன கருவிகளோடு விளையாடிக்கிட்டிருக்கோம். சுருக்கமா சொன்னா, அன்ஹெல்தி கன்ட்ரியா இருக்கு! இப்படி இருக்கும் சமூகத்தை மாத்தணும்னா, பெரும் பிரச்னை என்னென்னனு பார்க்கணும். அப்படிப் பார்க்கும்போது, கடவுளும் பாலியலும்தான் எனக்குத் தெரியுது.

மனுஷன் 100 வருஷங்கள் வாழ்ந்தாகூட, திங்கிறது, தூங்குறது, வீணாப் பொழுதுபோக்குறதுனு பல வருஷங்கள் கழிஞ்சுடும். உருப்படியா வாழ்றது 1,000 நாள்கள்கூட இருக்காது. ஆனா, அதுலேயும் கோயிலுக்குப் போறது, நல்லநேரம் – ராகுகாலம் பார்க்கிறது, அமாவாசை – பெளர்ணமியைக் கணக்குபண்றது… இதுலேயே காலத்தை வீணாக்குறான், காசை வீணாக்குறான். எல்லாத்துலேயும் கடவுளைப் பார்க்கிற தன்மை மட்டுமே இருக்கே தவிர, கடவுள்னா என்னனு பார்க்கிற தன்மையை விட்டுட்டோம். எத்தனை கோயில், எத்தனை சாமி… சாமிக்கு லைட்டு, அபிஷேகம்னு பொருள், நேரம் வீணாப்போகுது. மாசத்துக்குப் பத்து திருவிழா நடக்குது. மனிதனுடைய நேரமும் மூளையும் அதை நோக்கியே போயிக்கிட்டிருக்கு. உலகத்துலேயே கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ள, கடவுளுக்காக நேரத்தையும் பொருளையும் வீணாக்கிட்டு இருக்கிறது இங்கேதான்.

அடுத்தது காமம். போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ப் பார்த்தா, 85 சதவிகித வழக்குகள் பெண்ணை மையப்படுத்தி இருக்கு. காமம் ஒரு உணர்வு. அதைக் கட்டுக்கோப்பா வெச்சுக்கிறதுக்கும், உஷாரா வெச்சுக்கிறதுக்கும் நாம இளைஞர்களைத் தயார்செய்றதே இல்லை. அவனும் ஏதோ வெடிகுண்டைத் தூக்கிட்டுச் சுமக்குற மாதிரி குழந்தை, பாட்டினு பாலியல் தாக்குதலைத் தொடுக்குறான். ரோடு, பஸ், ட்ரெயின்னு சமயம் கிடைச்சா எந்த இடத்துலேயும் வெடிக்கத் தயாரா இருக்கான். இளைஞர்களை இப்படி வெச்சிருந்தா, அவன் எப்படி நவீன கண்டுபிடிப்பை நிகழ்த்துவான், சமூகத்தை மாத்தணும்னு சிந்திப்பான்? ஆக, இந்த ரெண்டு விஷயங்களையும் மாத்துறதுக்கான வேலையை அரசாங்கமும் அரசியல்வாதிகளும் முன்னெடுக்கணும். ஆனா, பண்ண மாட்டாங்க. நான் பண்ணுவேன்!”

“திராவிடர் கழகத்துக்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருந்தது, இப்போ எப்படி இருக்கு?”

“கொள்கை, கோட்பாடு, நிர்வாகிப்பதில் இருக்கும் பிரச்னைகளைத் தலைவர்கள் எப்படிச் சமாளிப்பாங்க…. எதுவும் எனக்குத் தெரியாது. கள ஆய்வும் எனக்குப் பெருசா இல்லை. ஆனா, மனசுலபட்டதை `ராவா’ பேசுவேன். ஆசிரியர், மறைந்த ஜெயலலிதாவுக்கு `சமூக நீதி காத்த வீராங்கனை’னு ஒரு பட்டம் கொடுத்தார். தி.க., தோழர்களே, `ஆசிரியர் தப்பு பண்ணிட்டார்’னு பேசிக்கிட்டாங்க. நானும் எதிர்த்தேன். ஆனா, கொஞ்சநாள் கழிச்சு சிந்திச்சுப்பார்க்கும்போது, எனக்கு அந்தப் பட்டம் சரின்னு பட்டுச்சு. ஆனா, இங்கே ஒரு இயக்கம் கட்சியா மாறும்போது அல்லது கட்சியோட அங்கமா மாறும்போது அங்கே மறுபடியும் பழமை புகுந்துடும்.

உதாரணத்துக்கு, ஒரு திராவிடக் கட்சியோட சேனலில் ஆன்மிகச் சொற்பொழிவு அதிகமா ஒளிபரப்பாகுது. அதை வியாபாரமா எடுத்துக்கிட்டாலும், அதே நேரத்துக்கு அல்லது அதைவிடக் குறைவான நேரத்துக்கு பெரியாரைப் பற்றிப் பேசலாமே? நியாயப்படி பார்த்தா, அந்தத் தொலைக்காட்சியோட மூலதனமே பெரியார்தான். கட்சியும் அதை ஒரு கடமையா நினைச்சு செய்யணும் இல்லையா? ஆனா, செய்யலையே.

இப்படி நான் சுதந்திரமானவனாகப் பேசுறேன். சமயத்துல இது அவங்களுக்கேகூட பிரச்னையா வரலாம். என்னுடைய `புரட்சிக்காரன்’ படத்தை அவங்கதான் எடுத்தாங்க. என் கருத்தை, ஆசையைச் சொன்னபோது புரிஞ்சுக்கிட்டாங்க. `பெரியார்’ திரைப்படம் உருவாகக் காரணமா இருந்து நான்தான். ரஜினிகாந்தைத் தீவிரமா எதிர்த்தது அங்கே இருக்கும்போதுதான். கமல்ஹாசனை பெரியார் திடலுக்கு அழைச்சிட்டுப் போனேன். சத்யராஜுக்குப் பல புத்தகங்களை அறிமுகப்படுத்தினேன். இப்படியாக, அவங்க கொள்கைக்கு மிகப்பெரிய பிரசாரத்தைப் பண்ணிக்கிட்டுதான் இருந்தேன். ஆனா, என்னுடைய உறவே அவர்களுக்குப் பல பிரச்னைகளைத் தரக்கூடியதா இப்போ  மாறிடுச்சு.”

“உங்க படைப்புகளோட திரைவடிவத்தைத் தாண்டி, அதுல பிரசார நெடியும், ஆவணப்பட உணர்வும் அதிகமா இருக்கே ஏன்?”

“ஒரு படைப்பாளியா, நான் வெளியே வந்துகிட்டே இருக்கவேண்டிய சூழல் இருக்கு. படம் வெளியே வந்தாலும், எனக்குப் பணம் வராது; யாரும் சப்போர்ட் பண்ண மாட்டாங்க. ரஜினிகாந்தை, சில கொள்கைகளுக்காக எதிர்க்கிறேன். அதுக்காகவே என்னை யாரும் கூட சேர்த்துக்கிறதில்லை. இதெல்லாம் தெரிஞ்சுதான் இயங்கிக்கிட்டிருக்கேன். ஏன்னா, சினிமா மட்டுமே எனக்கான மேடையா இருக்கு. யாரும் உதவிக்கு இல்லைன்னாலும், என் பிரசாரத்தை செஞ்சே ஆகவேண்டிய நிலைமை. அதனால, நான் சொல்லப்போற விஷயத்துக்கு ஒரு அடிப்படை வடிவம் கிடைச்சாலே, அதைப் பண்ணி முடிச்சுடுறேன். இன்னும் மனிதனா, முழுசா பரிணாமம் அடையாத, அந்த நிலையை எட்டாத இடத்துலதான் நாம இருக்கோம். அதனால, என் பிரசாரம் வெற்றிபெறும்!”

Velu_prabhakaran.03_11494

“பல வருஷங்களுக்கு முன்னாடியே மாட்டிறைச்சிக்கு ஆதரவா வசனம் எழுதியிருக்கீங்க. ‘மாட்டிறைச்சி’ விவகாரம் குறித்த உங்க கருத்து என்ன?”

“30 வருஷங்களுக்கு முன்னாடி `பாசம் ஒரு வேஷம்’ங்கிற படத்துல வந்த வசனம் அது. பெரியார், அம்பேத்கர், தலித்தியம்னு அப்போ எதுவும் தெரியாது. நானே உணர்ந்து வைத்த காட்சி அது. எம்.ஜி.ஆர் இறந்த அன்று இந்தப் படம் ரிலீஸ் ஆனதுனால வெளியே தெரியாமலேயேபோயிடுச்சு. `வெள்ளைக்காரன் மாட்டுக்கறி சாப்பிடுறான், நாம் ஏன் ஒதுக்குறோம்?’னு ஒரு யோசனை. அதான், அடுத்த படத்துலேயே அதைப் பதிவுபண்ணிட்டேன். அந்தப் படத்துல பெரியார் வேடத்துல இருக்கிற நான், தாழ் குடியானவன் வீட்டுல சாப்பிடப் போவேன். ‘மாட்டுக்கறிதான்யா இருக்கு’னு அவங்க சொல்வாங்க. `மாட்டுக்கறி சாப்பிடுற வெள்ளைக்காரன்தான்யா கார், கம்ப்யூட்டர், கரன்ட் எல்லாம் கண்டுபிடிச்சிருக்கான்’னு நான் பேசுவேன். இதைப் ‘பெரியார் இப்படிச் சொன்னார்’னு நான் எடுக்கலை. ஏன் சொல்றேன்னா, `பெரியார் இப்படிச் சொல்லவே இல்லையே!’னு பலபேர் கிளம்பி வந்துடுவாங்க. அவங்களுக்கெல்லாம் முதல்ல, நான் ஒரு பெரியாரிஸ்ட்டே இல்லைனு சொல்லிக்கிறேன். என்னை அப்படிக் கூப்பிடுறதையும் நான் வெறுக்கிறேன். நான் ஒரு நவீன மனிதன், அவ்வளவுதான்.

`நான் பெரியாரிஸ்ட்’னு சொல்லிக்கிட்டு, ஏற்கெனவே இருக்கிற பல குழுக்களோடு ஒரு குழுவா சேர்ந்து உட்கார விரும்பலை. நவீன மனிதர்களா நாம் பரிணாமம் அடையாததைப் பற்றி, அடையுறதுக்கான வழிகளைப் பற்றி பெரியார், அம்பேத்கர், புத்தர்னு பலரும் பேசியிருக்காங்க. என் மொழியில், என் நாட்டில் பேசினவர் பெரியார். அவரைப் போன்ற ஒரு தலைவர் அடுத்து உருவாகவில்லை.”

“மாட்டிறைச்சிக்குத் தடை, வைத்திருப்போருக்குத் தண்டனை போன்ற செய்திகளை எப்படிக் கடக்குறீங்க?”

“மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கிறதும், அதுக்குத் தண்டனை எல்லாம் விதிக்கிறதும் பேராபத்தாக முடியும். மோடி மீது நான் பெருமதிப்பு வெச்சிருக்கேன். அவரோட பல கொள்கைகள் மீது எனக்குச் சிறந்த உடன்பாடு இருக்கு. பதவி ஏற்கும்போது குடும்பத்துல இருந்து யாரும் வரக் கூடாதுனு சொன்னார். குடும்பம் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டிருக்கார். வாரிசு இருக்கிறவங்க நல்ல கொள்கைவாதிகளா இருந்து, சுயநலவாதிகளா மாறிக்கிட்டு வர்ற காட்சிகளைப் பார்க்குறோம். காமராஜர், பெரியார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மாதிரி வாரிசு இல்லாதவர்கள் இங்கே பெரும் தலைவர்களா உருவாகியிருக்கிறதைப் பார்க்குறோம். மோடியும் எனக்கு அப்படியே! அவர் நிறைய வெளிநாடுகளுக்குப் பறக்குற பிரதமர்னு பெயர் எடுத்திருக்கார். வெளிநாடுகளில் இருக்கும் மக்களோட வாழ்க்கைத் தரத்தையும், இந்திய மக்களோட வாழ்க்கைத் தரத்தையும் நிச்சயம் அவர் ஒப்பிட்டுப் பார்த்து, மக்களுக்கு நல்லது பண்ணுவார்னு நம்புறேன். ஆனா, மாட்டிறைச்சி மீதான தடையை மதக்கோட்பாடுக்கு அவர் அடிபணியிறதுக்கு உதாரணம். மாட்டிறைச்சி உண்ணக் கூடாது, விற்கக் கூடாதுனு சொல்றதை விட்டுட்டு, மேலும் பல ஆளுமைத்திறன்களைப் பிரதமர் வளர்த்துக்கொண்டு பல சாதனைகளைப் படைக்க வேண்டும். பிரதமர், மதத்தைத் தூக்கிப்போட்டாலும்கூட மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.”

“ரஜினியின் அரசியல் என்ட்ரி?”

“அவரோட சில கொள்கைகளுக்கு நான் எதிரா நின்றேன். ஒரு நடிகராக, ஒரு மனிதராக மிகப்பெரிய என்டர்டெய்னர் அவர். எம்.ஜி.ஆர்., இளையராஜாவின் பங்களிப்புகள் தமிழ் சினிமாவுக்குப் பெருசு. அதே மாதிரி, ரஜினிகாந்தின் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. மிகச்சிறந்த மனிதரான அவர், ஏன் அரசியலுக்கு வரக் கூடாது? நிச்சயம் வரலாம். எந்தக் கட்சிப் பின்னணியும் இல்லாத சுதந்திரமான மனிதர் ரஜினி. அவர்கிட்ட மக்களோட பிரச்னைகளை ஈஸியா புரியவைக்கலாம். அவர் அரசியலுக்கு வர்றதலைக் கட்டாயம் வரவேற்கிறேன்.”

veluprabhakaran.01_11218

“`தமிழரைத் தமிழர்தான் ஆளவேண்டும்’னு சீமான் சொல்றார், பாரதிராஜா சொல்றார்…”

“உண்மைதான், அதுக்கு தமிழன் தகுதியானவனா மாறணும். ஏற்கெனவே தமிழர் கையில ஆட்சியை மக்கள் கொடுத்திருக்காங்க, கொடுக்கத் தயாராவும் இருக்காங்க. மறுபடியும் இப்படியே பேசிக்கிட்டிருக்கிறது வளர்ச்சியா இருக்காது. ஏன்னா, சீக்கிரமே உலகத்துல மதம், சாதி, இனம் எல்லாம் நொறுங்கிப்போய் வேற மாதிரி உருமாறும் காலகட்டத்துல இருக்கோம். தவிர, `யாதும் ஊரே யாவரும் கேளிர்’னு சொன்னதே தமிழர்தானே? தமிழ்நாட்டுல வாழ்ற, தமிழை நேசிக்கிற எல்லோருமே தமிழர்கள்தான். அதுல யார் பாப்புலாரிட்டியா வர்றாங்களோ, அவங்களைப் பலப்படுத்துறதுதான் இப்போதைக்கு மக்களைக் காக்குற சிகிச்சையா இருக்கும், மக்கள் நல்வாழ்வுக்கும் அதுதான் வழி.”

“பெரியாரைத் தீவிரமாகப் படித்தவர் என்ற முறையில, அவரோட கருத்துகளில் எது இப்போது தேவையில்லைனு நினைக்கிறீங்க?”

