டார்ஜிலிங்கில் இன்று (சனிக்கிழமை) நடந்த வன்முறையில் போலீஸ்காரர் ஒருவர் பலியாகினார். பலர் காயமடைந்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் வங்க மொழி திணிப்பை எதிர்த்தும், கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தியும் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) அமைப்பு கடந்த 12-ம் தேதி முதல் காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் டார்ஜிலிங்கில் இன்று கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா செயற்பாட்டாளர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார். பலியான நபர் இந்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கிரண் தமாங் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் தனது கட்சியைச் சேர்ந்த இரண்டு தொண்டர்கள் பலியானதாக கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பின் தலைவர் பிமல் குரூங் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டை, போலீஸ் ஏடிஜிபி அனுஜ் சர்மா திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், ஜிஜேஎம் அமைப்பினரே துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும் கூறினார்.

டார்ஜிலிங்க் நிலவரம் தொடர்பாக மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பின் அங்கு வன்முறை வெடித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் சகஜ நிலை திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில அரசுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments