ttalk

கோடை காலத்தில் இந்த பூமி மட்டும் வறண்டு போகவில்லை. தமிழ்த் திரையுலகமும் வறண்டுதான் போய்விட்டது. ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளிவந்த பாகுபலி 2 படம் மட்டுமே மே மாதத்திலும் தாக்குப் பிடித்து ஜுன் மாதத்திலும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆனால், மே மாதத்தில் வெளிவந்த 18 திரைப்படங்களுமே முத்திரை பதிக்கத் தவறிவிட்டன. ஒரு படம் கூட சராசரிக்கும் மேல் என்ற நிலையைக் கடக்கவேயில்லை. சிறிய படங்கள் என்று சொல்லிக் கொண்டு எந்த திட்டமிடலும் இல்லாமல் படங்கள் வெளிவந்து படங்களைத் தயாரித்தவர்கள் நஷ்டமடைந்ததோடு, படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களின் ரசனைகளையும் சேர்த்து கெடுத்து விடுகிறார்கள். என்றைக்குத்தான் இதற்கு விடிவு காலம் வருமோ…?.

பாகுபலி 2 படத்தின் தாக்கம் மே மாத முதல் வாரத்தில் இருந்ததையும் மீறி மே 5ம் தேதி “ஆரம்பமே அட்டகாசம், எங்க அம்மா ராணி, விளையாட வா” ஆகிய படங்கள் வெளிவந்தன. ஓரிரு நாட்களைக் கூடத் தாங்க முடியாமல் வந்த வேகத்தில் சென்று விட்டன இந்தப் படங்கள்.

மே 12ம் தேதி “லென்ஸ், மங்களாபுரம், மர்மக்காடு, சரவணன் இருக்க பயமேன், திறப்பு விழா, எய்தவன்” ஆகிய படங்கள் வெளிவந்தன. “காக்கா முட்டை, விசாரணை” போன்று லென்ஸ் படமும் பெயரையும், புகழையும் வாங்கித் தரும் என அந்தப் படத்தை வாங்கி வெளியிட்டார் இயக்குனர் வெற்றி மாறன். ஆனால், ஒரு குறும்படத்தைப் பார்த்த எஃபெக்டைக் கொடுத்த லென்ஸ் வெற்றிமாறனின் எண்ணத்தை உடைத்துவிட்டது.

சரவணன் இருக்க பயமேன் போன்ற மொக்கைப் படங்கள் வெற்றி பெற்றன என்று படத்தின் தயாரிப்பாளரே அறிவித்து விழாவையும் நடத்தியதை என்னவென்று சொல்வது. யாரும் வசூல் விவரத்தைக் கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் இப்படி நடத்தப்படும் விழாக்களுக்கு முதலில் தடை விதிக்க வேண்டும்.

எய்தவன் படம் நல்ல கதைக் களத்தைக் கொண்ட படம். ஆனால், சரியாக குறி பார்த்து வீசப்படாததால் இலக்கை சரியாகத் தாக்காமல் போய்விட்டது. படம் எடுப்பதற்கு முன்பு இன்னும் திரைக்கதையில் பட்டை தீட்ட வேண்டும் என்று இயக்குனர்கள் நினைக்க வேண்டும். அன்றைய தேதியில் வெளிவந்த மற்ற படங்கள் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டன.

மே 19ம் தேதி இணையதளம், இந்திர கோபை, காதல் கதை, கேக்கிறான் மேய்க்கிறான், சங்கிலி புங்கிலி கதவ தொற, வீர வம்சம்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் சங்கிலி புங்கிலி கதவ தொற படம் வெற்றி பெற்றுவிட்டது என அவர்களே சக்சஸ் மீட் வைத்து கொண்டாடினார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட தமிழ் சினிமா கலாச்சாரப்படி பொய்யான சக்சஸ் மீட் கொண்டாடியது ஆச்சரியமான ஒன்று. மற்ற படங்கள் வழக்கம் போல பட எண்ணிக்கையைக் கூட்டிய படங்கள் மட்டுமே.

மே 26ம் தேதி “மதிப்பெண், பிருந்தாவனம், தொண்டன்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இயக்குனர் ராதா மோகன் உப்புக்கருவாடு படத் தோல்விக்குப் பிறகு இயக்கி வெளிவந்த படம் பிருந்தாவனம். அவரது பாணியிலேயே இந்தப் படத்தைக் கொடுத்திருந்தார். சமுத்திரக்கனி வரவர கருத்துக்கனியாகவே மாறிவிட்டார் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் படம்தான் தொண்டன். இந்த இரண்டு படங்களும் சுமாரான வரவேற்பைப் பெற்றதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

மே மாதத்தில் வெளிவந்த 18 படங்களில் சராசரிக்கும் அதிகமான வெற்றி என்று ஒரு படம் கூட இல்லை. சராசரிக்கு மிகவும் கீழாகத்தான் ஓரிரு படங்கள் வெற்றி பெற்றன. கோடைக் கால வறட்சி, தமிழ் சினிமாவில் மே மாதத்துடன் முடிவடைந்தால் நல்லது. அது மேலும் தொடர்ந்தால் என்ன திரையுலகம் என்ன ஆவது… நல்ல படங்களைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள் இயக்குனர்களே… இல்லை என்றால் பாகுபலி 2 போன்ற பொய்யான தமிழ்ப் படங்களால் தமிழ் சினிமா பாதிப்படைவதைத் தவிர்க்க முடியாது.

மே மாதம் வெளியான படங்கள்…

மே 5 : ஆரம்பமே அட்டகாசம், எங்க அம்மா ராணி, விளையாட வா

மே 12 : லென்ஸ், மங்களாபுரம், மர்மக் காடு, சரவணன் இருக்க பயமேன், திறப்பு விழா, எய்தவன்

மே 19 : இணையதளம், இந்திர கோபை, காதல் கதை, கேக்கிறான் மேய்க்கிறான், சங்கிலி புங்கிலி கதவ தொற, வீர வம்சம்

மே 26 : பிருந்தாவனம், மதிப்பெண், தொண்டன்

 

Comments

comments