“பார்ப்பனர்களை எதிர்ப்பது. பெரியார் அந்தக் காலத்துல எதிர்த்தது மிகச்சரியான இலக்கு. ஆனா, அந்த இலக்கு முடிவுபெறலை; பலிக்கலை. 1,600 வருஷங்களுக்கு முன்னாடியே ஒருவர்  கடவுளை எதிர்த்தார்; பிரசாரம் பண்ணார்; கோயில்களை உடைத்தார். நவீன காலத்துல இருக்கிற நாம அதைச் செஞ்சிருக்கணும். நம்மகிட்ட பேப்பர், ரேடியோ, டிவி இருந்தது. தவிர, இந்தச் சமூகமே இப்போ அவர்களால்தான் ஆளப்படுது. நான் மோடிக்கு ஆதரவான சில நிலைப்பாடுகளைச் சொல்லும்போது, `உங்களை பெரியாரிஸ்ட்னு நினைச்சேன். ஹிந்துத்வாவுக்கு விலைபோறீங்க’னு சில நண்பர்கள் சொன்னாங்க. அவர் பெரியாரிஸ்ட்தான். ஆனா அவரோட தம்பி சபரிமலைக்குப் போறார், மனைவி பொட்டு வெச்சுக்கிறாங்க. அப்படிப் பார்க்கும்போது, நம்மளைச் சுற்றியே ஹிந்துத்வா இருக்கு, மனைவி, உறவுகள் வழியாக நாம் ஹிந்துத்வாவோட உறவுலதானே இருக்கோம்?

அதனால, அரசாங்கம் ஹிந்துத்வாவா இருக்கும்போது, நாம நட்பா இருந்து பல விஷயங்களைச் சொல்லணும். பார்ப்பன ஆதிக்கம் பல இடங்கள்ல இருக்கு. நாமதான் தனியா நிற்கிறோம். பெரும்பாலானவர்கள் அவர்களைச் சார்ந்துதான் இருக்காங்க. அவர்கள்தான் எல்லோரையும் ஆள்கிறார்கள்; எல்லா இடங்களிலும் ஊடுறுவி இருக்கிறார்கள். அவங்களோடுதான் நாம வாழ்ந்துக்கிட்டும் இருக்கோம். அதனால, மாற்றத்தை நட்போடு சொல்லும்போது கேட்பாங்க. எல்லா ஆரியர்களும் நவீனமானவர்கள். அதனால, நிச்சயம் நவீனத்தைப் பெரும்பாலான பார்ப்பனர்கள் ஆதரிப்பார்கள். ஆனால், அவங்ககிட்ட நாம வெறுப்போடு, விரோதத்தோடு இருந்தா மாற்றம் நடக்காது. அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை நாம இப்போ காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன்.

Velu_prabhakaran.04_11111

காலம் மறந்துபோன விஷயங்களை இன்னிக்கும் இழுத்துக்கொண்டு மக்களிடம் திணிக்கக் கூடாது. 2,000 வருஷங்களாகப் படித்தவர்கள் அவர்கள். அவர்களைப் பகைத்துக்கொண்டு நாம வேலை செய்ய முடியாது. அதே சமயம், `இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளோடு நீங்க இருக்கலாமா? அதுக்குத் தலைமை தாங்கலாமா? நாம எல்லாரும் ஒண்ணுதானே… நாளைக்கு வர்ற தலைமுறை, நாம பின்பற்றின மூடநம்பிக்கைகளைக் கண்டுபிடிச்சிடுவாங்க. அப்போ, `இத்தனை வருஷங்களா இந்தச் சமூகத்துக்கு மூடநம்பிக்கைகளைப் புகுத்திக்கிட்டிருந்திருக்கீங்க’னு குற்றம் சுத்துவாங்க. அந்தக் குற்றத்துல இருந்து நீங்க தப்பிக்கணும்னா, நீங்கதான் தலைமையேற்று மூடநம்பிக்கைகளுக்கு எதிரா களமிறங்கணும்’னு நட்போடு, உரிமையோடு, தோழமையோடு, உறவுமுறையோடு சொல்லி அவர்களை அணுகவேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கு.”

“அடுத்தது?”

Comments

comments